வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

அது சரியாக, மதன் அவன் தந்தையுடன் போராடிக் கொண்டிருந்த தருணம்!

கொஞ்ச சொத்தேனும் தனக்காக வைத்துக் கொள்ள, நேரடியாகப் போராடி, மிரட்டி, பின் கெஞ்சி, எதுவும் வேலைக்காகாமல், பின் தன் மனைவியை விட்டு அழ வைத்து, செண்டிமெண்ட்டலாக ஏதேனும் வாங்க எல்லா வழிகளையும் அவர் முயற்சி செய்த நேரம்.

அந்த சில்லறைத்தன முயற்சிகளைக் கண்டு கடுப்பான மதன், வீட்டிற்கு அதிகம் செல்லாமல், தெரியாதவர்களை உள்ளே விடாமல், தன் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில், லாவண்யா என்று சொன்னதை, அவன் செக்ரட்டரி சரண்யா என்று எடுத்துக் கொள்ள, மதன் அதை, தன் சித்தியின் முயற்சி என்று எடுத்துக் கொண்டான்.

அன்று, லாவண்யாவால், மதனின் அந்தப் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை. அவமானம் தாங்காமல், உடனே அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

என்னதான் மனம், உறுதியாக தன் மணாளனை நம்பினாலும், குழப்பத்திலும், நடக்கும் முயற்சிகளாலும், ஏற்கனவே மதனின் அக்காவின் பேச்சாலும், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த லாவண்யாவிற்கு, இது பேரிடியாய் அமைந்தது.

அதே சமயம், இப்பொழுதும் அவள் நினைத்து வருத்தப்படும் ஒன்று, அவ்வளவு தூரம் சென்றவள், அவன் பேச்சைக் கேட்டவுடன், கோபமாக, ஏன் அவனது அறைக்குள் நுழையவில்லை என்பதுதான்!

குறைந்த பட்சம், அவனை திட்டவாவது உள்ளே நுழைந்திருந்தால்…. நிலையே வேறு!

அவன் பேச்சிலேயே மனம் உடைந்து, குழப்பத்தில் வெளியே வந்தவளை, அவளது அப்பாவே அழைத்து, நீ கல்யாணம் பண்ணிக்கல்லாம் வேணாம். இப்ப ஒரு பூஜைக்காக, குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் வந்துட்டு போ என்று அழைக்க, அவள் கோயிலுக்குச் சென்று, பூஜைக்கு அமர்ந்து, அமைதி தேடி, கண் மூடி, சாமி கும்பிடும் தருணத்தில், அவள் கழுத்தில் தாலி கட்டப்பட்டது.

இந்த உலகில், எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல் உணர்ந்த லாவண்யா, வெகுண்டெழுந்து, நேரடியாக போலீசில் கம்ப்ளையிண்ட் செய்து விட்டாள். அவளது இந்த ஆக்ரோஷத்தை அவனது அப்பா மற்றும் சித்தியே எதிர்பார்க்கவில்லை.

இத்தனை நாட்கள் அமைதியாக, எதற்கும் எதிர்த்துப் பேசாதவள், இவ்வளவு கோபம் அடைவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவளை ஏமாற்றி தாலி கட்டியவனுக்கு கடும் பயம் வந்திருந்தது.

ஆனால், அவளுடைய மனதிலோ, இது எல்லாவற்றுக்கும் காரணம் மதன் என்று அவன் மேல் கடும் கோபம் வந்திருந்தது. காதலைச் சொன்னால் மட்டும் போதுமா? காதலியைக் காப்பாற்ற வேண்டாமா?

ஆனால் அவள் யோசிக்காத ஒரு விஷயம்,

தனக்கு மிக நெருக்கமான தன் தோழியிடம் கூட வராத கோபம், மதனின் மேல் ஏன் வருகிறது? இத்தனைக்கும், காதல் சொன்னவனை, வேண்டாம் என்று சொன்னவளே அவள்தானே? அப்படியிருக்கையில், காப்பாற்ற வேண்டிய தேவை அவனுக்கு என்ன இருக்கிறது?

யோசித்திருந்தால் அவளுக்குப் புரிந்திருக்கும்!

காதலை அவள் மறுத்தாலும், எப்பொழுதோ அவள் மதனை காதலிக்க மட்டுமல்ல, உள்ளுக்குள் அவனுடன் வாழவே ஆரம்பித்து விட்டாள் என்பதும், இப்போது அவள் காட்டுவதும் கோபமல்ல, உரிமையுள்ளவனிடம், அவள் காட்டும் வருத்தம், தன் சோகங்களை மறக்க, தன் காதலனிடம் தேடும் அடைக்கலம் என்றும் புரிந்திருக்கும்.

மதனின் அக்காவிடம், அவள் மனசு விட்டு பேசும் போதும், அவன் அக்காவும் அவளைத் திட்டியிருக்கிறாள்.

மதன், உன்னை அப்படி சொல்லுவானா? நீ எப்டிடீ அப்படி நினைச்ச?

எனக்கு மட்டும் ஆசையா என்ன? அவன் அப்படி சொல்ல மாட்டான்னு எனக்கும் தெரியும். ஆனா, அன்னைக்கு நாந்தானே கேட்டேன்?

ஆனா, அதுக்கப்புறமும், அடுத்த நாள், உன் மூலமா ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். அப்டி டக்குன்னு இதை நான் நம்புற ஆளா?