“ப்ச்.. பொலம்பாத மம்மி.. ஃபோனை வையி மொதல்ல..!! நான் மத்தியானம் வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்..!!”
“…………..”
“ஆங்.. சாப்ட்டேன்.. சாப்ட்டேன்..!!”
கடுப்புடன் சொன்ன அசோக், காலை கட் செய்தான். அதற்குள் சாலமன் டீயுடன் வர, நான்கு பேரும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்துக் கொண்டார்கள். தேநீர் உறிஞ்சியவாறே.. உறிஞ்சலுக்கிடையே புகை ஊதியவாறே.. கம்ப்யூட்டர் சென்டர் திறக்கும்வரைக்கும்.. காலத்தை ‘கில்’ல ஆரம்பித்தார்கள்..!!
நேற்று மீரா கால் செய்து விஷயத்தை சொன்னதுமே.. அசோக்கின் நண்பர்கள் மூவரும் பதறிப் போனார்கள்..!! அவனுடைய செல்ஃபோனில் ரிங் சென்று கொண்டே இருக்க.. பயந்து போன மூவரும் வேணுவின் காரில் உடனடியாய் கிளம்பினர்..!! மீரா சொன்ன குறிப்பை உபயோகித்து.. மிக எளிதாகவே அசோக்கை கண்டுபிடிக்க முடிந்தது..!! மயக்கத்தில் இருந்தவனை.. கார் பின் சீட்டில் கிடத்தினர்..!! ‘பயப்படுறதுக்கு ஒன்னுல்ல..’ என்று மீரா சொல்லியிருந்தாலும்.. இவர்கள் மனம் சமாதானமாகாமல்.. அசோக்கை அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!! அவனை பரிசோதித்த டாக்டரும்.. மீரா சொன்னதையே திரும்ப சொன்னபிறகுதான்.. நிம்மதியாக மூச்சு விட்டனர்..!! ஹாஸ்பிட்டல் படுக்கையில் வாய்பிளந்து உறங்கிய அசோக்கை சுற்றி.. கன்னத்தில் கைவைத்தவாறு மூவரும் அமர்ந்து கொண்டார்கள்..!!
அசோக் குடும்பத்தாருக்கு விஷயத்தை சொல்லி.. அவர்களை களேபரப் படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர்..!! ‘அவசர வேலையா வெளியூருக்கு போயிருக்கான் ஆன்ட்டி.. நாளைக்கு காலைல வந்துடுவான்..’ என்று கிஷோர் பாரதிக்கு கால் செய்து சொன்னான்..!! மயக்கத்தில் கிடக்கிற நண்பனையே.. மற்ற மூவரும் கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்தனர்..!! என்ன நடந்திருக்கும் என்பதை.. கொஞ்சம் கூட அவர்களால் யூகிக்க இயலவில்லை..!! ‘இவனை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு.. எங்கே போய் தொலைந்தாள் அவள்..?? அசோக்கை மயக்கத்தில் வீழ்த்துக்கிற அளவுக்கு.. அப்படி என்ன அவசியம் அவளுக்கு..??’ எதுவுமே புரியவில்லை நண்பர்களுக்கு..!!
அதிகாலை மூணு மணி வாக்கில்தான் அசோக்குக்கு விழிப்பே வந்தது..!! அவன் எழுந்ததுமே.. சப்தம் கேட்டு விழித்து.. அவனை சூழ்ந்து கொண்ட நண்பர்கள்.. ‘மீரா எங்கடா..??’ என்று கேட்க எத்தனித்தனர்..!! ஆனால் அவர்களை முந்திக்கொண்டு.. அசோக் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க.. மூவரும் குழம்பிப் போயினர்..!!
அப்புறம்.. நடந்த விஷயங்களை எல்லாம் அசோக்கே நண்பர்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்..!! அப்படி சொல்கையில் அவனுடைய குரலில் தொனித்த வேதனையை.. அவர்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!! தாங்கள் விளையாட்டுத்தனமாய் விட்ட சவால்தான்.. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்பதை அறிய நேர்ந்ததும்.. அவர்களுக்குமே மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி..!! ‘எனக்கு இப்போவே மீராவ பாக்கனும்..’ என்று.. அந்த நேரத்திலேயே ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்ப முயன்ற அசோக்கை.. அதட்டி, அடக்கி, அரும்பாடு பட்டு.. ‘எல்லாம் காலைல பாத்துக்கலாம்டா.. இப்போ நிம்மதியா படுத்து தூங்கு..’ என்று சமாதானம் செய்து படுக்கவைத்தனர்..!!
அசோக்கின் மனதில் நிம்மதி எப்போதோ செத்துப் போயிருக்க.. அவனால் உறங்க முடியவில்லை..!! மீராவின் நினைவுகளே நெஞ்சமெங்கும் நிறைந்து போயிருக்க.. மனதுக்குள்ளேயே அழுதவாறு படுத்திருந்தான்..!! ஏதோ ஒரு நப்பாசையுடன் அவளுடைய எண்ணுக்கு கால் செய்து பார்த்தான்.. ஸ்விட்ச்ட் ஆஃப் என்று பதில் வர.. மொபைலை எறிந்தான்..!! தனது மெமரி கார்டை கூட அவள் உருவி சென்றிருப்பதை உணர்ந்து.. வயிறு எரிந்தான்..!! ‘ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டா.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?? உன்னை விட்ருவேன்னு நெனச்சியா..?? நாளைக்கே உன்னை தேடிக் கண்டு பிடிக்கிறனா இல்லையான்னு பாரு.. கண்டுபிடிச்சதும் உன் கன்னம் ரெண்டும் பழுக்குதா இல்லையான்னு பாரு..’ என்று மனதுக்குள்ளேயே கருவிகொண்டான்..!!
‘எப்போதடா பொழுது விடியும்’ என்று.. மோட்டுவளையை வெறித்தவாறே காத்திருந்தான்..!! விடிந்ததுமே.. களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்த நண்பர்களை.. அந்த அதிகாலையிலேயே அடித்துக் கிளப்பி.. இதோ.. காரை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் சென்டருக்கும் வந்துவிட்டான்..!!
நேரம் எட்டு மணியை நெருங்க ஆரம்பிக்கையில்.. அந்த இடத்துக்கு ஆட்கள் வருகை அதிகமாக இருந்தது..!! மார்னிங் பேட்ச் தேர்வு செய்திருந்த மாணவர்கள்.. குளித்தோ, குளிக்கமாலோ சென்டருக்கு வந்து சேர்ந்து.. சலிக்காமல் டெக்னிகல் விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்..!! சரியாக 7.55 க்கு.. உதட்டோரத்தில் அழகாக மச்சம் தாங்கிய அந்தப்பெண்.. ஆக்டிவாவில் ஸ்டைலாக வந்து இறங்கினாள்.. கடையை திறந்தாள்..!!
மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று சேர்ந்து.. அந்த ஆரவாரம் எல்லாம் சற்று அடங்கும்வரைக்கும்.. அசோக்கும் நண்பர்களும் அமைதியாக காத்திருந்தனர்..!! அப்புறம் சென்டருக்குள் நுழைந்து.. அந்த மச்சக்காரியை அணுகினர்..!! அவள் சாலமனின் முகத்தை பார்த்த பிறகுமே..
“என்ன கோர்ஸ் ஜாயின் பண்ண வந்திருக்கீங்க..??” என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டாள்.
“ஹிஹி.. இல்லைங்க.. நாங்க கோர்ஸ்லாம் ஜாயின் பண்ண வரல.!!” சாலமன் இளித்தான்.
“அப்புறம்..??”
“எங்களோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தங்க.. இந்த சென்டர்லதான்.. போன மாசம் வரை அனிமேஷன் கோர்ஸ் படிச்சாங்க..!!”
“சரி..!!”
“உங்க ரெகார்ட்ஸ்லாம் எடுத்து.. அவங்க அட்ரஸ் என்னன்னு கொஞ்சம் பார்த்து சொன்னீங்கன்னா.. நாங்க வந்த வேலை முடிஞ்சிடும்..!! உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு.. நாங்க கெளம்பிட்டே இருப்போம்..!!” சற்றே எகத்தாளமாக சொன்ன சாலமனை, அந்தப்பெண் எரிச்சலாக பார்த்தாள்.
“க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க.. இங்க வந்து அட்ரஸ் கேக்குறீங்க..??”
அந்தப்பெண் லாஜிக்காக கேள்வி கேட்க, சாலமன் இப்போது தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை கண்டதும், வேணு இப்போது இடையில் புகுந்து, அவளுக்கு உளறலாக பதில் சொன்னான்.