கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 28 11

மனைவி, மகனுடன் ஏற்பட்ட விவாதத்தால், அவர்களிடம் கொண்ட கோபத்தால், மனதில் விளைந்த விரக்தியால், நல்லசிவத்தின் களைத்த மனமும், உடலும், வீசிய மேலைக் காற்றின் மெல்லிய குளுமையை உணரமுடியமால், தெருவில் இலக்கில்லாமல், இடிந்த மனதுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

எனக்கு வாய்ச்சவளும் சரி; பொறந்ததும் சரி; ரெண்டுமே ஏறுமாறா இருக்கே! என்னப் புண்ணியம் பண்ணியிருந்தா இப்படி ஒரு புள்ளையை நான் பெத்து இருப்பேன்? பெத்தவளாவது, தான் பெத்தது கழுதையா இருக்கேன்னு, புத்தி சொல்லி திருத்தியிருக்கணும்! எல்லாம் என் தலையெழுத்து!

ம்ம்ம்… புள்ளை பாடற பாட்டுக்கு, என் பொண்டாட்டியும் எதையும் யோசிக்காம ஏன் கும்மி அடிக்கறா? பாசங்கற பேர்ல, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு, எதுக்கெடுத்தாலும் செல்லம் குடுத்து, தன் புள்ளையைத் தீவெட்டித் தடியனா வளத்து, கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்கா!

என் புள்ளை நல்லா படிச்சிருக்கான்… ஏட்டு சுரைக்கா கூட்டுக்கு உதவாதே? நல்ல வேலையில இருக்கான்… கை நெறைய சம்பாதிக்கறான்… ஆனா இதெல்லாம் மட்டும், முழுமையான வாழ்க்கைக்கு போதுமா? சம்பத் யாருக்கும் மரியாதை குடுக்கத் தெரியாம, டிஸிப்ளீனே இல்லாம, வளந்து இருக்கானே? பெரியவங்கக்கிட்ட பணிவுங்கறது இல்லையே? பெண்ணை மதிக்கத் தெரியாதவன் குடும்ப வாழ்க்கையில நிம்மதியா எப்படி இருக்கமுடியும்?

சொந்தம், பந்தம், ஒறவு மொறைகளை மதிச்சு, அவங்களோட ஒத்து வாழணும்ங்கறது இல்லாம, என்னை மதிக்கற ஒரு எடத்துலயும், குட்டி நாய் கொலைச்சு பெரிய நாய் தலையில வந்து விடிஞ்ச கதையா, துக்கத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்கறதுக்கு எனக்குன்னு இருக்கற ஒண்ணு, ரெண்டு சொந்தக்காரங்க வீட்டுக்குள்ளவும் நுழைய முடியாதபடி, இப்படி ஒரு தப்பான காரியம் பண்ணிட்டு வந்திருக்கானே? இதை நான் எப்படி சரி பண்ணப் போறேன்?

ஒரு அப்பனா, ஒரு புருஷனா, இவங்க ரெண்டு பேரும் நான் சொல்றதுல இருக்கற நியாயத்தை புரிஞ்சுக்கலை. என்னை எதுக்கும் உதவாதவனா நெனக்கறாங்க; செல்லாத, கிழிஞ்சிப் போன, கரன்சி நோட்டா நடத்தறாங்க,! இந்த வீட்டுல நான் ஏன் இருக்கேன்?

என் புள்ளை எனக்கு இன்னைக்கு சட்டம் சொல்லிக்கொடுக்கறான்… என் கையால தாலி கட்டிக்கிட்டவளுக்கு என் பேச்சு புரியலை. புள்ளை பக்கம் சாய்ஞ்சு நிக்கறா… எனக்கு என் புள்ளை மேல ஆசையில்லே; பாசமில்லேன்னு நெனக்கிறாங்க… என் புள்ளையை நாலு பேரு நல்லவன்னு சொல்லணும்… அதுதானே ஒரு அப்பனுக்கு பெருமை… இந்தச் சின்னவிஷயம் இவங்க ரெண்டு பேருக்கும் புரியலையே?

ராணி சொன்ன மாதிரி இவன் கல்யாணத்தை சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு, மனசுக்கு திருப்தியில்லாத ஒரு வாழ்க்கையை இந்த வீட்டுல வாழறதை விட, எங்கேயாவது கண்ணு மறைவா, ஹரித்துவார்… ரிஷிகேஷ்ன்னு நடையைக் கட்டிடவேண்டியதுதான். ஆண்டவா… மனுசன் நெனக்கறது எல்லாம் நடந்துட்டா, நீ ஒருத்தன் மேல எதுக்கு? நல்லசிவத்தின் எண்ணங்கள் முடிவற்று விரிந்து கொண்டிருந்தன.
நல்லசிவம், தன் நினைவுகளில் மூழ்கியபடி, அன்று தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தமுடியாமல், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து கொண்டிருந்தவர், காபி குடிக்கவேண்டும் என்ற நினைப்பில், கண்ணில் தென்பட்ட ஹோட்டலில் நுழைந்து மூலையிலிருந்த ஒரு டேபிளில் தலைகுனிந்து அமர்ந்தார்.

“மாமா… எப்படி இருக்கீங்க?”

உற்சாகமாக வந்த குரலைக் கேட்டு சட்டென நிமிர்ந்தார் நல்லசிவம். ரகுராமன் எதிரில் உட்க்கார்ந்திருந்தான். ராணியின் தம்பியும், ரகுவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். உறவுக்கு உறவு. நட்புக்கு நட்பு. வேலையிலிருந்து ஓய்வு பெற்று வந்ததிலிருந்து, வயது வித்தியாசம் பார்க்காத நண்பர்களாக அவர்கள் மாறி, ரகு ஊரிலிருக்கும் போதெல்லாம், இருவரும் மாலையில் ஆற்றோரமாக காலார நடப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

“ம்ம்ம்… இருக்க்க்க்கேன்…” இழுத்தார்.

“எதிரில்ல உக்காந்து இருக்கறது யாருன்னு அடையாளம் தெரியாத அளவுக்கு அப்படி என்ன பலமான யோசனை?”

“சாரிப்பா… கும்பிடப் போன தெய்வம் நீ குறுக்க வந்துட்டே..” விரக்தியாக புன்னகைத்தார்.

“மாமா என்ன சாப்படறீங்க நீங்க… உங்கக்கிட்ட சந்தோஷமான சேதி ஒண்ணு சொல்லணும்…” புன்னகையுடன் பேசினான் ரகு.

“காஃபியைச் சொல்லு…தலை விண் விண்ணுன்னு தெறிக்குது..” குரலில் சலிப்பிருந்தது.

“தம்பி… இன்னைக்கு என்ன… கோதுமை ஹல்வா ஸ்பெஷலா? ரெண்டு ப்ளேட் போண்டா, அதை நாங்க சாப்பிட்டதுகப்புறமா, சக்கரை கம்மியா ரெண்டு காபி குடுத்துடுப்பா… ஓ.கே” சர்வரிடம் தங்கள் ஆர்டரை கடகடவென சொன்னான்.

“மாமா… சாயந்திரம் நானே உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்… நீங்க முந்திக்கிட்டீங்க…”