எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“நெஜமா..??”

“நெஜமா..!!”

“அப்போ டாடி இனிமே நம்மள அடிக்க மாட்டாரா..??”

“அடிக்க மாட்டாரு..!!”

“ஹையா..!! ஜாலி..!!!”

பால்நிற பற்கள் பளீரிட சுஜி சந்தோஷத்தில் குதுகலித்தாள்.. ஆண்கள் மூவரும் அப்படியே அதிர்ந்து போய் அவளை பார்த்தார்கள்..!! அப்பா இறந்த செய்தியைக் கேட்டு ஒரு குழந்தை ஆனந்தம் அடைகிறது என்றால்.. ‘எப்படிப்பட்ட மோசமான ஒரு மனிதனாக அவன் இருந்திருப்பான்’ என்று.. உடனடியாக அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது..!! ஒரு வேதனையான உணர்வு அவர்களது இதயத்தை பிசைவதை அவர்களால் உணர முடிந்தது..!!

நிர்மலா மகளிடம் இருந்து பார்வையை விலக்கி.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டாள்..!! அவளுடைய கண்கள் இப்போது சற்றே கலங்கிப்போய் பளபளத்தன.. அந்த கலங்கிய கண்களை இமைகளால் இடுக்கி.. மிகக்கூர்மையாக அவரை ஒரு பார்வை பார்த்தாள்.. ஒருவித இறுக்கமும், விரக்தியும் கலந்த மாதிரியான குரலில் கேட்டாள்..!!

“வேற ஏதாவது கேக்கணுமா..??”

உண்மையில்.. ஸ்ரீனிவாச பிரசாத் நிர்மலாவிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க எண்ணியிருந்தார்.. ஆனால் அந்த கேள்விகள் எல்லாம் இப்போது அவரது நினைவடுக்கிலிருந்து தொலைந்து போயிருந்தன..!! குழந்தையின் குதுகலத்தில் ஒருவித திகைப்புக்கு சென்றிருந்தவர்.. அந்த திகைப்பு மாறாமலேயே..

“இ..இல்ல.. வேற ஒன்னும் இல்ல..!!” என்று தடுமாற்றமாக சொன்னவாறு, சேரில் இருந்து எழுந்துகொண்டார்.

அறையை விட்டு வெளியே வந்த ஒரு சில நிமிடங்களிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத் அந்த தடுமாற்றத்தை உதறியிருந்தார்.. மீண்டும் பரபரப்புடன் பணியில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்..!! அசோக்கிடம் தனித்து பேசுவதற்கு.. அதன்பிறகும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்..!! அடுத்த அறைக்கு சென்றவர், அங்கிருந்த தடயவியல் குழுவிடம், மேலும் சில உத்தரவுகள் பிறப்பித்தார்.. கார் ட்ரைவரை வரவழைத்து, ஏதோ ஒரு சந்தேகம் தீர்த்துக்கொண்டார்.. ‘வேன் எங்கே’ என்று கேட்டு, கனகராஜனை மீண்டும் டென்ஷன் ஆக்கினார்.. செல்ஃபோனில் யாரையோ அழைத்து, கெட்ட வார்த்தையில் திட்டினார்..!!

சுஜி தந்த அதிர்வில் இருந்து மீள்வதற்கு.. அசோக்கிற்கும் அந்த ஐந்து நிமிட நேரம் அவசியமாக இருந்தது..!! அறையை விட்டு வெளியே வந்தபிறகும்.. அந்தக்குழந்தையின் வெள்ளைச்சிரிப்பே.. திரும்ப திரும்ப அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது..!! பொறுப்பற்ற தேவராஜ் மாதிரியான ஆட்கள் மீதும்.. பணம் சேர்ப்பதற்காக, பல குடும்பங்களது உளநிம்மதியில் உலைவைக்கிற காசி மாதிரியான ஆட்கள் மீதும்.. கடுங்கோபம் பிறந்தது அவனுக்கு..!! சுஜி பற்றிய நினைவுடனே.. ஸ்ரீனிவாச பிரசாத் பணியாற்றும் விதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!

ஐந்து நிமிடங்கள் கரைந்து போயிருந்த வேளையில்.. வீட்டு வாசலில் DEVARAJ – IN என்று காட்டிக் கொண்டிருந்த, மரத்தாலான பெயர்ப்பலகையின் கைப்பிடியை பற்றி இழுத்து.. DEVARAJ – OUT என்று காட்டுமாறு அதை அசோக் மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. அவனுக்கு பின்பக்கமாக வந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. மெலிதாக அவனது தோளை தட்டினார்..!!

“வா அசோக்..!!”

என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திராமல்.. விடுவிடுவென முன்னால் நடந்தார்.. வீட்டை விட்டு வெளியேறினார்..!! உடனடியாய் சுறுசுறுப்பான அசோக்கும்.. வாசலில் நிரம்பியிருந்த கும்பலுக்குள் புகுந்து.. நெருக்கமாக அவரை பின்தொடர்ந்தான்..!!

“ஸ்டேஷனுக்கே போயிட்டியா..??”

“இல்ல ஸார்.. போற வழிலேயே உங்க கால் வந்துடுச்சு.. நேரா இங்க வந்துட்டேன்..!! எ..என்ன விஷயம் ஸார்.. எதுக்கு வர சொன்னீங்க..??”

“வா சொல்றேன்..!!”

மரநிழலில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை நோக்கி ஸ்ரீனிவாச பிரசாத் நடந்தார்..!! ஜீப்பை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. டேஷ்போர்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்தார்..!!

“தம்மடிக்கிறியா..??” சிகரெட் பாக்கெட்டை அசோக்கிடம் நீட்டினார்.

“இ..இல்ல ஸார்.. வேணாம்..!!”

அசோக் மறுத்துவிட.. ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் ஒரு சிகரெட் உருவி பற்ற வைத்துக் கொண்டார்.. வாகனத்தின் மீது வசதியாக சாய்ந்து கொண்டார்..!! புகையை மிக ஆழமாக நுரையீரலுக்குள் இழுத்தார்.. பிறகு.. குபுகுபுவென உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறே சலிப்பாக சொன்னார்..!!

“ப்ச்.. காலங்காத்தாலேயே இப்படி எழவு விழும்னு நெனச்சே பாக்கல..!! எப்படியும் இன்னும் நாலஞ்சு நாளைக்கு என் தாலிய அறுத்துருவானுக.. நின்னு பேசக்கூட எனக்கு நேரம் இருக்காது.. அதான் உன்னை இங்கயே வரசொல்லிட்டேன்..!! ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டனா..??”

“பரவால ஸார்..!!”

“ம்ம்..!! ஆக்சுவலா.. ஃபோன்லயே கூட மேட்டரை சொல்லிருக்கலாம் அசோக்.. ஆனா.. எனக்கென்னவோ நேரா சொல்றது பெட்டர்னு தோணுச்சு..!!” ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல, அசோக்கிடம் மெலிதான பதற்றம்.