எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 51

மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆள்.. முன்பாக கிடந்த கண்ணாடி மேஜை மீது.. முதுகு குப்புற கவிழ்ந்திருந்தான்..!! முகத்தை பக்கவாட்டில் திருப்பி புதைத்து.. மூச்சு நின்று போய் இறந்து கிடந்தான்..!! முரட்டு மீசை.. கனத்த தேகம்.. மூக்கிலிருந்து வழிந்து உறைந்துபோன ரத்தம்.. மூடாத இமைகளுடன் நிலைகுத்திய பார்வை..!! அந்த கண்ணாடி மேஜையில்.. வெண்ணிறத்திலான ஒருவகை பொடி சிந்திக் கிடந்தது.. வெப்பத்தில் கருகிப் போன வெள்ளி தேக்கரண்டி ஒன்று.. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக மதுபுட்டி ஒன்று.. அதனருகில் நேற்றிரவு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி.. இப்போது உருகி, உயிர் தீர்ந்து, உறைந்து போயிருந்தது.. மேஜையில் கவிழ்ந்திருந்த அந்த ஆளைப்போலவே..!!

இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. இவர்களுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தார்.. மஃப்டி உடையில்தான் இருந்தார்..!! காவல்த்துறை தடவியல் பிரிவை சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குழு.. அந்த அறைக்குள் இருந்த பொருட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! அவர்களுள்.. கண்ணாடியும் கையுறையும் அணிந்திருந்த ஒரு தடயவியல் நிபுணர்.. கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு.. அந்த கண்ணாடி மேஜை நோக்கி குனிந்திருந்தார்..!! கையிலிருந்த ஒரு சிறிய தகரத்தகடால்.. அந்த வெண்ணிற பவுடரை கொஞ்சம் அள்ளினார்.. விரலால் தொட்டு நாவால் சுவைத்துப் பார்த்தார்..!! ஓரிரு வினாடிகள்.. பிறகு தலையை சுழற்றி ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டவர்..

“Coke..!!”

என்றார் அழுத்தம் திருத்தமாக. அதைக்கேட்டதுமே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து ஒரு சலிப்பான பெருமூச்சு வெளிப்பட்டது..!!

“ப்ச்.. ஆரம்பிச்சிடுச்சு.. தலைவலி..!!”

சொல்லிக்கொண்டே தலையை பரபரவென சொறிந்து கொண்டார்..!! அந்த தடவியல் நிபுணர் இப்போது மெல்ல மேலெழுந்தார்.. உயிரை விட்டிருந்த அந்த ஆளை உன்னிப்பாகப் பார்த்தவாறே.. கையுறைகளை கழட்டியபடியே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொன்னார்..!!

“ஆக்சிடண்டல் டெத் மாதிரிதான் தோணுது எஸ்பி.. எதும் ஃபோர்ஸ் பண்ணதுக்கான சிம்ப்டம்ஸ் இல்ல.. ஓவர்டோஸ் ஆகி உயிரை விட்ருக்கணும்..!! ட்ரக்ஸ் ப்ளஸ் ஆல்கஹால்..!! ஹ்ம்ம்.. உள்ள என்னென்ன வெடிச்சதோ தெரியல.. மூக்குல இருந்து ரத்தம் கொட்டிருக்கு..!!”

“ம்ம்..!!”

“Overall.. It looks pure accidental to me..!!”

“இப்போவே எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் பார்த்தி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்.. பாத்துக்கலாம்..!!”

அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், அடுத்த நொடியே சரக்கென திரும்பினார். வாசலில் நின்றிருந்த கனகராஜனையும் அசோக்கையும் பார்த்ததும், அவரிடம் மெலிதாக ஒரு திகைப்பு. ஆனால் உடனடியாய் அந்த திகைப்பை சமாளித்துக் கொண்டவர்,

“ஒரு அஞ்சு நிமிஷம் அசோக்..!!”

என்று அசோக்கை பார்த்து ஒரு இதமான புன்னகையை வீசினார். பிறகு கனகராஜனை ஏறிட்டவர், முகத்தில் இன்ஸ்டன்டாக ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு,

“வேன் என்னாச்சு கனகு..??” என்றார்.

“வந்துக்கிட்டு இருக்கு ஸார்.. இப்போத்தான்..”

கனகராஜன் பதற்றத்துடன் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. அவருடைய பதிலில் ஆர்வம் இல்லாதவர் போல.. ஸ்ரீனிவாச பிரசாத் படக்கென திரும்பி உள்ளே நடந்தார்..!! ஒருகணம் குழம்பிய கனகராஜன்.. பிறகு அவசரமாக நகர்ந்து அவரை பின்தொடர்ந்தார்..!! என்ன செய்வது என்று புரியாத அசோக்கும்.. கனகராஜனின் பின்னால் நடந்தான்..!!

விடுவிடுவென நடந்த ஸ்ரீனிவாச பிரசாத் பக்கத்து அறையை அடைந்தார்.. அவருக்கு பின்னாலேயே, கனகராஜனும் அசோக்கும்..!!

பக்கத்து அறைக்குள் அந்தப்பெண் அமர்ந்திருந்தாள்.. அழகாக இருந்தாள்.. முப்பதுகளின் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வயது இருக்கலாம்.. முகத்தில் ஒருவித அசாத்திய அமைதி..!! அவளது கையில் பால்சாதம் நிரம்பிய கிண்ணம்.. மடியில் அவளுடைய ஐந்துவயது பெண்குழந்தை..!! இவர்கள் வாசலில் வந்து நின்றதை அந்தப்பெண் கவனிக்கவில்லை.. குழந்தைக்கு சாதம் ஊட்டுவதில் குறிப்பாக இருந்தாள்..!! அந்தக்குழந்தை சாதத்தை அசைபோட்டவாறே.. வாயிடுக்கில் பாலும், வார்த்தைகளில் மழலையும் வழிந்தோட.. அம்மாவை கேட்டது..

“ஸ்கூலுக்கு போகலைன்னா மிஸ் திட்டுவாங்களே..??”

“இல்லடா.. மிஸ் திட்டமாட்டாங்க..!! மம்மி.. மிஸ்ட்ட பேசிட்டேன்..!! சுஜிக்குட்டி.. மண்டே ஸ்கூலுக்கு வந்தா போதும்னு மிஸ் சொல்லிட்டாங்க..!!”

“நெஜமா..??” அந்தக்குழந்தையின் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல்.

“ம்ம்.. நெஜமா..!!” அந்தப்பெண்ணின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை.

அப்பா இறந்துபோன விஷயம், அந்தக்குழந்தைக்கு இன்னும் தெரியாது போலிருந்தது.. இப்போதுதான் தூக்கத்திலிருந்தே விழித்திருக்கும் போல தெரிந்தது..!! கண்களில் ஒருவித சோர்வுடனும்.. ‘இன்று பள்ளிக்கு செல்கிற தொல்லை இல்லை’ என்ற மகிழ்ச்சியுடனும்.. அம்மா ஊட்டிய பால்சாதத்தை விழுங்கிக்கொண்டிருந்தது..!!

இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் ‘ம்க்கும்’ என்று மெலிதாக தொண்டையை செரும.. அந்தப்பெண் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்..!! இவர்கள் மூன்று பேரையும் வாசலில் கண்டதும்.. ‘என்ன..’ என்பது போல கேள்வியாக பார்த்தாள்..!!