எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“டேய்..!!! கொலைகாரப்பாவி..!!! கொஞ்சம்னா அப்டியே எகிறிருப்பேன்டா..!!” என்று வேதனையும் வெறுப்புமாய் அசோக்கைப் பார்த்து கத்தினான். அவனை கண்டுகொள்ளாத அசோக்,

“மீ..மீரான்னு நெனச்சுட்டேன் மச்சி.. அ..அவ இல்லடா..!!” என்று உதிர்த்த வார்த்தைகளில் இருந்த வேதனையை சாலமனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிந்தாதிரிப்பேட்டையில் அந்த ஃப்ளக்ஸ் போர்டை சூழ்ந்திருந்த, அத்தனை வீடுகளின் கதவையும் தயக்கமில்லாமல் தட்டியாயிற்று.. மக்கள்தொகை கணக்கெடுக்கிற போர்வையில், மனம் திருடிச்சென்றவளின் மதிமுகம் தென்படுகிறதாவென தேடிப் பார்த்தாயாயிற்று.. மாடிவீடுகள் மட்டுமல்லாது, மண்குடிசைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை..!! ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி.. ஆயிரத்து சொச்ச வீடுகளை சலித்தெடுத்தும்.. அகப்பட மறுத்தாள் அவனது அன்புக்காதலி..!! எப்படி அகப்படுவாள்.. அந்த வீடுகளில் அவள் இருந்தால்தானே..?? பார்த்த முதல் வீட்டிலேயேதான் பாவையவள் பதுங்கியிருந்தாள் என்கிற உண்மை.. பாவம் அசோக்கிற்கு தெரியாதல்லவா..??

ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஏறி இறங்குகையில்.. ஒருசில வீடுகளில் அச்சமயம் ஆளிருக்க மாட்டார்கள்.. வெளிப்புற தாழ்ப்பாள்கள் அவர்களை வெறுங்கையுடன் திருப்புவன..!! அந்த மாதிரி வீடுகளை அசோக் ஒரு தனிக்கணக்கில் வைத்திருந்தான்.. அடுத்தநாள் செல்லும்போது அந்த வீடுகளை மீண்டும் அணுகுவதை வழக்கமாக கொண்டிருந்தான்..!! தனது வீட்டிற்கு அசோக் வந்தபொழுதினில்.. மீரா தப்பியோடி இருந்திருந்தால் கூட.. அசோக் அவளை மீண்டும் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்க கூடும்..!! அந்த நெருக்கடிநிலைமையை அவள் மனோகரைக்கொண்டு சமாளித்தபடியால்.. அசோக்கின் தனிக்கணக்கில் மீராவின் வீடு அங்கம் வகிக்காமல் போனது..!!

ஐந்தாம் நாள் இறுதி.. அசோக்கின் நம்பிக்கையைபோல ஆதவனின் வெளிச்சமும் மங்கிப்போயிருந்த மாலைப்பொழுது.. அட்டவணையில் இருந்த அனைத்து வீடுகளிலும் தேடிமுடித்து.. அலைந்து திரிந்த களைப்புடன்.. அருகிலிருந்த ஒரு சாலையோர கடையில்.. பஜ்ஜி கடித்து அவர்கள் பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயம்..!! அசோக்கின் மனதில்.. ஆரம்பத்திலிருந்தே ஒருசில வீடுகளின் மீதும், அங்கிருந்த மனிதர்கள் மீதும் ஒருவித சந்தேகம்.. அவன் முதன்முதலில் அணுகிய மீராவின் வீடுமே அதில் அடக்கம்.. அடுத்தநாள் அந்த வீடுகளை எல்லாம் திரும்ப ஒருமுறை சென்று பார்க்கலாமா என்று அவனுக்குள் ஒரு எண்ணம்..!!

உள்ளுக்குள் எழுந்த அந்த எண்ணத்தை.. அசோக் சாலமனிடம் உரைத்தான்..!! அவ்வளவுதான்.. ஏற்கனவே கடும் எரிச்சலில் இருந்த சாலமன், அப்படியே கொதித்துப் போனான்.. வாயிலிருந்த பஜ்ஜியை அவசரமாய் விழுங்கியவன், அசோக்கிடம் ஆத்திரமாய் சீறினான்..!!

“டேய்..!!! உனக்கு என்ன பைத்தியமாடா..????”

“ப்ச்.. என்னாச்சு இப்போ..??”

“பின்ன என்ன.. அஞ்சு நாளா பிச்சைக்காரன் மாதிரி வீடுவீடா ஏறிஎறங்கிருக்குறோம்.. அறிவு வரலை உனக்கு இன்னும்..?? அவ இங்க இல்லடா..!!”

“இல்ல மச்சி.. அவ இங்கதான்டா எங்கயோ இருக்குறா.. எனக்கு நல்லா தெரியும்..!!”

“ஆமாம்.. உனக்கு எங்க பாத்தாலும் அவ இருக்குற மாதிரியே இருக்கும்.. எவளை பாத்தாலும் அவளை மாதிரியே தோணும்..!! ஏன்டா இப்படிலாம் பண்ற..??”

“ஏய்.. இது அப்டி இல்லடா..!!”

“என்ன நொப்டி இல்லடா.. அன்னைக்கு ரோட்ல எவளையோ பாத்துட்டு பைக்கை கீழ வுட்டியே..?? த்தா.. அன்னைக்கு ஜஸ்ட் மிஸ்ஸு.. இல்லனா சங்கு ஊதிருப்பானுக..!! உன்கூட பைக்ல போற ஒவ்வொரு செகண்டும், அப்டியே பக்கு பக்குன்னு இருக்குதுடா எனக்கு..!! போதுன்டா சாமி.. என்னால முடியாது இனிமே.. உன் ஆளை தேடுறோம்னு என் உசுரை தொலைச்சுருவேன் போல இருக்கு..!! போதும்.. இத்தோட நிறுத்திக்கலாம்..!!” சாலமன் சலிப்புடன் சொல்ல,

“எ..என்னடா இப்படி சொல்ற..??” அசோக்கின் குரல் உடைந்து போய் ஒலித்தது. இப்போது சாலமனுக்குமே அசோக்கின் மீது மெலிதான ஒரு பரிதாபம்.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மச்சி.. இது வேலைக்காவாது..!! அவ இந்த ஏரியாலதான் இருப்பான்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல..!!”

“இல்லடா.. அவ சொல்லிருக்குறா.. அவ வீட்டுக்கு எதுத்தாப்ல..”

“ம்க்கும்.. நல்லா சொன்னா.. என்னை பாடைல ஏத்துறதுக்கு..!! அவ ஏதோ ரோட்ல அந்த போர்டை பாத்துட்டு.. என் வீட்டுக்கு எதுத்தாப்லன்னு பொய் சொல்லிருப்பாடா.. நாமளும் அதை உண்மைன்னு நம்பிட்டு நாய் மாதிரி அலைஞ்சுட்டு இருக்கோம்..!!”

“சேச்சே.. மீரா அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாடா..!!” அசோக் அந்த மாதிரி அடம்பிடிக்க, இப்போது சாலமன் மீண்டும் டென்ஷன் ஆனான்.

“டேய்.. அப்புறம் எனக்கு வாயில நல்லா வந்துரும் ஆமாம்..!! மீராவாம் மீரா.. மசுரு..!!!! அந்த மீரான்ற பேரே ஒரு பெரிய பொய்தானடா.. பேர் மட்டுமா.. அவ அவளைப்பத்தி சொன்ன எல்லாமே பொய்தான..?? அப்புறம் எப்படி இதை மட்டும் உண்மைன்னு நம்புற நீ..?? உனக்கே இது பைத்தியக்காரத்தனமா தோணல..?? மொதல்ல அவளோட உண்மையான பேரை கண்டுபிடிடா.. அப்புறம் அவளை கண்டுபிடிக்கலாம்..!!”

சாலமன் பொரிந்து தள்ள.. அசோக் தளர்ந்து போனான்..!! சாலமன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த உண்மை.. அசோக்கின் புத்தியை அறைந்தது..!! என்ன பதில் சொல்வதென்று எதுவும் புரியவில்லை அவனுக்கு..!! சோகம் அப்பிய முகமும்.. சோர்ந்து போன கால்களுமாய்.. சொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான்..!! அவனது மனதைச் சூழ்ந்திருந்த அந்த மாயவகை அழுத்த மண்டலம்.. இப்போது இரக்கமே இல்லாமல் இறுக்க ஆரம்பித்திருந்தது..!!