எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“மச்சி.. எனக்கு இன்னொரு லார்ஜ் சொல்லேன்..!!” ஆறாவது லார்ஜையும் முடித்துவிட்டு அசோக் அவ்வாறு குழறலாக கேட்க.. இப்போது கிஷோர் எரிச்சலானான்..!!

“ஹேய்.. போதுண்டா.. ஏற்கனவே கன்னாபின்னான்னு குடிச்சுட்ட..!! கெளம்பலாம் வா..!!”

“ஹ்ஹ.. போதுமா..?? அதெல்லாம் நீ சொல்லக் கூடாது.. எனக்கு போதும்னா அதை நான்தான் சொல்லணும்..!! நோ.. எனக்கு போதாது.. போதவே போதாது..!!”

எகத்தாளமாக சொன்ன அசோக்.. தூரத்தில் தெரிந்த பேரரை பார்த்து.. இங்கிருந்தே பெருங்குரலில் கத்தினான்.. மீராவின் ஸ்டைலில்..!!

“ரிப்பீட்..!!!!”

அதிகமாக புகைத்தான்.. அளவில்லாமல் குடித்தான்.. ஆல்கஹாலும், டொபாக்கோவும் அவனது சிந்தனை ஓட்டத்தை மேலும் சிக்கலாக்கின.. மூளையின் செயல்பாட்டை முடக்கி வைத்தன..!! அசோக்கின் நிலை அவனது நண்பர்களுக்கும் கவலையையே தந்தது..!! சில நேரங்களில்.. அவன் மனநிலை பிறழ்ந்தவன் மாதிரியெல்லாம் பேச.. அவர்கள் மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

“அவ மட்டுந்தான் கவிதை எழுதுவாளா..?? எங்களுக்குலாம் எழுத தெரியாதா..?? நானும் எழுதுவேன்..!! அவள் பறந்து போனாளே.. என்னை மறந்து போனாளே..!!”

மோகன்ராஜுடன் அசோக் சண்டையிட்டதிலிருந்து மூன்றாவது நாள்.. ஓவராக குடித்து, ஓவராக புலம்பி நண்பர்களுக்கு கிலி கிளப்பியதிலிருந்து நான்காவது நாள்.. பாலாஜி அட்வர்டைஸிங்கில் இருந்து அசோக்கின் அலுவலகத்துக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.. புது வேலை தொடர்பாக இவர்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை, முறித்துக் கொண்டுவிட்ட செய்தியை தாங்கி வந்த அழைப்பு அது..!!

கிஷோர்தான் அந்தக்காலை அட்டன்ட் செய்தான்.. விஷயம் கேள்விப்பட்டதுமே கொதித்துப் போனான்.. அசோக்கின் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..!! ரிஸீவரை அதனிடத்தில் அறைந்து சாத்தியவன்.. அலுவலக அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தான்.. ‘எங்க அவன்..?’ என்று முனுமுனுத்துக்கொண்டே வீடியோ எடிட்டிங் அறைக்குள் நுழைந்தான்..!!

அந்த அறைக்குள் புகை மண்டலத்துக்கு நடுவே அசோக் அமர்ந்திருந்தான்.. அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உட்கொண்டு ஏற்கனவே எக்கச்சக்க போதையில் இருந்தான்.. திரையில் காதல் உல்லாசம் ஓடிக்கொண்டிருக்க.. இவன் அதை இருநூறாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! மற்ற நண்பர்களும் அங்கேதான் இருந்தனர்.. வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..!!

உள்ளே நுழைந்த கிஷோர்.. முதல்வேலையாக சென்று வீடியோ சிஸ்டத்தில் செருகியிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென உருவினான்.. உடனே வீடியோ ஸ்க்ரீன் பட்டென இருட்டு போனது.. ஆர்வமாக படம் பார்த்துக்கொண்டிருந்த அசோக்கிற்கோ கிஷோரின் மீது சுருக்கென்று ஒரு ஆத்திரம்..!!

“ஏய்.. ஏன்டா இப்போ ஆஃப் பண்ண..??” என்று சீறினான்.

“ஆஃப் பண்ணது மட்டும் இல்லடா.. இனிமே இந்தப்படத்தை பாக்க உன்னை அல்லோ பண்ணவும் முடியாது..!!”

கிஷோரும் பதிலுக்கு சூடாக சொன்னான். சொன்னவன் கையிலிருந்த மெமரி ஸ்டிக்கை சரக்கென விசிறி எறிந்தான். அது தரையில் மோதி, உடைந்து சிதறி தெறித்து ஓடியது. அது அசோக்கின் கோபம் இன்னும் அதிகமாக்கியது. அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தான். கோபத்தில் சிவந்த முகத்துடன் கிஷோரை நெருங்கி, அவனது மார்பில் கைவைத்து தள்ளியவாறே கேட்டான்.

“ஏய்ய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு இப்போ..??”

“எனக்கு எதுவும் ஆகலைடா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..!! உனக்குத்தான் பைத்தியம் புடிச்சிருச்சு.. உன் பைத்தியக்காரத்தனத்தால.. நாப்பது லட்ச ரூபா ப்ராஜக்ட், அப்படியே நக்கிக்கிட்டு போயிருச்சு..!!”

கிஷோர் கொதிப்புடன் கத்தினான். ப்ராஜக்ட் கைநழுவி சென்றதை அறிந்ததும், சாலமனும் வேணுவும் அதிர்ந்து போய், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்தார்கள். செய்தி கேட்டு அசோக்கின் கோபமுமே அப்படியே வடிந்து போயிருந்தது.

“போ..போனா போகட்டும்.. விடு..!! அதுக்கு ஏன் இப்படி டென்ஷனாகுற..??” என்றான் கம்மலான குரலில்.

“விட்டுர்றதா..?? போனா போகட்டும்னு ப்ராஜக்ட்டை வேணா விட்ரலாம்டா.. உன்னை எப்படி விடுறது..?? இந்த ப்ராஜக்ட் இல்லனா இன்னொரு ப்ராஜக்ட்.. ஆனா நீ அப்படி கெடையாது..!! அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை அழிச்சுக்குறதை.. இனிமேலும் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது..!! எனக்கு இன்னைக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!!”

“எ..என்ன தெரியனும்..??”

“எத்தனை நாளைக்கு இன்னும் இப்படியே இருக்கப் போற..?? எந்த நேரமும் தம்மடிச்சுட்டு.. தண்ணியடிச்சுட்டு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிக்கிட்டு..!! ம்ம்..??”