எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 52

அசோக் கொஞ்சம் கொஞ்சமாய்.. முழுமயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தான்..!! எப்படியாவது விழித்திருக்கவேண்டும் என்று அவன் செய்த பிரயத்தனங்கள் எல்லாம்.. உள்ளே சென்றிருந்த ரசாயானத்தினால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன..!! அவனுடைய இமைகள் அவனது கட்டுப்பாட்டையும் மீறி.. மெல்ல மெல்ல மூடிக்கொள்ள ஆரம்பித்தன..!! அவனது உதடுகள் மட்டும்.. ‘போயிடாத மீரா.. போயிடாத..’ என்று திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!! மீராவோ கண்களில் நீர் வழிய.. பிஞ்சுக்குழந்தையை நெஞ்சில் போட்டு தாலாட்டும் தாயைப்போல.. அசோக்கை தனது மார்புத்தொட்டிலில் இட்டு.. அவன் மயக்கத்திற்கு செல்லும்வரை.. இப்படியும் அப்படியுமாய் இதமாக அசைத்து கொடுத்தாள்..!!

அசோக் தூங்கிப் போனான்..!! அப்புறமும் சிறிது நேரம்.. மீரா அவனை தனது மார்போடு சேர்த்து தாலாட்டிக் கொண்டிருந்தாள்.. அழுதவாறே அவனது தலையை இதமாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு நேரமாவதை உணர்ந்ததும்.. அவனை மெல்ல இருக்கையில் கிடத்திவிட்டு.. எழுந்தாள்..!! அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை உருவினாள்..!! கிஷோரின் நம்பர் தேடிப்பிடித்து கால் செய்தாள்..!!

“ஆங்.. சொல்லு மச்சி.. என்ன சொல்றா வீரலட்சுமி..??” என்று கிண்டலாக ஆரம்பித்த கிஷோரை கண்டுகொள்ளாமல்,

“கிஷோர் அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!” என்றாள் இறுக்கமான குரலில்.

“மீ..மீரா.. நீ..?? நா..நான் அசோக்குனு..”

“பரவாலண்ணா..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல..??”

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”

“உள்ள என்டர் ஆனதும்.. லெஃப்ட்ல ஒரு பாதை போகும்.. அதுலயே போனா.. டெட் என்ட்ல ஒரு வுடன் பெஞ்ச் இருக்கும்.. அந்த பெஞ்ச்ல அசோக் மயக்கமா படுத்திருக்கான்.. நீங்க இங்க கொஞ்சம் வந்து.. அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கண்ணா..!!”

“வா..வாட்..?? ம..மயக்கவா..?? என்னாச்சும்மா..??” கிஷோர் அடுத்த முனையில் அதிர்ந்து கொண்டிருந்தான்.

“பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. நான்தான் தூக்க மாத்திரை குடுத்து தூங்க வச்சிருக்கேன்..!!”

“நீ..நீயா..?? என்ன சொல்ற..??”

“கொஞ்ச நேரம் நல்லா தூங்குவான்.. அவனை ரெஸ்ட் எடுக்க விடுங்க..!! தூங்கி எந்திரிச்சதும் கேளுங்க.. அவனே எல்லாம் சொல்லுவான்..!!”

“எ..என்னம்மா சொல்ற நீ.. எனக்கு ஒன்னும் புரியல..!!”

“பேசிட்டு இருக்க நேரம் இல்லண்ணா.. சீக்கிரம் கெளம்பி வாங்க.. வேணு அண்ணாவோட காரை எடுத்துட்டு வாங்க..!!”

சொல்லி முடித்த மீரா.. காலை உடனே கட் செய்தாள்..!! கட் செய்ததுமே.. அசோக்குடைய செல்ஃபோனின் பக்கவாட்டில் இருந்த தகட்டினை விலக்கி.. உள்ளே செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை.. விரல் நகத்தினால் உருவி எடுத்தாள்..!! அசோக் அவளுடைய செல்போனில் இருந்து.. அவனது செல்ஃபோனுக்கு படங்களை எல்லாம் பிரதி எடுத்துக்கொண்டதை.. முன்கூட்டியே அறிந்தவள் போல செயல்பட்டாள்..!!

இப்போது அசோக்கின் செல்ஃபோனுக்கு கிஷோரின் நம்பரில் இருந்து கால் வந்தது..!! அதை கண்டுகொள்ளாமல்.. அலறுகிற அந்த ஃபோனை.. அசோக்கின் பேன்ட் பாக்கெட்டிலேயே திணித்தாள்..!! இறுதியாகப் பார்க்கிறோம் என்ற எண்ணத்துடன்.. அசோக்கின் முகத்தை காதலும், ஏக்கமுமாய் ஏறிட்டாள்..!! அவன் முகத்திற்கு முன்பாக ரீங்காரமிட்ட ஈ ஒன்றினை.. புறங்கை வீசி விரட்டினாள்..!! கலைந்திருந்த அவனது தலைமுடியை சரி செய்தாள்..!! பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டவள்.. அவனுடைய நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு எழுந்தாள்..!!

சற்று நேரத்திற்கு முன்பு நடந்து வந்த பாதையிலேயே.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய பார்வை நிலைகுத்திப்போன மாதிரி.. அந்தரத்தை வெறித்தது..!! வாழ்வில் இருந்த ஒற்றை சந்தோஷத்தையும் இழந்துவிட்ட விரக்தி.. அவளின் முகத்தில் விரவிக் கிடந்தது..!! அவளது கால்கள் மட்டும் அனிச்சையாக.. அடிமேல் அடிவைத்துக் கொண்டிருந்தன..!! கைகள் அவளுடைய செல்ஃபோனை பிரித்தன.. உள்ளே பொதிந்திருந்த சிம்கார்டை உருவின..!! ஏற்கனவே வைத்திருந்த அசோக்கின் மெமரி கார்டுடன் சேர்த்து.. இரண்டினையும்.. மண்டிக்கிடந்த புதருக்குள் வீசி எறிந்தவாறே நடையை தொடர்ந்தாள்.. மீரா..!!

அடுத்த நாள் காலை.. நேரம் ஏழு மணியை தாண்டி இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது..!! வேணுவின் கார் குமரன் காலனி மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பி.. புழுதியை கிளப்பியவாறே பங்கஜம் ரோட்டில் நுழைந்தது..!! மேலும் ஒரு இருநூறு அடி தூரம் ஓடியதும்.. மெல்ல மெல்ல வேகம் குறைந்து.. பிறகு சரக்கென ப்ரேக் மிதிக்கப்பட.. சாலையோரமாய் க்றீச்சிட்டு நின்றது..!! கார் நின்றதுமே.. பின் சீட்டில் அமர்ந்திருந்த அசோக் அவசரமாய் கீழே இறங்கினான்.. கதவை அறைந்து சாத்தினான்..!! தலையை சற்றே உயர்த்தி அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்..!!