எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! பார்த்து ஒருவாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ளயே வருஷக்கணக்கான மாதிரி இருக்குது..!!”

“………………”

“அவகிட்ட பேசிட்டு இருந்தா, நேரம் போறதே தெரியல தெரியுமா..?? ரொம்ப நல்ல பொண்ணுடா..!! நீதான் கோவக்காரி, டெரர் பார்ட்டின்னு என்னன்னவோ சொன்ன..!!”

“………………”

“பாக்கணும் போல இருக்குடா.. கூட்டிட்டு வர்றியா..??”

ஏக்கத்துடன் கேட்டுவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கிற அம்மாவுக்கு, என்ன பதில் சொல்வதென்று அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவனுடைய கண்களில்..!! அதனை அடக்கிக்கொண்டு..

“ம்ம்.. கூ..கூட்டிட்டு வர்றேன்..!!” சற்றே பிசிறடிக்கிற குரலில் சொன்னான்..!!

பாரதி மட்டுமல்ல.. அசோக்கின் குடும்பத்தார் அனைவருமே.. அவர்களையும் அறியாமல், அசோக்கின் நிலையையும் அறியாமல்.. மீராவின் நினைவுகளை அவனுக்குள் தூண்டிக்கொண்டே இருந்தனர்..!! ஏற்கனவே நொறுங்கிப்போயிருந்த அசோக்கிற்கு.. அவர்களின் நடவடிக்கைகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன..!!

“ஸ்பென்ஸர் போயிருந்தேண்டா.. இயர் ரிங் வாங்கினேன்.. நல்லாருந்துச்சேன்னு அண்ணிக்கும் ஒரு செட் வாங்கினேன்.. இந்தா.. அவங்களை பாத்தா குடுத்துடு..!!”

அண்ணனின் கையில் காதணி பெட்டகத்தை திணித்துவிட்டு.. திரும்பி நடந்தாள் சங்கீதா..!! வலிக்கிற மனதுடனே அசோக் அந்த பெட்டகத்தை பார்க்க.. வாசலை அடைந்திருந்த சங்கீதா திரும்பி கேலியாக சொன்னாள்..!!

“மவனே.. நான் வாங்கி தந்ததா சொல்லி குடுக்கணும்..!! நீயே வாங்கினதா பீலா வுட்டு.. முத்தம் கித்தம் கேட்டு எங்க அண்ணியை டிஸ்டர்ப் பண்ணினேன்னு தெரிஞ்சது.. கொன்னுடுவேன்..!! ஹாஹாஹா..!!”

மத்தாப்பு கொளுத்திய மாதிரி சிரித்துவிட்டு.. மறைமுகமாக அண்ணனுக்கு ரொமான்ஸ் ஐடியாவும் வழங்கிவிட்டு.. அறையை விட்டு வெளியேறினாள் சங்கீதா..!! அசோக்குக்குத்தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. வேதனை கொப்பளிக்கிற நெஞ்சுடன்.. வெகுநேரம் அந்த காதணியையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!

“ஹ்ம்ம்… என் அருமை, என் புள்ளைக்குத்தான் தெரியல.. அட்லீஸ்ட் வரப்போற மருமகளாவது தெரிஞ்சுக்கட்டும்..!! என்னோட நாவல் எதுவும் மீரா படிச்சது இல்லன்னு சொன்னா.. இது நான் எழுதினதுல ரீசன்ட் ஹிட்.. இதை அவகிட்ட குடுத்து படிக்க சொல்லு… மாமனாரோட மகிமை என்னன்னு அவ தெரிஞ்சுக்குவா..!! ஹாஹா..!!”

மணிபாரதி தன் பங்குக்கு அசோக்கின் உணர்வை சீண்டினார்..!! அவர் வைத்துவிட்டு சென்ற நாவலின் தலைப்பை பார்த்த அசோக்கிற்கு.. அழுகை மேலும் பீறிடவே செய்தது..!!

“எங்கே அந்த வெண்ணிலா..??”

நாராயணசாமியும் அமைதியாய் இருக்கவில்லை.. அனுபவத்தால் தான் கற்ற காதல் பாடங்களை, அறிவுரைகளாக பேரனுக்கு அவ்வப்போது அள்ளி வீசிக்கொண்டிருந்தார்..!!

“சும்மா உம்முனே இருக்காத.. நானும் லவ் பண்றேன்னு ஏதோ பேருக்கு லவ் பண்ணாத..!! அவளை சிரிக்க வை.. அழ வை.. கோவப்பட வை.. வெக்கப்பட வை..!! அவளை அடி.. அவளுக்கு முத்தம் குடு..!! என்னை மாதிரி நீ கெழட்டுப்பயலானப்புறமும் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற மாதிரி.. ஏதாவது பண்ணிக்கிட்டே இரு..!! எந்த லட்சணத்துல நீ லவ் பண்ணினன்னு.. எழுபது வயசுல பெருமையா சொல்லிக்கிற மாதிரி உன் லவ் இருக்கணும்..!! புரியுதா..??”

“ம்ம்.. புரியுது தாத்தா..!!” மனதில் எழுந்த ஆதங்கத்தையும் சோகத்தையும் மறைத்துக்கொண்டு, அமைதியாக சொன்னான் அசோக்.

வீடே தங்குவதில்லை என்று.. அசோக்கைப் பற்றி பாரதி குறைபட்டுக்கொண்டது சரிதான்..!! வீடு தங்கவே அவன் விருப்பப்படவில்லை என்பதுதான் அதன் பின்னணியில் உறைந்திருந்த உண்மை..!! அடிக்கடி இந்த மாதிரி மீரா பற்றி பேசி.. அசோக்கின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தால்.. அவன் என்ன செய்வான் பாவம்..?? உள்ளம் கவர்ந்து சென்றவளை கண்டறியவும் வழியில்லை.. உள்ளது உள்ளபடி குடும்பத்தாரிடம் உரைக்கவும் துணிவில்லை.. உடைந்து போனான்..!! வீட்டை தவிர்த்தான்.. அலுவலக வேலை இருக்கிறதென அங்கேயே அடிக்கடி முடங்கிப் போனான்..!!

அலுவலகத்தில் மட்டும் என்ன அவனுக்கு நிம்மதியா கிட்டிவிடப் போகிறது..?? அவள்தான் நினைவை நிறைய கொடுத்துவிட்டு.. நிம்மதியை முழுதாய் எடுத்துச் சென்றுவிட்டாளே..?? அலுவலகத்தில் எப்போதும்.. புகை மண்டலத்துக்கு இடையில்தான் அவன் முகம் தேட வேண்டியிருக்கும்.. அந்த அளவுக்கு எந்த நேரமும் சிகரெட் புகைத்தான்..!! அவன் நெஞ்சில் எரிகிற நெருப்புக்கு தற்காலிக மருந்தாய்.. உதட்டில் பொருத்திய சிகரெட்டின் சிரத்தில் நெருப்பு வைத்தான்..!! நச்சுப்புகை உள்ளே சென்று அத்தனை உறுப்புகளையும் தடுமாறச்செய்ய.. அந்த தடுமாற்ற உணர்வில், தன் மனவேதனையின் வீரியம் குறைக்க முயன்றான்..!!

அலுவலக வேலைகளும் எதுவும் செய்வதில்லை.. அப்படியே செய்தாலும்.. யாருடனாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு சண்டை..!! புது ப்ராஜக்ட் சம்பந்தமாக பாலாஜி அட்வர்டைஸிங்குக்கு கலந்தாய்வு செய்ய சென்றவன்.. மோகன்ராஜுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டான்..!!

“டேய்.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா..??”

“இன்னும் இதுல புரிஞ்சுக்க என்ன இருக்கு..?? என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..!!”

“ப்ச்.. ஏண்டா இப்படி அடம் புடிக்கிற..??”

“யாரு அடம் பிடிக்கிறா..?? நான் சொன்ன கான்சப்ட்ல என்ன குறைன்னு சொல்லுங்க மொதல்ல..!! நீங்க எப்போவும் கேக்குற மாதிரி.. லவ், ஃபீல், எமோஷன், டெப்த் எல்லாம் இருக்கு.. அப்புறம் என்ன..??”

“குறைலாம் சொல்லலடா.. க்ளயன்ட்டுக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!!”