கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா.

ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா அவ ரூமுக்கு ஒழுங்கா போய் சேர்ந்திருப்பாளா ??

சுகன்யா டில்லி போவதற்காக ரயில்வே டிக்கட் ரிசர்வ் செய்து கொண்டு, வீட்டினுள் நுழைந்து மாடிப்படியில் ஏறிய போது, அவள் அறையிலிருந்து சாம்பார் கொதிக்கும் வாசமும், எண்ணையில் வெங்காயமும், பச்சை காய் வதங்கும் நெடியும் காற்றில் மிதந்து வந்து அவள் மூக்கைத் துளைத்தன. ஊரிலிருந்து மாமா ரகு வந்திருப்பாரோ, அவர் தான் எப்பவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பார்; வந்தவுடேனே சமைக்கவும் ஆரம்பித்து விட்டாரா? அவள் ரெண்டு ரெண்டு படிகளாக தாவி ஏறினாள். உள்ளே நுழைந்ததும், ஒரு நிமிடம் திகைத்தாள், அவள் மாமா ரகு கட்டிலில் படுத்திருக்க, சுந்தரி தன் புடவையை முழங்கால் வரை ஏற்றி இடுப்பில் செருகிக்கொண்டு, மும்முரமாக கத்திரிக்காயை வதக்கிக் கொண்டிருந்தாள்.
“எப்பம்மா வந்தே” சுகன்யா வாசல் படியிலிருந்து தாவி தன் தாயை அவள் முதுகின் பின்னாலிருந்து கட்டிக்கொண்டவள், ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“காஸ் எரியுது, எண்ணை சட்டிக்கு முன்னாடி நின்னு வேலை செய்றேன், பின்னாடி வந்து கட்டிபுடிச்சு என்னை உலுக்கறே? நல்லாயிருக்குடி நீ பண்றது; இன்னும் நீ சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கறே?”

“நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆச்சுடி, ஆபீசுலேருந்தா வர்றே? இன்னைக்கு லீவு இல்லயா உனக்கு?” எரியும் அடுப்பை அணைத்துவிட்டு தலை முதல் கால் வரை தன் பெண்ணை ஒரு முறை நோட்டம் விட்டாள். பரவாயில்லை, போன மாசம் பாத்ததுக்கு பழுதில்லை, அப்படியே தான் இருக்கா; பெத்த மனசு சந்தோஷப்பட்டது, ஆனா மூஞ்சி மட்டும் ஏன் வாடி இருக்கு இவளுக்கு, கண்ணெல்லாம் வீங்கி இருக்கற மாதிரி தோணுது; அழுது கிழுது இருப்பாளோ; எதுக்காக அழணும் என் பொண்ணு?
“சனிக்கிழமை லீவுதாம்மா… கொஞ்சம் பெண்டிங் வேலை இருந்தது முடிக்கலாம்ன்னு போனேன்; அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, பதினைஞ்சாம் தேதி, நான் டில்லிக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டேன். அங்க ஒரு மாசம் எனக்கு ட்ரெய்னிங் போட்டிருக்காங்க; போன் பண்ணி சொல்லணும்ன்னு நினைச்சுக்கிட்டே வர்றேன் நீங்க ரெண்டு பேரும் நேர்லேயே இங்க வந்துட்டீங்க.” ரகுவினருகில் உட்கார்ந்து அவன் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டாள்.
“நல்லாயிருக்கீங்களா மாமா?” நெருங்கிய சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சி அவள் முகத்தில் அரும்பியது. ரகு பதில் சொல்லாமல் அவள் தலையை பாசத்துடன் வருடி தன் தோளில் சாய்த்துக்கொண்டார்.
“சுகு, சாமானெல்லாம் கழுவி கவுத்து வெச்சிருந்தது. நீ காலையில ஒண்ணும் சமைக்கலயா?”
“இல்லைம்மா, எனக்கு இப்ப பேய் பசி; நான் முதல்ல ரெண்டு வாய் சாப்பிடணும், நாமெல்லாம் ஒண்ணா சாப்பிடலாம், ரெண்டு நிமிஷத்துல வர்றேன், நீ தட்டை வைம்மா எல்லாருக்கும்” எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றாள். சுகன்யா நடந்த போது அவள் இடுப்பு அசைந்த விதத்தைப் பார்த்த சுந்தரி மனதில் நினைத்துக்கொண்டாள் … யார் கண்ணும் பட்டுடக்கூடாது … ம்ம்ம் … கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி!
“முருங்கைக்காய் சாம்பாரும் கத்தரிக்காய் பொறியலும் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்மா. உன் கை பக்குவமே தனிதாம்மா.” சுந்தரி மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் தம்பியை பார்த்தாள்.
“என்னம்மா தீடிர்ன்னு ரெண்டு பேருமா வந்திருக்கீங்க” சுகன்யா தட்டிலிருந்த சாதத்தை சாம்பாருடன் குழைத்து பிசைந்து வாயில் போட்டு மென்றவள், தன் முகத்தில் ஆர்வத்துடன் கேட்டாள்.
“செல்வான்னு ஒரு பையன் கூட பழகறேன்; எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு ஊருக்கு வந்தப்ப எங்கிட்ட சொன்னே; நான் விசாரிச்சதுல பையனோட குடும்பம் நல்ல குடும்பம்; பையனுக்கும் கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்லன்னு தெரியுது. அப்பா நடராஜன் தங்கமான மனுஷன்; பையனோட அம்மாவுக்கு மனசுல ஒண்ணும் கிடையாது ஆனா பேசும் போது கொஞ்சம் படபடன்னு பேசுவாங்கன்னு சொன்னாங்க; நாலு பேரு நாலு விதம். வீட்டுலேயே இருக்கற பொம்பளைங்கன்னா கொஞ்சம் முன்ன பின்ன, அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க; அந்த பையனோட தங்கையும் துரு துருன்னு அழகா இருப்பாளாம்; அவளும் அப்பா மாதிரி அமைதின்னுதான் சொல்றாங்க; புதுசா குடும்பத்துல போறவங்கதான் முதல்ல ஒத்து போகணும்.”
“உனக்கு அவனை பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குங்கற; முடிஞ்சா நாளைக்கு அவனை நீ எங்கயாவது வரச்சொல்லு. ஏன் இங்கேயே வரச்சொல்லு; பெரியவங்களை பாக்கறதுக்கு முன்னே அந்த பையனை ஒரு தரம் தனியா பாத்து பேசினா நல்லதுன்னு எனக்கு படுது. உங்க ரெண்டு பேருகிட்டவும் ஒரு தரம் கலந்துகிட்டு அவங்களை நேரடியா போய் பாக்கலாம்ன்னு வந்தேன். அவங்களும் சரின்னா மேல ஆக வேண்டியதை காலா காலத்துல பண்ணலாம்.” உங்கம்மா, என் பொண்ணு சுகன்யா என் கண்ணுலயே நிக்கிறா; அவளைப் பாக்கணும் போல இருக்குன்னா; சரின்னு ரெண்டு பேருமா வந்தோம்.” சுகன்யாவைத் தன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே ரகு நிதானமா சாப்பிட்டவாறு பேசினார்.” சுகன்யாவின் முகம் லேசாக மழை மேகமாக கறுத்தது. இது என்ன வேடிக்கை, காலையிலத்தான் அவனும் வேணாம், அவனோட எந்த சம்பந்தமும் இனி எனக்கு வேணாம்ன்னு தீர்த்து சொல்லிட்டு வந்தேன். மாலையில அவனை கூப்பிட்டு சம்பந்தம் பேசனும்ன்னு இவங்க வந்து நிக்கிறாங்க? நாம ஒண்ணு நினைச்சா, தெய்வம் ஒண்ணு நினைக்குங்கறாங்களே, அது இதுதானா? சுகன்யா மவுனமாக தலைகுனிந்து தட்டிலிருந்த சோற்றை கிளறிக்கொண்டிருந்தாள். அவ்வளவு தூரம் அவனை திட்டிட்டு வந்திருக்கேன். மீனா கிட்ட பேசும் போதும், அவன் உறவையே அறுத்தாச்சுன்னு சொன்னேன்; இப்ப எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு அவனை கூப்பிடுவேன். அவள் மனதுக்குள் மருகினாள்.
“தட்டைப்பாத்து சாப்பிடும்மா? சோத்தை கோழி கிளர்ற மாதிரி கிளறிக் கிட்டிருக்கே? வாயைத்தொறந்து சொன்னாத்தானே தெரியும்; மனசுல நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்கேன்னு? சுந்தரி அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்.
“எனக்கு கல்யாணம் வேணாம் மாமா, கொஞ்ச நாள் போகட்டும் நானே உங்ககிட்ட சொல்றேன் …
“ தட்டை வழித்து கடைசி பிடியை வாயில் போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்தாள் சுகன்யா. சுந்தரியும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்புடன் பார்த்துகொண்டனர்.
“சுகா, இங்க வாடி, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடி கண்ணு, முன்னுக்கு பின்னா பேசாதடா கண்ணு, செல்லம் குடுத்து உன்னை பிடிவாதக்காரியா வளத்துட்டேன்;