கண்ணாமூச்சி 4 57

“ச்சரக்க்க்…!!”

மீண்டும் ஒரு தீக்குச்சி பற்றவைத்துக்கொண்டு அறைக்குள் மேலும் முன்னேறினாள்.. உள்ளேயிருந்த பொருட்கள் எல்லாம் இப்போது மங்கலாக புலப்பட்டன.. உடைந்த கட்டில் நாற்காலிகள், துருப்பிடித்த இரும்பு உபகரணங்கள், சிதைந்துபோன ரப்பர் குழாய்கள், காலியான அட்டைப் பெட்டிகள்..!! கையில் தீக்குச்சி வெளிச்சத்துடன் அப்படியே உடம்பை மெல்ல சுழற்றினாள் ஆதிரா.. சுற்றிலும் அடர் இருட்டு.. அவள் நின்றிருந்த இடத்தில் மட்டும் சொற்ப வெளிச்சம்..!! அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல அந்த அறைக்குள் நகர.. இருள் அப்பியிருந்த ஒரு மூலையில்.. இப்போது இரண்டு சிவப்பு விளக்குகள் பளிச்சென்று மின்னின..!!

“ஆஆஆவ்வ்வ்..!!”

முதுகுத்தண்டு சட்டென சில்லிட்டுப்போக.. ஆதிரா வாய்விட்டே கத்திவிட்டாள்..!! ஆதிரா அவ்வாறு கத்தியதும்.. அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தடதடவென உருட்டிக்கொண்டு ஓடியது அந்த முயல்..!! இருட்டுக்குள் செந்நிறத்தில் மின்னியது அந்த முயலின் கண்கள்தான் என்பதை.. ஓரிரு வினாடிகள் கழித்துதான் ஆதிரா உணர்ந்துகொண்டாள்..!! அதை உணர்ந்து அவள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையிலேயே.. அந்த முயல் சுவற்றோடு ஒட்டி நின்ற மரஅலமாரியின் இடுக்கில் சென்று மறைந்தது..!! உள்ளே சென்ற வேகத்தில்..

“க்க்கீச்ச்..!!” என்று ஈனஸ்வரத்தில் சப்தம் எழுப்பியது.

ஆதிராவிடம் இப்போது ஒரு பதைபதைப்பு.. அலமாரியின் நெருக்குதலில் இருந்து அந்தமுயலை விடுவிக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு உந்துதல்.. வெளிச்சம் தீர்ந்த தீக்குச்சியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள்..!! இருளுக்குள் தெரிந்த அலமாரியின் பிம்பத்தை நெருங்கினாள்.. அதை நகற்ற முயன்றாள்.. முடியவில்லை.. கடினமாக இருந்தது..!! அப்படியே கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.. ஒருகையை மட்டும் அலமாரியின் பக்கவாட்டில் நீட்டி.. அப்படியே இருட்டுக்குள் தடவி தடவி.. அலமாரிக்கும் சுவற்றுக்கும் இருந்த குறுகலான இடைவெளியில் கையை நுழைத்தாள்.. இப்படியும் அப்படியுமாய் மெல்ல துழாவினாள்.. அந்த முயல் அகப்படுகிறதா என்று பார்த்தாள்..!!

அவளுடைய விரல்களில் ஏதோ வழுவழுப்பாய் தட்டுப்பட்டது.. கையை சுருக்கி அதை கப்பென பற்றிக்கொண்டாள்..!! ‘இது முயல் இல்லையே’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. ‘க்க்கீச்ச்.. க்க்கீச்ச்..!!’ என்று வாசலில் ஒரு சப்தம்..!! அத்தனை நேரம் அவளை அலையவிட்ட அந்த முயல்.. இப்போது அறையை விட்டு வெளியேறி, வராண்டாவில் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தது..!!

அந்தமுயலுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் ஆதிராவிடம் ஒரு நிம்மதி.. கையை அலமாரிக்கு பின்புறமாக செருகியிருந்தவளிடம், மெலிதான ஒரு புன்னகை..!! ஓரிரு வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவள்.. அப்புறம் கையை மெல்ல வெளியே இழுத்தாள்.. அந்தக்கை பற்றியிருந்த பொருளும் அதனுடன் வெளியே வந்தது.. அது என்ன பொருள் என்பது இருட்டுக்குள் தெளிவாக புலப்படவில்லை..!!

“ச்சரக்க்க்…!!”

ஆதிரா மீண்டும் ஒரு தீக்குச்சி உரசினாள்.. அதன் வெளிச்சத்தில் கையோடு வந்த பொருள் மீது ஆர்வமாக பார்வையை வீசினாள்..!! அது.. ஒரு மர பொம்மை.. சிறுவயதில் ஆதிராவும் தாமிராவும் பந்தயப் பொருளாக வைத்து விளையாண்ட அதே மாத்ரியோஷ்கா மர பொம்மை..!!!

3 Comments

  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Comments are closed.