நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 74

என்ன சொல்வது..? இந்தக்கதையை என்னுடைய சிறந்த கதைகளில் ஒன்றாககருதுகிறேன்..!! ரொம்பவே எமோஷனலான, ரொம்பவே ரொமாண்டிக்கான கதை..!! வழக்கமாக.. காதல்கதை என்று முன்னுரையில் நான் சொல்வதே, பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடட்டும் என்பதற்காகத்தான்..!! ஆனால்.. இந்தக்கதையை காதல்க்கதை பிடிக்காதவர்களும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..!! இந்த மாதிரி கதைகளில் டயலாக்ஸ் ஷார்ப்பாக, எதார்த்தமாக, எஃபக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.. இந்தக்கதையிலும் அதற்காக சிரத்தை எடுத்துக் கொண்டேன். படியுங்கள்..!! உங்கள் கருத்துக்களை தவறாமல் சொல்லுங்கள்..!! நன்றி.

(இந்தக்கதைல ஹீரோவும், ஹீரோயினும் இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதை தமிழ்லயே எழுதிருக்கேன்..!! கொஞ்சம் கஷ்டத்தை பாக்காம, அவங்க இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதா கற்பனை பண்ணிக்குங்க..!!)

ஊர்: ந்யூ யார்க், யூ.எஸ்
இடம்: என் ஆபீஸ்
தேதி: செப்டம்பர் 6, 2001

நான் என்னுடைய மேனேஜருக்கு மெயில் டைப் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பின்னால் நிழலாடுவதை உணர்ந்தேன். அது எமிதான் என்பதை பட்டென்று என் மூளை எனக்கு உணர்த்தியது. அவளிடம் இருந்துதான் இப்படி ஒரு இனிய வாசனை கிளம்பும். நான் அவள் வந்ததை கவனியாதது போல, படபடவென்று கீ-போர்டில் எதையோ தட்டினேன். ஒரு ஐந்தாறு வினாடிகள் காத்திருந்த எமி அப்புறம்,

“ம்க்கும்..” என்றாள்.

நான் திரும்பி பார்த்தேன். அப்போதுதான் அவளை கவனிப்பது போல நடித்தேன். முகத்தில் ஒரு போலி மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு,

“ஹாய் எமி.. குட் மார்னிங்..!!” என்றேன்.

“குட் மார்னிங் அசோக்.. காஃபி சாப்பிட போலாமா..?” என்று அவளும் அழகாக புன்னகைத்தாள்.

“சாரி எமி.. யூ கேரி ஆன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..!!”

“என்ன வேலை..?”

“ஒரு மெயில் டைப் பண்ணிட்டு இருக்கேன்..!!”

“எவ்வளவு டைம் ஆகும்..?”

“டென், பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்..!!”

“ஓகே.. வெயிட் பண்ணுறேன்..!!”

சொன்ன எமி, அருகில் கிடந்த சேரை எடுத்துப் போட்டு, அங்கேயே அமர்ந்து கொண்டாள். நேரம் ஆகும் என்று சொன்னால், அவள் சென்று விடுவாள் என்று எதிர்பார்த்த எனக்கு பலத்த ஏமாற்றம். என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் மானிட்டர் மீது பார்வையை வீசினேன். உண்மையில் அந்த மெயிலை டைப் பண்ணி முடித்துவிட்டேன். ‘send’ பட்டனை தட்ட வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவளிடம் டைமாகும் என்று சொன்ன காரணத்தால், எதையோ டைப் செய்து, பின்பு டைப் செய்ததை டெலீட் செய்து கொண்டிருந்தேன்.

என் பெயர் அசோக். தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், எதற்கெடுத்தாலும் அரிவாளை தூக்கும் ஒரு வம்சத்தில் பிறந்தவன். காதுகுத்து பத்திரிகையில் பெயர் போடவில்லை என்பதற்காக, பல கொலைகள் செய்த கதை எல்லாம் என் வம்சத்தில் நிறைய உண்டு. சாதிப்பிரச்சனை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆயுத பூஜை பூசணிக்காய் மாதிரி தலைகள் உருளும். எங்கள் ஊரில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை கூட தாண்டாது.

என்னுடைய வம்சம்தான் அப்படியே ஒழிய, நான் ரொம்ப சாது. பயந்தாங்கொள்ளி என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த அரிவாள், வெட்டு, ரத்தம் எல்லாம் அலர்ஜியான விஷயங்கள். என் ஊரையே எனக்கு பிடிக்காமல் போனது. நன்றாக படிக்க வேண்டும் என்பது மட்டும் மனதில் இருந்தது. அப்பாவிடம் அடம் பிடித்து, சிறு வயதில் இருந்தே வெளியூரில் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன். ஊருக்கே எப்போதாவதுதான் செல்லுவது.

ஐ.டி எஞ்சினீரிங் முடித்தேன். கேம்பசிலேயே நல்ல வேலை கிடைத்தது. சென்னையில் பிரபலமான ஐ.டி நிறுவனம். வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. ஆறு மாதங்கள் முன்புதான், யூ.எஸ்-சுக்கு ஆன்சைட் வந்தேன். ஆக்சுவலாக எனக்கு ஆன்சைட் வர விருப்பமே இல்லை. ஆங்கிலம் தத்தி தத்தித்தான் பேசுவேன். ஆனால் என்னுடைய திறமையை பார்த்து, நான்தான் அந்த வேலைக்கு சரியாக இருப்பேன் என்று சொல்லி என் மேனேஜர் என்னை அனுப்பி வைத்தார்.

புது நாடு.. புது இடம்.. புது மக்கள்.. புது பழக்க வழக்கங்கள்..!! நான் அமெரிக்காவை பார்த்து சற்றே மிரண்டு போயிருந்தேன். என்னைத்தவிர என்னுடைய டீமில் எல்லோருமே அமெரிக்கர்கள். ‘தஸ்.. புஸ்..’ என்று பேசிக்கொண்டு..!! யாரை பார்த்தாலுமே ஒருவித பயம். பட்டென்று ஒரு தாழ்வு மனப்பான்மை மனதுக்குள் புகுந்து கொள்ளும். இது பத்தாதென்று, நான் வந்த அடுத்த நாளே என் ஆபீசில் ஒரு பார்ட்டி. எனக்கும் மெயில் வந்திருந்தது. நானும் மடத்தனமாக சென்று விட்டேன்.