கண்ணாமூச்சி 4 48

“நல்லா தூங்கிட்டு இருந்திங்க.. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சேன்..!!”

“ம்ம்.. இனிமே இப்படிலாம் பண்ணாத.. புரியுதா..??”

“ச..சரித்தான்..!!”

“உனக்கு ரொம்ப வீக்கான ஹார்ட் ஆதிரா.. இந்த மாதிரி அட்வென்சர்லாம் உனக்கு வேண்டாம்.. ஹாஹா.. ஓகேவா..??” சிபி அந்தமாதிரி கேலிச்சிரிப்புடன் சொல்ல,

“ஹாஹா.. சரி..!!” ஆதிராவும் இயல்புக்கு திரும்பி புன்னகைத்தாள்.

“பெட்க்கு போலாமா..??”

“ம்ம்..!!”

“வா.. நானே உன்னை தூக்கிட்டு போறேன்..!!”

“ஐயோ.. வேணாம்த்தான்..!!”

ஆதிரா பதறிக்கொண்டிருக்கும்போதே சிபி அவளை அலாக்காக கைகளில் அள்ளிக்கொண்டான்..!! அவள் நாணத்துடன் சிணுங்க, அவன் குறும்புடன் சிரித்தவாறே.. குழந்தையைப்போல அவளை தூக்கிக்கொண்டு படியேறினான்..!!

அதே நேரம்.. பாறையில் அமர்ந்திருந்த அந்த உருவம் இப்போது படக்கென ஜன்னலுக்கருகே தோன்றியது.. கண்ணாடி ஜன்னலில் கைகளை விரித்து வைத்தவாறு கருப்பு பிம்பமாக காட்சியளித்தது.. படிக்கட்டில் செல்கிற ஆதிராவையும், சிபியையுமே உர்ரென்று முறைத்து பார்த்தது..!! வினோதமான ஒரு சப்தம் அந்த உருவத்திடம் இருந்து வெளிப்பட்டது..!!

“க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்..!!!”

அகழியில் காவல் நிலையம் கிடையாது.. களமேழி காவல் சரகத்தின் கீழ்தான் அகழி கிராமம் வரும்.. அங்குதான் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது..!! களமேழி சற்றே பெரிய ஊர்.. தாலுகா ஆபீஸ், தாசில்தார் ஆபீஸெல்லாம் அங்குதான்.. கலைக்கல்லூரி கூட ஒன்று உண்டு.. அகழியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது..!!

காலையிலேயே களமேழி காவல் நிலையத்துக்கு கால் செய்து.. இன்ஸ்பெக்டரின் இருப்பு நிலவரத்தை அறிந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! காலை உணவு அருந்தியபிறகு கணவனுடன் காரில் கிளம்பினாள்..!! மலைப்பாதையில் 15 கி.மீ கடந்து களமேழி வந்து சேர ஒருமணி நேரம் ஆகிப்போனது..!! ஒரு சிறிய குன்றின்மேல்.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து.. ஓட்டுக்கூரையும், சிவப்புப்பூச்சுமாக.. பனிசூழ காட்சியளித்தது களமேழி காவல் நிலையம்..!! காவல் நிலையத்துக்கு வெளியிலேயே காரை பார்க் செய்துவிட்டு.. கணவனும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள்..!!

“நாங்க அகழில இருந்து வர்றோம்.. இன்ஸ்பெக்டரை பாக்கணும்..!! கா..காலைல கால் பண்ணிருந்தோம்..!!”

“ஓ.. நீங்கதானா அது..?? இப்போ வந்துடுவாரு.. வெயிட் பண்ணுங்க..!!”

கான்ஸ்டபிள் சொன்னதும்.. ஓரமாக கிடந்த மரபெஞ்சில் ஆதிராவும் சிபியும் அமர்ந்துகொண்டார்கள்.. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கட்டிடத்தின் உட்புறத்தை அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்..!! ஸ்வெட்டரும் மங்கி குல்லாவும் அணிந்திருந்த கான்ஸ்டபிள்கள் மந்தமாகவே இயங்கிக் கொண்டிருந்தனர்.. அலுவல் எதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை.. அரட்டைதான் பிரதானமாக இருந்தது..!!

அவர்கள் சென்றதிலிருந்து அரைமணி நேரம் கழித்துதான் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்குள் இருப்பார்.. முன்புற தலையில் நிறைய முடிகளை இழந்திருந்தார்..!! முகத்தில் ஒரு இறுக்கம்.. கண்களில் ஒரு கூர்மை..!! அவர் உள்ளே நுழைந்ததும் ஸ்டேஷன் அப்படியே அமைதியாகிப் போனது.. கான்ஸ்டபிள்கள் அவரிடம் தயங்கி தயங்கித்தான் பேசினர்.. மிகவும் கடுமையானவர் என்று அதிலேயே புரிந்தது..!!

வந்ததும் கான்ஸ்டபிள்களுக்கு ஏதேதோ உத்தரவுகள் பிறப்பித்தார்..!! இவர்கள் வந்திருப்பதை கான்ஸ்டபிள் ஒருவர் நினைவுபடுத்தியதும்.. ஒருமுறை திரும்பி இந்தப்பக்கம் பார்த்தார்..!! மேலும் சிறிது நேரம் கழித்துத்தான் இவர்களை தனது அறைக்கு அழைத்தார்.. ‘என்ன விஷயம்?’ என்று பொதுவாக விசாரித்தார்.. இவர்களும் வந்த விஷயத்தை சொன்னதும், ஒருசில வினாடிகள் அமைதியாகிப் போனார்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன்.. ஏளனமான குரலில் ஆரம்பித்தார்..!!

“அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..?? காத்து அடிச்சா குறிஞ்சி.. கதவு அசைஞ்சா குறிஞ்சி.. மரத்தை பாத்தா குறிஞ்சி.. மலையை கண்டா குறிஞ்சி..!! எப்பத்தான் எல்லாம் திருந்த போறாய்ங்க..??”

“………………………..” ஆதிராவும் சிபியும் அமைதியாகவே இருந்தனர்.

“எவளாவது எவன்கூடயாவது ஓடிப்போயிருப்பா.. இவய்ங்க குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிட்டு திரிவாய்ங்க..!! கடன் தொல்லை தாங்காம எவனாவது ஊரைவுட்டு போயிருப்பான்.. மகனும் மருமகளும் சேந்து வயசானவரை அடிச்சு தொரத்திருப்பாய்ங்க.. பரிச்சைல பெயிலாயிட்டு ஒரு சின்னப்பய மெட்ராஸ்க்கு ரயில் ஏறிருப்பான்..!! இவய்ங்கட்ட போய் கேளுங்க.. எல்லாத்துக்கும் குறிஞ்சி குறிஞ்சிம்பாய்ங்க..!! உங்க ஊர்க்காரய்ங்கள நெனச்சாலே எரிச்சலா இருக்குயா..!!”

“அ..அப்போ.. குறிஞ்சின்னு ஒரு விஷயமே இல்லைன்றீங்களா..??” தயக்கமாகத்தான் கேட்டாள் ஆதிரா.

“சத்தியமா இல்லை.. இந்த ஆவி, பேய், பிசாசுலலாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை கெடையாது..!! சாதாரணமா நடக்குறதுக்கெல்லாம் இவய்ங்க பேய்ச்சாயம் பூசுறாய்ங்க..!!”

“ம்ம்.. அப்படியே வச்சுக்கிட்டாலும்.. இத்தனை பேர் காணாம போயிருக்காங்களே.. அதுக்கெல்லாம்..”

“இத்தனை பேர் காணாம போயிருக்காங்க, அத்தனை பேர் காணாம போயிருக்காங்கன்னு நீங்கதான் சொல்லிட்டு திரியிரிங்க.. எங்களுக்கு என்ன தெரியும்..?? இதுவரை எங்களுக்கு வந்திருக்குற கம்ப்ளயின்ட் எத்தனை தெரியுமா.. நாலே நாலு.. அதுல உங்க தங்கச்சி கேஸ் ஒன்னு..!!”

3 Comments

Add a Comment
  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *