கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

“என்னாது… நீ அவனை ஆசிர்வாதம் பண்ணியா?” ராணி வியப்படைந்தாள்.

“பின்னே என்னா…ம்ம்மா? என் மொறைப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறவனை, நான் ஆசீர்வாதம் பண்ண வாணாமா? நானும்
“ததாஸ்து”ன்னு அவனை மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டேன்!”

“சம்பத்து… விஷயத்துக்கு வாடா…கண்ணு… எப்படிடா நீ அவனை ஆசீர்வாதம் பண்ணே? தாயின் குரலில் பெருமிதம் ஒலித்தது.”

“என் மொறைப்பொண்ணு சுகன்யா; என் பேருல இருக்கற பட்டாவை, உன் பேருக்கு மாத்திக்குடுடான்னு எங்கிட்டவே கேக்கறியே.. இது ஞாயமாடான்னேன்?”

“ஹாங்…போட்றா… அப்படி போடுடா…பிச்சிட்டடா… சம்பத்தா … கொக்கான்னேன்…என் பட்டுடா நீ?” தாய் பூரித்துப் போனாள்.

“அப்படியே அசந்து பூட்டான் அவன்…”

“அருவாளை அழுத்தமாத்தான்டா வீசியிருக்கே! ராணியின் முகம் பெருமிதத்தில் மின்னியது.

“மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்துருக்கேம்மா!…

கொளுத்திப்போட்டேன் பாரு ஒரு ஆயிரம் வாலா சரவரிசைப் பட்டாசை… அந்த திமிர் பிடிச்ச சுகன்யா கல்யாணம் நின்னுப் போனாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே! பாத்துக்கிட்டே இரு… மெட்ராஸ்ல்ல்ல வெடி வெடிக்கற சத்தம், கும்பகோணம், சுவாமிமலைன்னு ஊரே அதிரப் போவுது பாரு…” சம்பத் ஆங்கார, ஓங்காரமாக சிரித்தான்.

தப்பு பண்ணியவனை தட்டிக்கேட்க்கவேண்டிய தாயும், தன் பிள்ளையுடன் சேர்ந்து வகை தொகையில்லாமல் சிரித்தாள். தான் சிவந்த சரீரத்துடன் இருந்த போதிலும், தன் மகன் கருப்பாக, தன் கணவனை மாதிரி, பிறந்துவிட்டதில் ராணிக்கும், அவன் பிறந்தவுடன் சிறிதே, மனக்குறைதான்.

தன் ஆசை மகனின் கருப்பு நிறம் ராணியின் மனதுக்குள் ஒரு தழும்பேறிய காயமாக இருந்தது. அந்த காயத்தை சிரித்து சிரித்தே தன் மனதுக்குள்ளாகவே ஆற்றிக்கொண்டிருந்தாள் அவள். ராணியின் பலவீனமான இடம் அது. சம்பத் இந்த இடத்தை, தன் தாயிடம் தனக்கு காரியம் ஆகவேண்டும் என நினைக்கும் பட்சத்தில், மெல்ல தொட்டு வருடி, கிள்ளி, அந்தக் காயத்தின் தணலில் குளிர் காய்ந்து கொள்ளுவான்.

“அப்புறம்…?” ராணி ஏதோ சின்னத்திரை சீரியல் பார்ப்பது போல் ஆர்வமாக இருந்தாள்.

“பாஸ், நான் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறேன்… நீ என்னடான்னா எங்க நடுவுல பூந்து அவளை பிராக்கெட் போட்டா, உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நான் என்னா ஏலக்காய் தட்டிப்போட்டு, பாலை சுண்டக் காய்ச்சி, அவ கையில குடுத்தனுப்புவேனான்னேன்?” தாயும் மகனுமாக சேர்ந்து சிரித்தார்கள்.

“சத்தியமா சொல்றேம்மா… அந்த தமிழ்ச்செல்வன் புசுக்குன்னு சுத்தமா அவிஞ்சிப்பூட்டான். பேச்சு, மூச்சு எல்லாம் அடங்கிப் போச்சு அவனுக்கு… வார்த்தையே வர்லே வாய்லேருந்து…” ஹோவென மீண்டும் சிரித்தான் சம்பத்.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையோட விளையாடிட்டு வந்திருக்கான் புள்ளை… அதை கண்டிக்காம… பெத்தவ, புள்ளை கூட சேர்ந்து சிரிச்சு கும்மாளம் போடறாளே? இது எங்கேயாவது அடுக்குமா? வெளியில் வெராண்டாவில் உட்க்கார்ந்திருந்த நல்லசிவத்தின் வயிறு கலங்கியது. பற்றி எரிந்தது.

“சம்பத்து… நீ ஆட்டத்தை சரியா ஆரம்பிச்சிட்டேடா; மீதி கதையை நான் பாத்துக்கறேன்டா; நான் தாயக்கட்டையை கையில எடுத்தா எப்பவும் மொதல் உருட்டல்ல, தாயம்தாண்டா விழும்; சுகன்யாவை உனக்கு நான் கட்டி வெக்கிறேன். ராணி, மகாபாரதத்தின் பெண் சகுனியாக மாறி, வீம்பாக தன் மகனின் மனசு புரியாமல் கொக்கரித்தாள்.