கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

“அம்மா…! நீ என்னா உன் புள்ளையை, குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு நெனைச்சிட்டியா?” சம்பத்தின் கருத்தமுகம் குரோதத்தில் மேலும் கருத்தது. சம்பத் கோபத்துடன் தன் தொடையை ஓங்கித் தட்டிக் கொண்டான்.

“என்னடா சொல்றே நீ…? எனக்குப் புரியலைடா…!”திடுக்கிட்டாள் ராணி.

இவ்வளவு நேரம் சுகன்யாவின் அழகால் அலைக்கழிக்கப்பட்டு, அவள் தன்னை கிஞ்சித்தும் மதிக்கவில்லையே என புலம்பிக்கொண்டிருந்த தன் பிள்ளை, தீடீரென சேம் சைட் கோல் ஏன் போட முயலுகிறான் என அவளுக்குப் புரியவில்லை. தன் மகனின் முகத்தையும், அவன் முகத்தில் நிறைந்திருந்த குரோதத்தையும் பார்த்த ராணி ஒரு நிமிடம் பயந்து, இவன் ப்ளான் என்னன்னு புரியலியே, என தன் மனதுக்குள் மருகினாள்.

“அம்மா, எவனோ தொட்ட ஒருத்தியை… நீ எனக்கு கட்டிவெக்கலாம்ன்னு பாக்கறீயே? ஒரு பெத்தவ பண்ற வேலையா இது? இதுக்கு மேல சுகன்யாவே வந்து, என்னைக் கட்டிக்க அவ தயார்ன்னு சொன்னாலும், அவளைக் கட்டிக்க நான் ரெடியில்லை; நான் என்ன மானங்கெட்ட மடையனா…?” சம்பத்தின் கண்கள் கோவைப் பழங்களாக சிவந்திருந்தன.

“சம்பத்து … நீ பேசறதுல ஞாயமில்லேடா..”, ராணி முனகினாள்.

“சுகன்யாவுக்கு தாலி கட்டிட்டு, காலம் பூரா அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவளைப் தொடும்போதெல்லாம், அவளை புருஷனா நான் கொஞ்சும் போதெல்லாம், என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி எவனையோ காதலிச்சவ, காதலிச்சவனை கட்டிப்புடிச்சி, கொஞ்சி குலாவினவங்கற நெனைப்புலேயே, வாழ்க்கைப் பூரா, இந்த விஷத்தை நான் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, மருகி மருகி மனசுக்குள்ளவே சாகணுமா?”

“டேய்… நீ ஒரு பொண்ணை அவமானப்படுத்தறடா…” தன் மகன் ஒரு ஆண் ஆதிக்கத்தின் மொத்த உருவம், குறியீடு, அடையாளம் … என ராணியின் மனது ஓலமிட்டது.

“ஏற்கனவே ஒருத்தன் கூட நெருக்கமா பழகிக்கிட்டு இருக்கற சுகன்யாவை, அவனையே கல்யாணம் பண்ணிக்க இருக்கற சுகன்யா கூட, உன் புள்ளை, நிம்மதியா ஒன்னாப் படுத்து தூங்க முடியும்ன்னு நீ நெனக்கறியாம்மா?

“அப்ப ஏண்டா அந்த தமிழ்செல்வன் கிட்ட சுகன்யாவை நான் எட்டு வருஷமா காதலிக்கறேன்னு கதைவுட்டே?” ராணியால் பொறுக்கமுடியாமல் பதறினாள்.

“வெரி சிம்பிள்… என்னை மதிக்காதவளை நான் பழிவாங்க நெனைச்சேன்… அவளை நான் கட்டிக்க நெனக்கலை…. எனக்கு அவ கொஞ்ச நேரமாவது அழுவணும்.. அவ்வளவுதான்..”

“நீ அவளை கட்டிக்க ஆசைப்படறேன்னு நான் நெனைச்சேண்டா” ராணிக்கு தன் மகனின் உள்ளம் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.

“ஆனது ஆச்சு, போனது போச்சுன்னு, அவளைக் கட்டிக்கிட்டு, சந்தோஷமா குடும்பம் நடத்தற அளவுக்கு, பரந்தமனசு எனக்கு இல்லே; அவ்வள பெரிய மனுஷன் நான் இல்லேம்மா….”

“டேய்… சம்பத்து.. இது தப்புடா கண்ணு… வேணாம்டா இந்த விளையாட்டு…” இப்போது ராணி தன் மகனிடம் புலம்ப ஆரம்பித்தாள்.

ராணிக்கு தன் கணவன் தன் மகனைப் பற்றி சொன்னது சரியாப் போச்சே என்ற பயம் சட்டென மனதுக்குள் எழுந்தது. நான் விஷயம் புரியாம இவனை வேறத் தூண்டி விட்டுட்டேன்… சுகன்யா வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகறது? இந்த விஷயம் ரகுராமனுக்கு தெரிஞ்சா, வெனையாகிடுமே; ஆன்னா ஊன்னா, அருவாளை தூக்கற மொரடனாச்சே அவன்; சிவதாணு மாமாவுக்கும், நமக்கும் இருக்கற கொஞ்ச நஞ்ச ஒறவும் இவனால வுட்டுப் போயிடுமே? இந்த விளையாட்டு எங்கப் போய் முடியும்ன்னு தெரியலியே? அவள் மனது அரற்றியது.

“அம்மா… நான் ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள மனுஷன், எவனோ தொட்டு வுட்டுட்ட பொண்ணை கட்டிக்கிட்டு, நான் ஒரு பெரிய தியாகின்னு சொல்லி, யாருகிட்டவும் மெடல் வாங்க எனக்கு விருப்பமில்லே…” சம்பத்தின் முகத்தில் கேலியும், கிண்டலும், விளையாடிக் கொண்டிருந்தன.

சம்பத்தின் எகத்தாளமான வார்த்தைகளையும், வெறி சிரிப்பையும் பார்த்த ராணியின் முகம் ஒரே நொடியில் வெளிறிப்போனது. தன் பிள்ளை சம்பத்தின் வக்கிரமான மனசும், அவன் தன் மனதுக்குள் ஒரு பெண்ணின் மேல், ஒட்டு மொத்த பெண் இனத்தின் மேல் வைத்திருக்கும் உண்மையான மதிப்பும், மரியாதையும் தெரிய, தன் செல்ல மகனின் உண்மையான முகம், மெல்ல மெல்ல அவளுக்குப் புரிய, அவள் முகத்தின் சிரிப்பு சட்டென உறைந்து, பேச்சு மூச்சில்லாமல் உட்க்கார்ந்திருந்தாள்.

தன் கணவர் எங்கே? அவர் தன் உதவிக்கு வரமாட்டாரா? அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது.
தாய்க்கும் பிள்ளைக்கும் நடுவில் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளை, இதுவரை மவுனமாக, தலையெழுத்தேயென்று, தன் தலையில் இரு கைகளையும் வைத்தவாறு, வெரண்டாவில் உட்க்கார்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்த நல்லசிவம், மெதுவாக எழுந்தார். ஹாலுக்குள் நுழைந்து தன் மனைவி ராணியின் அருகில் வந்து நின்றார்.

“எம்மாடி, ராணி… இவ்வளவு நேரமா, உன் ஆசைப் புள்ளைக்கூட சேர்ந்து சந்தோஷமா, ஒரு பொண்ணு வாழ்க்கையில, தேவையில்லாம அவன் விஷத்தை ஊத்திட்டு வந்த கதையை, பெருமையாச் சொல்லச் சொல்ல, நீ சிரிச்சு சிரிச்சுக் கேட்டு சந்தோஷப்பட்டியே, இப்ப அவன்
“நான் என்ன மானங்கெட்ட மடையனான்னு” கேட்ட கேள்விக்கு உங்கிட்ட பதில் எதாவது இருக்கா? இல்லே, இப்பவாவது உன் புள்ளையோட அசல் ரூபம் என்னான்னு உனக்குத் தெரியுதா?”

நல்லசிவத்தின் முகம் சலனமின்றி இருந்தது. ராணி தன் கணவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் பதில் ஏதும் சொல்லாமல், மவுனமாக தன் தலையை குனிந்து கொண்டாள்.

“அப்பா, நான் அவமானப்பட்டதை ஒரு பொருட்டாவே நீங்க நெனைக்கலையா?” மகன் தன் தகப்பனிடம் சீறினான்.

நல்லசிவம் தன் மகனின் கேள்வியை காதிலே வாங்கிக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளாமல் மேலே பேச ஆரம்பித்தார்.

“நான் உன் புள்ளையை மதிக்கலேன்னு சொல்றியே! உன் புள்ளை ஒரு நல்ல குடும்பத்து பொண்ணுக்கு குடுக்கற மதிப்பை பாத்துட்டியா? ஒரு வயசுப் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு வந்ததுமில்லாம அவளைப்பத்தி எப்படியெல்லாம் அவதூறாப் பேசறான்னு பாத்தியா?”