நல்லசிவம் உண்மையான மனவருத்தமும், குற்ற உணர்வுடனும் பேசி முடித்தவர், சட்டென எழுந்து நின்று, ரகுவின் கைகளை, மன்னிப்பு கேட்க்கும் பாவனையில் மீண்டும் ஒரு முறை பிடித்துக்கொண்டார்.
“மாமா… ஒண்ணு மட்டு நிச்சயம். சம்பத் இப்போதைக்கு வேற யார்கிட்டவும் தான் செய்ததை பேசமாட்டான்… நீங்க மொதல்ல நேரா வீட்டுக்குப் போய், ராணி அக்கா, இந்த விஷயத்தை வேற யார்கிட்டவும் பேசாம பாத்துக்குங்க. மீதியை நான் டீல் பண்ணிக்கறேன்.” ரகு விறு விறுவென தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ஆண்டவா.. நான் யாருக்கும் இது வரைக்கும் தீங்கு நெனைச்சதில்லே… என் புள்ளையால அந்த பொண்ணோட பேருக்கு எந்த கெட்ட பேரும் வந்துடக்கூடாது… நல்லசிவம்… சுவாமிநாதனை வேண்டிக்கொண்டார். கோவில் இருக்கும் திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டவர், மெதுவாக வீடு திரும்ப ஆரம்பித்தார்.
நல்லசிவம், தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும், அவர் போவதையே சில வினாடிகள் மவுனமாக பார்த்தவாறு நின்றிருந்தாள் ராணி. மனம் ஒரு வினாடி துணுக்குற்றது. சட்டைக்கூட போட்டுக்காம வெறும் துண்டைப் போத்திக்கிட்டு கோபமா போறாரே? எங்கப் போறீங்கன்னு எப்படி கேக்கறது?
எங்கப் போயிடப் போறார்? ரயில்வே ஸ்டேஷன் வரைக்கு நடந்து போவார். மனசுல இருக்கற கோவம் தீர்ற வரைக்கும், கோவில்ல உக்காந்து இருப்பாரு… தேர் எங்க ஓடினாலும் கடைசீல தன் நிலைக்கு திரும்பி வந்துதானே ஆவணும்…! தன் மனதுக்குள் ஒரு குருட்டுத் தைரியத்துடன் தெருக்கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ராணி.
தலையை சீராக வாரி, முகத்தைக்கழுவி, நெற்றிக்கிட்டுக்கொண்டு, மாடிக்குச் சென்று வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தாள். தன் மகனுக்குப் பரிந்து கொண்டு, தன் மேல் உயிரையே வைத்திருக்கும், தன் கணவனிடம், அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், தேவையில்லாத வன்மத்துடன், குரலை உயர்த்தி, அவருடன் அன்று கூட கூடக் அனல் கக்கும் வார்த்தைகளைப் பேசியதால், அவள் மனதில் உண்டான கழிவிரக்கம் அவளை வாட்டி, வதைக்க ஆரம்பித்தது.
மாடி கட்டை சுவரில் சற்று நேரம் சாய்ந்து உட்க்கார்ந்தாள். ராணி தனக்குள் தனித்திருக்க விரும்பும் நேரத்தில் வழக்கமாக இங்குதான் உட்காருவாள். மாடி கட்டைச் சுவர்தான் அவளுடைய போதிமரம்.
ராணி, தன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதிலோ, ருசியாக சமைத்து, சரியான நேரத்தில் தன் குடும்பத்தினருக்குப் பரிமாறுவதிலோ, வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரிப்பதிலோ, எந்தக் காரியத்தையும் நறுவிசாக திட்டமிட்டு செய்து முடிப்பதிலோ, அவளிடம் ஒரு குறையையோ, குற்றத்தையோ, யாரும் கண்டுவிடமுடியாது.
இருபத்து இரண்டு வயதில் நல்லசிவத்தின் மனைவியாகி, தன் கணவனுடன் பம்பாய்க்கு சென்று, தனிக்குடித்தனம் தொடங்கிய நாள் முதல், கணவன் கொண்டு வந்த சம்பளப்பணத்தில், குடும்பத்தை சிக்கனமாக, கச்சிதமாக நடத்தி வந்திருக்கிறாள். கடன் என்று யாரிடமும், எப்போதும் தன் கணவனை அவள் கை நீட்ட வைத்ததில்லை. முன் பின் தெரியாதவர்களுக்கும், தேவைப்படும் நேரத்தில், தன்னால் முடிந்த வரை ஓடி உதவுவதில் அவள் என்றுமே பின் வாங்கியதில்லை.
தனது ஐம்பது நாலு வயதில் இன்றும் ஆரோக்கியமாக, அழகான பெண்மணியாக, பார்ப்பவர்கள் வியக்கும் வகையில், உடல் கட்டு குலையாமல் வலுவாக இருக்கிறாள். தன் கணவனுடன் தினமும், நடப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாள். நல்லசிவத்தின் தீராத உடல்ஆசைக்கும், மனவேட்க்கைக்கும், அவரின் இரவு நேர மோக விளையாட்டுகளுக்கும் இன்னும் விருப்பத்தோடு முடிந்தவரையில், குறைவில்லாமல் ஈடு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
ராணியின் ஒரே பலவீனம் அவள் பெற்றெடுத்தப் பிள்ளை. அவள் மகனை யாரும் எதற்காகவும் குற்றம் சொல்லிவிடக் கூடாது. எந்த காரணத்திற்காகவும் குறைத்து பேசிவிடக்கூடாது. அது தன் கணவனே ஆனாலும், என்னப் பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்றில்லாமல், தலைவிரி கோலமாக ஒரு ஆட்டம் ஆடிவிடுவாள். ஆடி முடித்தப்பின், தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என தனக்குள்ளாகவே வருந்துவாள். மீண்டும் ஒரு முறை இந்த தவறை செய்யக்கூடாது என அவள் எடுக்கும் முடிவு, பெண்களின் பிரசவ வைராக்கியத்தைப் போன்றதுதான்.
சாதாரண மனிதன் தன்னைத் சுற்றியிருப்பவர்களிடமிருந்து, சற்றே விலகி, அவனைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் போது, அவன் மனதின் அலையும் வேகம் மட்டுப்படுகிறது. அவன் எண்ணங்களும், சிந்தனைகளும் ஓரளவிற்கு சீராகி, பதட்டமில்லாமல் யோசிக்கத்தொடங்குகிறான். ராணியும் இந்த பொது விதிக்கு விலக்கானவள் இல்லை.
ராணி அவளுடைய போதிமரத்தடியில் உட்க்கார்ந்தவுடன், தன் கணவன் மதியம் சாப்பிடக்கூட இல்லை என்ற நினைப்பு சட்டென அவள் மனதில் எழுந்தது.
“ச்சை… என்னப் பொம்பளை நான்… சமைச்சு முடிச்சதும், சூடா நான் மொதல்ல என் வயித்த ரொப்பிக்கிட்டேன். அவர் பொறுமையா சம்பத் வரட்டும்; அவன் கூட சாப்பிடறேன்னு காத்திருந்தாரு. புள்ளை வந்ததும் அவனுக்குத் தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்தவ, புள்ளைப் பேச்சைக் கேக்கற ஆர்வத்துல புருஷனுக்கு சோறு போடக் கூட மறந்துட்டேனே,” அவள் செய்ய மறந்த அந்தக் காரியம் அவள் மனதின் ஓரத்தில் முள்ளாகக் குத்தி சுருக் சுருக்கென வலித்தது.
என்னைக்குமில்லாம, இன்னைக்கு எதுக்காக என் ஆம்பிளைக்கு இந்த அளவுக்கு என் மேல கோவம்? இப்படி ஒரு எரிச்சல்? என் மனசை புண்படுத்தற மாதிரி ஒரு விஷமான பேச்சை ஏன் பேசினார்? ஏன் என் பழைய கதையை ஆரம்பிச்சாரு? என் கதை தெரிஞ்ச அன்னைக்கே என்னை வீட்டை விட்டே அடிச்சு வெரட்டியிருக்கணும்ன்னு வெறுப்பா பேசினாரே? அவரு மட்டும் அப்படி பேசியிருக்கலாமா? அவரு அப்படி பேசினதுதான் என் கோபத்தை கிளப்பிடிச்சி… நானும் என் நிலை தடுமாறி, என் புள்ளை எதிர்ல தலை குனிஞ்சுடுவோமோங்கற பயத்துல அவரைத் தாறுமாறாப் பேசிட்டேன்.
மனுஷனோட முதல் எதிரி அவனுடைய பயம். எப்பவும் அவன் ஏன் இன்செக்யூர்டா ஃபீல் பண்றான்? அவனால் உண்மையை ஏன் எதிர்கொள்ள முடிவதில்லை. அவன் ஏன் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்கிறான். ராணிக்கு மூச்சு அடைப்பது போலிருந்தது. அவள் தன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக்கொண்டாள். இறுக்கமாக அவள் அணிந்திருந்த தன் ரவிக்கையை தளர்த்திக்கொண்டாள்.
ராணி, உன் புருஷன் க்ளியரா சொன்னான்ல்ல… பொம்பளை சாபம் சும்மா விடாதுன்னு…! அது சரியானப் பேச்சுத்தானே? உன் புள்ளைப் பண்ணத் தப்பு உனக்குப் புரியலியா? உன் புள்ளை கூட நீ ஆமாம்… ஆமாம் போட்டுக்கிட்டு இருந்தே; அது அவருக்குப் பிடிக்கலை. அதனால அவருக்கு கோபம் வந்துடுச்சி…. என்னைக்காவது, எதுக்காவது இப்படி கோவபட்டிருக்கானா உன் புருஷன்.
உன்னை மாதிரி ஒரு பொண்ணு நல்லா இருக்கணும்ன்னுதானே இன்னைக்கு அவன் கோவப்பட்டான். உன் புள்ளையால ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில பிரச்சனை எதுவும் வந்துடக்கூடாதுன்னுதானே கோவப்பட்டான். உன் தப்பை நீ ஒத்துக்கடி. பொய் இருக்கற எடத்துலதானே பயம் இருக்கும்.
சுகன்யாவும், அவன் காதலனும் க்ளோஸா இருக்கறதை, கண்ணால உன் புள்ளை பாத்தது இல்லே; காதால கேட்டதுதான். அவங்களோட நெருக்கம் எந்த அளவுக்குன்னு உன் புள்ளைக்குத் தெரியாது. ஆனாலும் அவன் சுகன்யாவை எச்சை எலைன்னு திட்டினான். அப்படி சுகன்யாவை அவன் அவதூறாக பேசினதை உன் புருஷனால பொறுத்துக்க முடியலே. நீயும் ஒரு பொம்பளைதானே, உன்னைக் குத்தம் சொன்னா உன்னால பொறுக்க முடியுமான்னு உன்னை டெஸ்ட் பண்றதுக்கு உன் பழையக் கதையை அவர் கிளறிட்டாரு.
உனக்கும் உன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதலன் இருந்திருக்கான். இதை நீ எப்படி மறந்தே? நீயும் அவனோட நெருங்கி பழகியிருக்கே! உங்க நெருக்கம் உன் வீட்டுக்குத் தெரியும். ஆனாலும் உன் காதல் விஷயத்தை மறைச்சு உன் அப்பனும் ஆத்தாளும், தங்க குடும்ப கவுரவுத்துக்காக, உன் ஜாதியைச் சேர்ந்த நல்லசிவத்துக்கு உன் விருப்பத்துக்கு மாறா, உன்னைக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க… இதெல்லாம் பொய்யா? இல்லாத எதையும் உன் புருஷன் புதுசா சொல்லிடலையே?