எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

“வா..வாட்..??”

“Yes ashok.. Today is our last day.. இனிமே நாம மீட் பண்ணிக்கப் போறது இல்ல..!!”

“எ..என்ன சொல்ற நீ..??”

“நான் போறேன் அசோக்.. உன்னை விட்டு போறேன்.. தூரமா போறேன்..!! போறதுக்கு முன்னாடி.. என் மனசுல இருந்த காதலை.. உன் கண்ணைப் பார்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு இது போதும்..!!”

மீரா அவ்வாறு உறுதியான குரலில் சொல்ல, அசோக்கின் மனதில் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே அவனுக்கு இருந்த தலைச்சுற்றலோடு புதிதாக இந்த உணர்வும் சேர்ந்து கொள்ள, அவன் தடுமாறினான். நிலையாக நிற்க கூட முடியாத அளவுக்கு, அவனுடைய கால்களில் ஒரு நடுக்கம். மூளைக்குள் ஏதோ பலவித குழப்ப மின்னல்கள் வெட்ட, திணறலாகவே அவனால் பேச முடிந்தது.

“வெ..வெளையாடாத மீரா.. ஏ..ஏன் போறேன்னு சொல்ற..??”

“வெளையாண்டது போதும்னுதான்டா போறேன்னு சொல்றேன்..!! உன் மேல ஏதோ ஒரு வெறுப்புல இந்த வெளையாட்டை ஆரம்பிச்சுட்டேன்.. உன் முன்னாடி இந்த மாதிரி தோத்துப்போய் நிக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா இதை ஆரம்பிச்சிருக்க மாட்டேன்..!! போதும்.. வெளையாட்டை முடிச்சுக்கலாம்..!! நான் போயிடுறேன்..!!” மீரா அழுகுரலில் சொல்ல, அசோக்குக்கு இப்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

“பைத்தியமா உனக்கு..?? நீ எதுக்கு போகணும்..??”

“நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!! உன் காதலுக்கு நான் தகுதியானவ இல்ல.. உன் வீட்டுக்கு மருமகளா வர, எனக்கு அருகதை இல்ல..!!”

“ஏ..ஏன் மீரா இப்படிலாம் பேசுற..?? நீ.. நீ என்ன பாவம் பண்ணின..??”

“அதெல்லாம் உனக்கு தெரிய வேணாம் அசோக்.. சொல்றதுக்கு எனக்கும் விருப்பமும் இல்ல..!! ஒரு திமிர் புடிச்சவ உன்கூட வெளையாட ட்ரை பண்ணினா.. அப்புறம் உன் காதலுக்கு முன்னாடி தோத்துப்போய் காணாமப் போயிட்டா..!! அந்த அளவுக்கு நீ என்னைப்பத்தி தெரிஞ்சுக்கோ.. போதும்..!!”

“இல்ல.. எனக்கு தெரிஞ்சாகனும்.. சொல்லு..!!”

“ம்ஹூம்..!!”

“சொல்லலேன்னா.. உ..உன்னை இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன் மீரா..!!” சொல்லிக்கொண்டே அசோக் மீராவின் புஜத்தை இறுகப் பற்றினான்.

“அது உன்னால முடியாது அசோக்.. You can’t stop me..!!”

“Yes.. I can..!!!! நீ பாட்டுக்கு பைத்தியம் மாதிரி ஏதோ உளறிட்டு போறேன்னு சொல்வ.. நான் பாத்துட்டு சும்மா இருப்பேன்னு நெனச்சியா..?? நோ.. உன்னை போக விட மாட்டேன்..!!”

“இ..இல்ல அசோக்.. உன்னால முடியாது..!!”

“ஏன் முடியாது..?? நான் நெனச்சா.. உ..உன்னை.. இங்க.. இ..இப்படியே..”

ஆரம்பித்ததை முடிப்பதற்கு முன்பே, அசோக்கின் தலை சுற்றல் உச்சபட்சத்தை எட்டியது. உடலும் மூளையும் சுத்தமாக சோர்ந்துபோன மாதிரி ஒரு உணர்வு. இமைகள் அவனுடைய கட்டுப்பாடு இல்லாமலே செருக ஆரம்பிக்க, கால்கள் தள்ளாடின. உடலின் எடை முற்றிலும் குறைந்து போய், அப்படியே காற்றில் மிதப்பது மாதிரி தோன்றியது அவனுக்கு. மிகவும் கஷ்டப்பட்டு விழிகளை திறந்து, மீராவை பரிதாபமாக பார்த்தான்.

அவனுடைய இந்த நிலையைக்கண்டு, மீரா கொஞ்சம் கூட அதிர்ந்து போன மாதிரி தெரியவில்லை. அவளுடய கண்களில் மட்டும் கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது புஜத்தை பற்றியிருந்த அசோக்கின் பிடி, இப்போது வலுவிழந்து போயிருக்க, மிக எளிதாக அந்தப் பிடியில் இருந்து விலகிக் கொண்டவாறே, உதடுகள் படபடக்க சொன்னாள்.