கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

அன்னைக்கு அவனைத்தான் கட்டிக்குவேன்னு என் கிட்ட சண்டை போட்டுட்டு வந்தே; இப்ப கல்யாணமே வேண்டாங்கற; உனக்கும் அந்த பையனுக்கும் நடுவுல எதனா பிரச்சனையா? அப்படி எதாவது இருந்தா மனசை விட்டு சொல்லு, நானும் நீ வந்ததுலேருந்து பாக்கிறேன் உன் மூஞ்சே சரியில்லை, பேருக்கு சிரிக்கிறே?” சுந்தரி அவளை இழுத்து தன் பக்கத்தில் உட்க்கார வைத்தாள்.
“எம்மா, என் கல்யாண கதையை இப்போதைக்கு விட்டுடும்மா. பிளீஸ், சும்மா என்னை போட்டு கொடையாதே; என்னை நீ ஆசையா பாக்க வந்திருக்கே; எனக்கும், உன்னையும் மாமவையும் பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு; கல்யாண ஆசை மொத்தமா என்னை விட்டு போயிடிச்சிம்மா” சொன்னவள் உதடுகள் கோணித் துடிக்க, கலங்கிய கண்களுடன் சடாரென தன் தாயின் மடியில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். சுந்தரி தன் மகளின் அழுகையை கண்டு, தன் அடி வயிறு கலங்க என்னாச்சு என் செல்லத்துக்கு, தன் மனம் துடிக்க, மடியில் கிடந்த மகளின் முதுகை பாசத்துடன் தடவிக்கொடுக்க, சுகன்யாவின் மனதில் ஒரு வாரமாக அடைபட்டு, பனியாக இறுக்கிக்கிடந்த கோபம்; செல்வா, செல்வாவின் தாய், ஜானகி, சாவித்திரி என எல்லோரின் மீதிருந்த அர்த்தமுள்ள, அர்த்தமில்லாத கோபம், தாயின் கை தன் உடலில் பட்டதும், உடைந்து இளகி, சுகன்யா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அழ அழ அவள் மனது லேசாகியது.
“அம்மா, நான் உன் மனசை புண்படுத்திட்டு எவனையும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலேம்மா” லேசாகிய மனதுடன் சுந்தரியின் மடியிலிருந்து எழுந்த சுகன்யா, தன் தாயைப் பார்த்து சிரித்தாள். அவள் மனதும் முகமும் இப்போது தெளிவாக இருந்தன.
“என்னடி சொல்றே நீ, என் மனசை நீ புண்படுத்தறியா? இது என்ன புது கதை?” சுந்தரி தன் மகளை திகைப்புடன் பார்த்தாள்.
“அம்மா, நான் காதலிச்சவன் இருக்கானே அவன் ஒரு கோழை; அவன் என்னை முழு மனசோட இன்னமும் விரும்பறான், என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறான். அதுல எனக்கு சந்தேகம் இல்லை; ஆனா அதை தெளிவா, தீர்க்கமா, நான் தான் அவனுக்கு வேணும்ன்னு அவங்க அம்மா கிட்ட அவனால சொல்ல முடியலை. எனக்காக, என் அன்புக்காக, என் காதலுக்காக மட்டும் அவனால அவங்க குடும்பத்தை உதறிட்டு வரமுடியாதுன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அவன் என் பக்கமும் நிக்க முடியாம, அவங்க அம்மா பக்கத்துலயும் நிக்க முடியாம கிடந்து குழம்பறான்.”
“அவனை அவங்க அம்மா, அந்த அளவுக்கு அவ முந்தானையில கெட்டியா முடிஞ்சு வெச்சிருக்கா; அவங்க அம்மா பண்ண இட்லி வடைகறியை திருட்டுத்தனமா பார்சல் பண்ணியாந்து குடுக்கறான். ஆனா இதை எனக்குத்தான் கொண்டு போறேன்னு அவங்க அம்மா கிட்ட சொல்லத் தைரியமில்லை. அவங்க அம்மாளுக்கு என்னை விட, என் வேலையை விட, உன் புருஷன் யாரு; அதான் என்னைப் பெத்தவன் யாரு? அவன் எங்க இருக்கான்; நம்ம குடும்ப அந்தஸ்து என்ன, எனக்குக்குன்னு சொத்து எதாவது இருக்கா, நம்ம உறவினர்கள் யாரு இதெல்லாம்தான் முக்கியமாப் படுது.”

“இன்னைக்கு செல்வா அவங்க அம்மா பேச்சைத் தட்ட முடியாம, சொத்து சுகத்தோட இருக்கற ஒரு பொண்ணை பாக்க போயிருப்பான்? பாத்துட்டு அவளை இவன் வேணாம்ன்னு சொல்லலாம்; இல்லை அந்த பொண்ணு இவனை வேணாம்ன்னு சொல்லலாம்; ஆனா என்னை அவன் காதலிக்கும் போது, அவன் அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு இன்னொருத்தியை பாக்கப் போறது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு; அவங்க அம்மா கிட்ட அவன் மாட்டேன்னு சொல்லியிருக்கணும். நான் வேற எந்த பையனையாவது பாக்க சம்மதிச்சா, இல்லை சும்மா நட்பா பழகினா இவன் பொறுத்துக்குவானா? இதுதான் என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சி. அவனை சுத்தி வளைக்காம நான் கேட்டுட்டேன். நான் வேணுமா, இல்லை அவங்க அம்மா சொல்ற பொண்ணு வேணுமான்னு; அவனால தெளிவா இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அதனாலதான் நீ வேண்டாம் போடான்னு வந்துட்டேன்.”
“காலையில பத்து மணிக்குத்தான் நான் அவன் கிட்ட தீர்த்து சொல்லிட்டு வந்தேன்; என் அப்பனை, என்னால தேடிக்கொண்டாற முடியாது; எனக்கு இருக்கறது ரெண்டு பேருதான், ஒண்ணு என்னைப் பெத்தவ, இன்னொருத்தர் என் மாமா, இந்த உலகத்துல இவங்கதான் எனக்கு எல்லாமே; உன்னை மாதிரி ஒரு வழா வழா கொழ கொழாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, நீ உங்க அம்மா மடியிலேயே கிட, இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீ என்னைப் பாக்கவோ, பேசவோ வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” சொல்லியவள் எழுந்து ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை பிரிஜ்ஜிலிருந்து எடுத்துக்குடித்தாள். தன் முகத்தை ஈரக்கையால் அழுந்த துடைத்துக் கொண்டாள்.
“சொல்லுங்க மாமா, நான் செய்தது தப்பா?” ரகுவின் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள்.
“அடிப்பாவி மவளே, அவனை என்னாடி கேக்கிற; கல்யாணமே பண்ணிக்காத கட்டை அவன்; அவனுக்கு என்னாடி தெரியும் ஒரு பொம்பளை மனசு என்னான்னு; எனக்கும் உனக்கும் இனி சம்பந்தம் இல்லேன்னு அந்த பையன் கிட்ட சொன்னதா ரொம்ப சாதாரணமா என் கிட்ட சொல்றே; அவனைப் பத்தி உன் ஆபீசுல விசாரிச்சப்ப உன்னைப்பத்தியும் தாண்டி சொன்னாங்க; அவன் கூட மோட்டார் சைக்கிள்ள, தலை நெறைய பூவை வெச்சுகிட்டு கோவில் கோவிலா சுத்தினியாமே, ஒரு ஹோட்டல் விடாம தினம் தினம் அவன் கூட உக்காந்து சாப்பிட்டியாமே; இப்படியெல்லாம் இவ்வளவு நாளா அவன் கூட ஆசையா பேசிப்பழகிட்டு, உண்மையா அவனை கல்யாணம் பண்ணிக்கற எண்ணத்தை மனசுல வளத்துக்கிட்டு, அவனை சட்டுன்னு மறக்கமுடியுமாடி உன்னால?
“ நீ வாயால சொல்லலாம் அவன் சம்பந்தத்தை வெட்டிவிட்டுட்டேன்னு; உன் கண்ணு சொல்லுதுடி நீ அவனை உதறிட்டு வரலேன்னு; உன் மூஞ்சி சொல்லுதுடி, அவன் அம்மா மேல இருக்கற கோபத்துல அவன் கிட்ட கன்னா பின்னான்னு கத்திட்டு வந்துட்டேமேன்னு; கத்தறதை கத்திட்டு வந்து என் மடியில படுத்துகிட்டு நீ அழுவற இப்ப; இப்ப புரியுதுடி நீ ஏன் டில்லிக்கு அவசரமா அவசரமா ஓடறேன்னு; எத்தனை நாளைக்குடி நீ ஓடுவே; எங்கெங்க ஓடுவேடி? உன்னை நீயே ஏமாத்திக்காதடி? நானும் ஒரு பொம்பளைடி; நானும் அந்த காலத்துல எங்கம்மா பேச்சை கேக்காமா உங்கப்பாவை காதலிச்சவதாண்டி”
“கோபத்துல வாயை விட்டு நாம இப்படி அவன் கிட்ட கறாரா எங்கிட்ட பேசவேணாம், பாக்க வேணாம்ன்னு சொல்லிட்டமேன்னு கவுரவம் பாக்காதடி, காதலிக்கற ரெண்டு பேருக்குள்ள, நீ அவனை கோச்சிக்கறதும், அவன் உன்னை கோச்சிக்கறதும் சாதாரணமான விஷயம்டி; கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், கணவன் மனைவிக்குள்ள, தினமும் பத்து கோபம், நூறு சண்டை இது மாதிரி வந்துகிட்டுத்தாண்டி இருக்கும்.”
“உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்; அவனை ஒரு தரம் கூப்பிடுடி; நாங்க அவங்கிட்ட பேசறோம். என் புருஷனைப்பத்தி நான் சொல்றேண்டி அவன் கிட்ட; நாலு எடத்துல விசாரிச்சுட்டுத்தாண்டி வந்திருக்கோம் அந்த பையனைப்பத்தி; அவன் ஒரு நல்ல பையன், அவனுக்கு கெட்டப்பழக்கம் எதுவுமில்லன்னு சொல்றாங்கடி, அந்த பையனோட அப்பா நல்ல மனுசன்னு சொல்றாங்க; உன் மேல எனக்கு எவ்வளவு ஆசை இருக்கோ, நீ நல்ல படியா சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கற மாதிரி, அந்த பொம்பளைக்கும் அவ்வளவு ஆசை தன் புள்ளை மேல இருக்காதா? அவன் நல்லா இருக்கணும்ன்னு அவ நினைக்க மாட்டாளா? நீ ஒரு புள்ளையை பெத்தாதாண்டி இது உனக்குப் புரியும்?” சுந்தரி தெளிவாக உணர்ச்சி வசப்படாமல் பேசினாள்.
“எம்மா அந்த குடிகாரனை அப்பாவைப்பத்தி நான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன். எனக்காக நீ யார் முன்னாடியும் போய் அவமானப்பட வேணாம், கல்யாணத்துல நான் முக்கியமா? இல்ல என் அப்பா யாருங்கறது முக்கியமா?”
“காலம் காலமா இந்த பூமியிலே கேக்கப்படற கேள்விம்மா இது; உங்கப்பா யார்? உன் குலம் என்ன? தேவர்களோட குரு பிரகஸ்பதியோட பிள்ளை, பாடம் படிக்கப்போனப்ப, சுக்ராச்சாரியார் அவன் கிட்ட கேட்ட கேள்விம்மா இது; அர்ஜுனன் கர்ணன் கூட சண்டைப்போட போனப்ப கர்ணன் கிட்ட கேக்கபட்ட கேள்விம்மா இது. பின்னாடி பரசுராமர்கிட்ட பாடம் படிக்கப்போன அதே கர்ணன் கிட்ட திரும்ப திரும்ப கேக்கப்பட்ட கேள்விம்மா இது. சண்டை போடறதுக்கு, பாடம் படிக்கறதுக்கே இந்த கேள்வின்னா, முகம் தெரியாத ரெண்டு பேர் ஒண்ணா சேர்ந்து வாழப்போறப்ப, உங்கிட்ட சாதரணமா கேட்ட கேள்விக்காக நீ ஏன் வருத்தப்படறே?” உங்கம்மா உன் அப்பா கிட்ட பட்ட கஷ்டத்தை நீ பாத்துகிட்டு இருந்தே; உன் அம்மா மேல இருக்கற பாசத்துனால, உங்கிட்ட அவங்க கேட்ட இந்த கேள்விக்காக நீ கோபப்படறே; வாஸ்தவம்தான். ஆனால் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா? அந்த பையனோட அப்பா யாரு, அவங்க குடும்பம் எப்படின்னு நானும் தானே விசாரிச்சேன். நான் ஜாடை மாடையா கேட்டேன்; அவன் உன்னை நேரா கேட்டுட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்” இதுவரை அமைதியாக இருந்த ரகு பேசினார்.
“மாமா, அப்ப நான் அவனை வேண்டாம்ன்னு சொன்னது தப்பு ஆனா அவன் வேற ஒருத்தியை பொண்ணு பாக்கப் போறது சரின்னு சொல்றீங்களா?” அவள் வெடித்தாள்.
“சுகா, சரி தப்புன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லம்மா; இது தான் சரி, இது தான் தப்புன்னு எதையும் அறுதியிட்டு உறுதியா சொல்ல முடியாதும்மா; அந்தந்த நேரத்துல, அந்தந்த சூழ்நிலையில ஒரு விஷயத்தை பாக்கறவன் பார்வையிலேயும், பாக்கறவன் வயசுலயும், அவன் இருக்கற சமூகத்தையும் பொறுத்துதான் இது இருக்கு.” அம்மாவையும் பெண்ணையையும் தனியாக விட்டு விட்டு, ரகு மெதுவாக எழுந்து வெளியில் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார்.