கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

“…..” ராணி மவுனமாக இருந்தாள்.

“மானம் கெட்டவனுக்கு ஒரு புது டெஃபினிஷன் – அதான்டி
“குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு” உன் புள்ளை உனக்கு புது விளக்கம் குடுத்து இருக்கானே, இதுல உனக்கு சந்தோஷம்தானே? நல்லசிவம் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீறிட்டுக்கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார். சிரித்தவர், பக்கத்திலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்தவர், அவரது கை அவரையும் அறியாமல் அவர் தலையை சென்றடைந்தது.

“ஏம்மா… உன் புருஷனுக்கு இன்னா பைத்தியம் புடிச்சு போச்சா? ஏன் இப்படி சிரிக்கணும்? நான் சொன்னதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?”

சம்பத் வெகுண்டான். நல்லசிவம், அவனுக்குப் பதில் சொல்லாமல், தன் மகனையும், தன் மனைவி ராணியையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தார். தன் தந்தை தன்னிடம் நேராகப் பேசமால், தன்னை குறை சொல்லி, தன் தாயிடம் மட்டுமே பேசுவது அவனுக்கு எரிச்சலையும், கோபத்தையும் கொடுத்தது.

“அப்பா.. எவனோ தொட்ட ஒருத்தியை நீங்க கட்டிக்கிட்டு உங்களால வாழ முடியுமா? உங்க மனசைத் தொட்டு சொல்லுங்கப் பார்ப்போம்?” தன் தகப்பனின் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரியாததால் சம்பத் தன் தகப்பனை வெறுப்புடன் கேட்டான்.

“டேய்.. நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா…” ராணி விரிந்து கிடந்த தன் கேசத்தை கொத்தாக முடிந்தவாறு எழுந்து நின்றாள்.

நல்லசிவத்தின் சிரிப்பின் அர்த்தம் ராணிக்குப் புரிந்தது. தன் கணவன் தன்னை ஏளனம் செய்கிறார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அவள் மனதுக்குள் அவள் கல்யாண வாழ்க்கை ஒரு நொடிக்குள் முழுவதுமாக, ஆரம்பம் முதல் அந்த நொடி வரை, வேகமாக ஓடி நின்றது.

உன் பிள்ளை சம்பத்து உனக்கு ஒரு கதை சொன்னான். அதை கேட்டு நீ மகிழ்ந்துப் போய் நிக்கறே? நீ உன் புள்ளைக்கு, உன் சொந்தக் கதையை சொல்ல தைரியம் இருக்காடின்னு என் புருஷன் என்னைப் பாத்து சிரிக்கறார். எனக்குத் தைரியம் இல்லையே; ராணியின் மனம் உள்ளுக்குள் அழுதது.

டேய் சம்பத்து…, உன் வரையறைப்படிப் பாத்தா, உன் அப்பனே ஒரு மானம் கெட்ட மடையன்தாண்டா; முப்பத்தஞ்சு வருஷமா, எச்சை எலையில சோறு திங்கறவன்தான்; ஆனா இதை யாருகிட்டவும் இன்னைக்கு வரைக்கும் சொல்லாம, கொள்ளாம, மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, மவுனமா இருக்கற பெரிய மனுஷன்தான்னு வாய்விட்டு சொல்ல, உனக்குத் தைரியம் இருக்கான்னு என்னைப் பாத்து சிரிக்கறாரு? என்னால முடியாதே? ராணியின் முகம் சிவந்து, கண்கள் குளமாகியிருந்தன.

நல்லசிவத்தின் பார்வை ராணிக்குத் தெளிவாக அவர் மனதில் இருந்ததை உணர்த்தியது. கல்யாணமே ஆகாத ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணை, எச்சை எலைன்னு சொல்லி சிரிக்கறானே உன் பிள்ளை, அவன் கிட்ட சொல்லுடி; உங்கப்பனே எச்சை எலையில சோறு திங்கறவன்தான்னு…

அடியே ராணி, இதைச் சொல்ல உனக்குத் தைரியம் இருக்கா? இல்லே; உன் புள்ளைக்கு உன் கதையை நான் சொல்லட்டுமா? நல்லசிவத்தின் கண்களில் கேலியும், கிண்டலும், ஏளனமும், ஒன்று சேர்ந்து கூத்தாடிக்கொண்டிருந்தன.

உண்மையைச் சொல்லணும்ன்னா, எனக்குத் தைரியம் இல்லையே; ராணி தன் தலை குனிந்திருக்க, நான் பெத்தப் புள்ளை, என் கதை தெரியாம, என் எதிரிலேயே, என் புருஷனையே மானம் கெட்டவன்னு சொல்லிட்டானே, மனதுக்குள் தன் கதையை யோசித்து யோசித்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். தன் கணவனை கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள். ப்ளீஸ், இப்ப இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, அவள் பார்வை அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

“எதுக்கு இப்ப குடி முழுகிப் போன மாதிரி தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?” ராணி தன் கணவரின் அருகில் சென்று அவர் கையை, அவருடையத் தலையிலிருந்து விலக்கினாள்.

“ராணி நீ தெரிஞ்சே எரியற கொள்ளிக் கட்டையை எடுத்து உன் தலையைச் சொறிஞ்சுக்கறே…! உன் புள்ளைப் பாசம் உன் கண்ணை மறைக்குது! உன் புள்ளை மேல இவ்வளவு மோகம் நீ வெக்காதே! அவனை, அவன் வாழ்க்கையை நீயே கெடுக்காதே! ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில் நீங்க ரெண்டு பேரும் விளையாடாதீங்க. பெண் சாபம் நம்ம குலத்தையே எரிச்சுடும். உன் புள்ளைக்கு நல்லபடியா எடுத்துச் சொல்லி, அந்த தமிழ்செல்வனுக்கு போன் பண்ணி இவன் பண்ணது தப்புன்னு மன்னிப்பு கேக்கச் சொல்லுடி.”

“…”

“யாருகிட்டவும் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் எனக்கில்லே?” சம்பத் அர்த்தமில்லாமல் எகிறினான்.

“நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க. திருதராஷ்ட்ரனும் புத்திர பாசத்துலத்தான் அழிஞ்சான்… தசரதனும் புத்திர மோகத்தாலத்தான் அழிஞ்சான்… நீயும் நானும் இவ்வளவு நாள் ஒண்ணா இருந்ததுக்கு ஒரு காரணம் உன் புள்ளையாலத்தாங்கறது உனக்கு நல்லாத் தெரியும். நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும். தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும். யாராலும் மாத்தவே முடியாத இயற்கையின் முதல் விதி இது.

நீளமாக பேசி முடித்த நல்லசிவம் எழுந்து அமைதியாக வரண்டாவிற்கு வந்தார். சற்று முன் உதறி எறிந்த செருப்பை மாட்டிகொண்டவர், கதைவைத் திறந்து, தன் பின்னால் வந்த ராணியைத் திரும்பிப் பார்க்காமல், குனிந்த தலையுடன் தெருவில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். ராணி தன் கணவனை தடுக்க முடியாமல், அவர் போவதை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதிரவன் சிவந்து பழுத்த ஆரஞ்சாக மாறிவிட்டிருந்தான். மாலை வெயில், செவ்வரளியை அரைத்து வானவீதியில் தெளித்தது போல் ஆகாயம் செப்புத் தகடாக தகதகத்துக் கொண்டிருந்தது. மேகப்புள்ளிகள் நீல வானத்தில் கோலமாக மாறியிருந்தன. மூர்க்கனும் இப்படிப்பட்ட இயற்கையழகில் ஒரு நொடி தன் மனதைப் பறிகொடுத்து நிற்பான்.