எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 60

“எ..என்ன விஷயம் ஸார்..??”

அந்த பதற்றம் தொனிக்கிற குரலிலேயே அசோக் கேட்க.. ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்தார்..!! பிறகு அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னார்..!!

“அந்த நம்பரை வச்சு.. அட்ரஸை கண்டு பிடிச்சாச்சு..!!”

அவர் சொல்லவும், அசோக்கின் முகத்தில் இப்போது பட்டென ஒரு பரவசம்.. ஏதோ மீராவையே அடைந்துவிட்டவன் போல, அவனிடம் அப்படி ஒரு பூரிப்பு..!!

“என்ன ஸார் நீங்க.. இவ்வளவு முக்கியமான மேட்டரை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டு இருக்கீங்க..??”

“இருடா.. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசு..!!” ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அசோக்கை அடக்கியதும், அவனது உற்சாகம் சற்றே குறைந்து போனது.

“ஏன் ஸார்.. ஏதாவது ப்ராப்ளமா..??”

“ப்ராப்ளம்லாம் ஒன்னுல்ல..!! ம்ம்ம்.. மேட்டர் என்னன்னா.. நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!”

“விஜயசாரதின்னா..????” அசோக் சற்றே குழப்பமாகி, கேள்வியை இழுத்தான்.

“ஆமாம்.. பையன்தான்..!! ஆக்சுவலா அந்தப்பையன் இண்டியாலயே இல்ல.. அவன் வெளிநாட்டுக்கு போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு..!!”

“ஒ..ஒருவேளை.. அந்த விஜயசாரதி நம்ம மீராவுக்கு தெரிஞ்ச பையனா இருக்கலாம் இல்லையா.. அவன் இவளுக்கு அந்த நம்பர் வாங்கித் தந்திருக்கலாமே..?? அந்தப்பையன்ட்ட பேசுனா..”

“ப்ச்.. என்னை சொல்ல விடுடா..!!” ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலாக,

“ச..சரி.. சொல்லுங்க..!!” அசோக் தனது ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொண்டான்.

“கே.கே.மூர்த்தின்னு கேள்விப்பட்டிருக்கியா..??”

“இல்ல.. யாரு அவரு..??”

“பெரிய பணக்காரர்.. மூணு காலேஜ், ரெண்டு ஹாஸ்பிடல், ஒரு லிக்கர் ஃபேக்டரி..!! ரொம்ப பெரிய கையி.. நார்த் சென்னைல ரொம்ப பவர்ஃபுல்..!! அவரோட பையன்தான் இந்த விஜயசாரதி..!!”

“ஓ..!!”

“அவருக்கு மாதவரத்துல ஒரு பங்களா இருக்கு.. இந்த ஸிம் ரெஜிஸ்டர் ஆகிருக்குறது அந்த அட்ரஸ்லதான்..!!”

“ம்ம்..!!”

“நான் அந்த அட்ரஸ்க்கு போய்.. கே.கே.மூர்த்தியோட பி.ஏவை மீட் பண்ணினேன்..!! அவர் மூலமா.. அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்..!!”

“ஓ.. என்ன சொன்னான்..??” அசோக்கிடம் இப்போது மீண்டும் ஒரு உற்சாகம்.

“அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!”

“அப்புறம்..??”

“நான் அவனை கொஞ்சம் கூல் பண்ணினேன்.. அந்த நம்பர் அவன் பேர்ல ரிஜிஸ்டர் ஆகி இருக்குறதை பத்தி சொன்னேன்.. மீராவோட அடையாளம்லாம் சொல்லி.. அந்த மாதிரி ஒரு பொண்ணை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்..!!”

“அ..அதுக்கு அவன் என்ன சொன்னான்..??”

“அந்த மாதிரி யாரையும் அவனுக்கு தெரியாதாம்..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அசோக்கிடம் இருந்த உற்சாகம் மொத்தமும் இப்போது காணாமல் போனது.

“ஓ..!!” அவனது குரலும் வறண்டு போய் ஒலித்தது.

“ஆக்சுவலா.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. ஐ மீன்.. அந்த விஜயசாரதி இண்டியால இருக்குறப்போ.. அவன் ஃப்ரண்ட்சோட சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்ட் போயிருந்திருக்கான்.. அங்க அவனோட செல்ஃபோனை தொலைச்சிருக்கான்..!! அப்போ.. அதை அவன் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. அப்படியே விட்டுட்டான்..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல சொல்ல.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தான்.. முற்றிலும் தளர்ந்து போனான்..!! ஏற்கனவே ஐந்தாறு நாட்கள் தானாக மீராவை தேடியலைந்து.. அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில்.. அந்த செல்ஃபோன் நம்பரைத்தான், மிகப்பெரிய துருப்புச்சீட்டாக அவன் எண்ணியிருந்த வேளையில்.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து வந்த இந்த செய்தி.. இடியென அவனது இதயத்தில் இறங்கியது..!!

“ம்ம்..!!” வாயிலிருந்து வந்த வார்த்தை கூட குறைந்த டெசிபலில் ஒலித்தது.

“அந்த தொலைஞ்சுபோன செல்ஃபோன்ல இருந்த ஸிம்மை வச்சுத்தான்.. உன் ஆளு உன்கூட இத்தனை நாள் வெளயாண்ட்ருக்கா..!!”