எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“நான்தான் சொன்னேன்ல.. உன்னால முடியாது..!!”

“மீரா.. எ..எனக்கு.. எ..எனக்கு ஒரு மாதிரி..”

அசோக் தடுமாற்றத்துடனே தலையை பிடித்துக் கொண்டான். மீரா இப்போது தனது மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். அசோக்கை ஏறிட்டு சொன்னாள்.

“நீ ஜூஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சு அசோக்.. அப்படித்தான் இருக்கும்..!!”

“எ..என்ன சொல்ற..”

“வேலியம் 20mg..!! நீ ஹேண்ட் வாஷ் பண்ண போனப்போ.. என் பேக்ல இருந்து ரெண்டு டேப்லட் எடுத்து.. உன் ஜூஸ்ல கலந்துட்டேன்..!!”

“வா..வாட்..??”

“கொ..கொஞ்சம் ஹெவி டோஸேஜ்.. ந..நல்லா தூக்கம் வரும்.. அவ்வளவுதான்..!!”

மீரா அழுகுரலில் சொன்னாள். அசோக்குக்கு இப்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மீரா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிற நிலைமையில் கூட அவன் இல்லை. 99% மயக்கத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அவனது மூளை உறங்கிப்போக தயார் நிலையில் இருந்தது. அந்த உறக்கத்தை, அசோக் தலையை உலுக்கி, உடும்புப்பிடியாக உதற முயன்றான். குழம்பிப்போன மூளை அவனுடைய மனதில் பல குழப்பப்படங்களை திரையிட்டது. உடல் தடுமாறியது.. ஆதரவாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி, அவனது கைவிரல்கள் காற்றில் அலைபாய்ந்தன.. இமைகள் திறந்து திறந்து மூடிக்கொண்டன..!! மீரா அவனையே ஒருவித பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுவாதீனத்தை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்த அசோக்.. அப்படியே தலையை சுழற்றி ஆகாயத்தை பார்த்தான்..!! அவனது உச்சந்தலைக்கு மேலே அந்த பருந்து.. வாய்கிழிய கத்தியபடியே வட்டமடித்துக் கொண்டிருந்தது..!! அவனுக்குள் இப்போது ஒரு அர்த்தமற்ற உந்துதல்.. அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும் என்று..!! மெல்ல திரும்பினான்.. கால்கள் தள்ளாட நடை போட்டான்.. ஆனால் ஒரு நான்கு அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்பே.. கால்கள் மடங்கிப்போய் அப்படியே கீழே சரிந்தான்..!!

“அசோக்..!!!”

மீரா அலறிக்கொண்டே அவசரமாய் நகர்ந்து, அசோக் தரையில் விழுவதற்குள் அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவனை கைத்தாங்கலாக அழைத்து சென்று, அருகில் கிடந்த மரப்பெஞ்சில் அமரவைத்தாள். மயக்கத்தில் தத்தளித்த அசோக்கின் முகத்தை, தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். காதலனின் நிலையைக்கண்டு, அவளுக்கு இப்போது அழுகை பீறிட்டு கிளம்பியது. நீர் கசிகிற கண்களுடன், அசோக்கின் தலைமுடியை கோதிவிட்டவாறே..

“ஒ..ஒன்னுல்லடா.. ஒன்னுல்ல..!! நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கப் போற.. வேற ஒன்னுல்ல..!! தூங்கி எந்திரிச்சா.. எல்லாம் சரியாப் போகும்..!! தூங்கு..!!” என்றாள்.

அவனுடைய நெற்றியில் உதடுகள் பதித்து முத்தமிட்டாள். அசோக் இமைகளை திறக்க முடியாமல் திறந்து, திணறலான குரலில் கேட்டான்.

“ஏ..ஏன்.. ஏன் மீரா..??”

“ஸாரிடா.. ஸாரி..!! எதுவுமே சொல்லாம உன்னைவிட்டு பிரிஞ்சு போக எனக்கு மனசு வரல.. ஃபோன்ல என் காதலை சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.. கடைசியா ஒருநாள் உன்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..!! நான் விலகிப்போறேன்னு சொன்னா.. நீ விட மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதான்..!! என்னை மன்னிச்சிடுடா..!!”

“போ..போகாத மீரா..!!”

“இல்ல அசோக்.. உன்கூட சேர்ந்து வாழறதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லடா.. நான் போறேன்..!!”

“………………..”

“நா..நான் .. நான் போனப்புறம் என்னை மறந்துடணும்.. என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..?? உ..உனக்கு.. உனக்கு என்னைவிட, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணா ஒருத்தி வருவாடா.. உன் நல்ல மனசுக்கு, வானத்துல இருந்து குதிச்ச தேவதை மாதிரி ஒருத்தி வருவா.. அ..அவளைக் கட்டிக்கிட்டு.. எந்த குறையும் இல்லாம.. ந..நல்லா.. நல்லா சந்தோஷமா வாழனும்.. என்ன..??”

விம்முகிற குரலில் சொன்ன மீரா, இப்போது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றினாள். அசோக்கின் சட்டைப்பையில் அதை திணித்தாள்.

“பாட்டிட்ட குடுத்திடு.. இதை போட்டுக்க எனக்கு தகுதி இல்லன்னு சொல்லிடு..!! வீட்ல எல்லார்ட்டயும்.. இந்தப்பாவியை முடிஞ்சா மன்னிச்சிட சொல்லு..!!”

மீரா பேசிக் கொண்டிருக்கையிலேயே அசோக் ஏதோ அவளிடம் சொல்ல முயன்றான். ஆனால் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன. அவன் பேச தவிப்பதை உணர்ந்த மீரா,

“என்னம்மா.. சொல்லு..!!” என்றவாறே தனது காதை அவனது உதடுகளுக்கு அருகே எடுத்து சென்றாள். அசோக் இப்போது உதடுகள் பிரித்து, ஈனஸ்வரத்தில் மெல்ல முனகினான்.

“எ..எனக்கு நீ வேணும் மீரா..!!”

சொல்லும்போதே அவனுடைய கண்களின் ஓரமாய் கண்ணீர் கொப்பளித்து ஓடியது..!! அவ்வளவுதான்..!! மீராவுக்கு அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை..!! அம்பு தைத்த பறவை போல.. மடியில் வீழ்ந்து கிடந்த காதலனின்.. பரிதாபகரமான வார்த்தைகள்.. அவளுடைய இதயத்தில் ஈட்டியை பாய்ச்சின..!! விழிகளில் கண்ணீர் ஆறாக ஓட.. ‘ஓஓஓஓஓ’ என்று பெருங்குரலில் ஓலமிட்டு அழுது அரற்றினாள்..!! மார்பில் புதைந்திருந்த அசோக்கின் முகத்தை.. மேலும் இறுக்கிக் கொண்டாள்..!! அவனுடைய நெற்றியில் ‘இச்.. இச்..’ என்று முத்தங்களை வாரி இறைத்தவாறே.. உடைந்துபோன குரலில் சொன்னாள்..!!

“இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!”