எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

அடுத்த நாளும் சிந்தாதிரிப்பேட்டையில் அலைய நினைத்திருந்த அந்த எண்ணத்தை.. அவநம்பிக்கையுடன் அசோக் கைகழுவினான்..!! ஆனால்.. அவன் மனதில் எப்போதும் எழுந்து.. அவனைப்பார்த்து கைகொட்டி நகைக்கிற மீராவின் நினைவுகளை கலைந்திடத்தான்.. அவனுக்கு வழியேதும் புலப்படவில்லை..!! அலுவலகச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அவளது கவிதைக்காகிதம்.. அவர்கள் அமர்ந்து உண்டு கதையடிக்கிற அந்த ஃபுட்கோர்ட் மேஜை.. சிவந்த மூக்குடன் சிரிக்கிற குரங்கு பொம்மை.. மஞ்சள் இதழ்களுடன் மலர்ந்து குலுங்கும் ரோஜாத்தோட்டம்.. அர்த்தம் புரியாத பார்வையுடன் அவனையே வெறிக்கிற அவளது வால்பேப்பர்.. அவளது அழைப்புக்கென பிரத்தியேகமாக செலக்ட் செய்து, செட் செய்து வைத்திருந்த செல்ஃபோன் ரிங்டோன்..!! கண்ணில் படுகிற அனைத்துமே.. காயம்பட்ட அவன் நெஞ்சில் திராவகம் தெளிப்பதாகவே இருந்தன..!!

மனதில் இருந்த குழப்பமும், பயமும், வேதனையும்.. அசோக்கின் முகத்திலும் வெளிப்படாமல் இல்லை.. வீட்டிலிருப்பவர்கள் அவனுடைய நடவடிக்கைகளை வித்தியாசமாக பார்த்தனர்.. எனினும் அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.. ஏதாவது கேட்டாலும் இவன் ‘ஒன்றுமில்லை’ என்றே கூறி சமாளித்தான்..!!

“போதும் மம்மி.. எனக்கு பசி இல்ல..!!”

பெயருக்கு கொறித்துவிட்டு அசோக் எழ முயல.. பாரதி பொறுமை இழந்து போனாள்.. மகனின் முகத்தை ஏறிட்டு கடுமையாக ஒரு முறை முறைத்தாள்.. அவனது கண்களை நேருக்கு நேராக எதிர்கொண்ட கூரான பார்வை.. அந்தப்பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்.. எழுந்தாய் என்றால் எரித்துவிடுவேன் என்பது மாதிரி..!! பாரதியின் அனல்கக்கும் பார்வை ஒன்றே அசோக்கிற்கு போதுமானதாக இருந்தது.. எழ முயன்றவன், பிறகு தயக்கத்துடன் மீண்டும் அமர்ந்தான்.. தட்டை அருகில் இழுத்து, சாதத்தை கொஞ்சமாய் அள்ளி, மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்..!!

மகன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும், பாரதியின் கோபமும் மறைந்து போனது.. உள்ளத்தில் அவன் மீதான அன்பு, உடனடியாய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.. அதேநேரம் ‘இவனுக்கு ஏதோ பிரச்னையோ’ என்கிற கவலையும் அவளை ஆட்கொண்டது.. சாதம் மெள்ளுகிற மகனின் கேசத்தை, இதமாய் வருடிக்கொடுத்தாள்..!!

“அவ கூட ஏதாவது சண்டையா..??” பாரதியின் கேள்வி கூர்மையாக இருந்தது.

“ச..சண்டையா.. அ..அதுலாம் இல்லையே..??” அசோக்கிடம் ஒரு தடுமாற்றம்.

“அப்புறம் என்னாச்சு..??”

“எ..என்னாச்சுனா..??”

“ப்ச்.. நடிக்காத அசோக்.. நானும் ஒருவாரமா பாத்துட்டுத்தான் இருக்கேன்.. நீ ஒன்னும் சரியில்ல..!! உன் மூஞ்சில ஒரு களையே இல்ல.. எந்தநேரமும் எதையாவது யோசிச்சுட்டே இருக்குற..?? ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. வீடே தங்குறது இல்ல..!! எ..என்னாச்சு உனக்கு.. ம்ம்..?? சொல்லு.. மீரா கூட எதும் பிரச்சினையா..??”

“இ..இல்ல மம்மி.. அதுலாம் ஒன்னும் இல்ல..!!”

“அப்புறம்..??”

“ஆபீஸ் டென்ஷன்தான்..!! கொஞ்சநாளா ரொம்ப ஹெக்டிகா போயிட்டு இருக்கு..!!” அசோக் கம்மலான குரலில் சொல்ல, பாரதி அவனை ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பிறகு,

“வேற ஒன்னும் இல்லையே..??” என்றாள் முழு நம்பிக்கை இல்லாதவளாகவே.

“அதான் சொல்றன்ல..??”

“ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! ஆபீஸ் டென்ஷன்லாம் ஆபீஸ்லயே விட்டுட்டு வர மாட்டியா.. வீட்டுக்கு வந்தும் அதையே நெனச்சுட்டு இருப்பியா.. என்ன புள்ள நீ..??” பாரதியின் குரலில் ஒருவித பொறுமல்.

“………………”

“ஆன்னா ஊன்னா சாப்பாடு மேல கோவத்தை காட்ட வேண்டியது..!!”

“………………”

“அவதான் வந்து உன்னை அடிச்சு திருத்தணும்..!!”

அப்படி சொல்லும்போதே, பாரதிக்கு திடீரென மீராவின் நினைவுகள்..!! ஒரே ஒரு நாள்தான் சந்தித்து பேசியிருந்தாலும்.. மீராவுடன் ஒரு அன்னியோன்ய உணர்வு அவளுக்கு அன்றே வந்திருந்தது..!! ‘தனக்குப்பிறகு தனது இடத்தில் இருந்து.. தன் மகனை அன்புடன் கவனித்துக் கொள்ளப்போகிற ஒரு ஜீவன்.. தான் ஈன்றெடுத்தவனுடன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு, அவனை முழுமனிதனாக்கப் போகிற ஒரு உயிர்..’ என்பது மாதிரியான எண்ணத்தில் பிறந்த உணர்வு அது.. மகனை உண்மையாக நேசிக்கிற எந்த தாய்க்குமே, அவனுடைய மனைவியை பார்த்து வரவேண்டிய உன்னதமான உணர்வு..!!

குரலில் உடனடியாய் ஒரு மென்மையை வரவழைத்துக்கொண்டு.. ஒருவித ஏக்கம் தொனிக்க.. அசோக்கிடம் பாரதி கேட்டாள்..!!

“இ..இந்த வாரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா அசோக்..??”

அம்மா அப்படி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. மனதில் சுருக்கென்று ஒரு வலியுடன், அம்மாவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான்..!! மகனின் முகத்தை கவனியாத பாரதி.. எங்கேயோ பார்த்துக்கொண்டு தொடர்ந்து பேசினாள்..!!