கண்ணாமூச்சி 4 48

ஆதிராவின் பதிலை எதிர்பாராமலே காரை நோக்கி ஓடினான் சிபி.. உதட்டில் ஒரு புன்னகையுடன் அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! ‘அப்படி என்னதான் இருக்கிறது இந்த பட்டாம்பூச்சியிடம்.. எப்போது எங்கே பார்த்தாலும் இப்படி குழந்தையாகி விடுகிறானே..?’ என்று நினைத்துக் கொண்டாள்..!! அதேநேரம்.. கணவனுடைய மென்மையான ரசனையும், மிருதுவான இயல்பும்.. அவளுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது..!!

“ச்சத்த்..!!”

திடீரென அருகே அந்த சப்தம் கேட்க.. ஆதிரா சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினாள்..!! அப்புறம் தனது புடவைத் தலைப்பை பார்த்ததும்தான் விஷயம் புரிந்தது அவளுக்கு.. ஏதோ ஒரு பறவையின் எச்சம்..!!

“ஐயே..!!”

என்று முகத்தை சுளித்தாள்..!! தலையை அண்ணாந்து பார்த்தாள்.. மேலே இரண்டு செங்கால் நாரைகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன..!! ஓரிரு வினாடிகள் அவஸ்தையாக நெளிந்தாள்..!! கணவனைப் பார்த்தாள்.. அவன் காருக்குள் புகுந்திருந்தான்.. கையை பார்த்தாள்.. கிண்ணம் காலியாகிற நிலையில் இருந்தது..!! நடந்து சென்று அந்த கிண்ணத்தை குப்பைக்கூடையில் எறிந்தாள்.. புடவைத்தலைப்பை தனித்துப் பிடித்தவாறே ஆற்றுப்பக்கமாக நகர்ந்தாள்..!!

“ஹேய்.. என்னாச்சு..??” எதிரே வந்த சிபி ஆதிராவை கேட்டான்.

“நாரை பொடவைல எச்சம் போட்ருச்சு அத்தான்..!!”

“ஹாஹா.. ஓகே ஓகே.. போய் வாஷ் பண்ணு போ..!!”

சிரிப்புடன் சொல்லிவிட்டு.. பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுக்க விரைந்தான் சிபி..!! ஆதிரா ஆற்றை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.. நடக்கும்போதே தலையை நிமிர்த்தி சிங்கமலையை ஒருமுறை பார்த்தாள்..!! மலையுச்சியில் பற்கள் தெரிய கர்ஜித்தவாறு சீற்றமான சிங்கமுக சிலை.. அதைச்சுற்றி வளர்ந்திருக்கிற அடர்த்தியான பச்சை மரங்கள்.. சரேலென செங்குத்தாக ஆற்றை நோக்கி இறங்கும் மலைச்சரிவு..!! ஊருக்கு தீங்கு செய்த குறிஞ்சியை ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து தீயிட்டு கொளுத்தியபோது.. அவள் அந்த மலையுச்சியில் இருந்துதான் இந்த குழலாற்றில் குதித்தாள் என்று அகழியில் கதை சொல்வார்கள்.. அது இப்போது ஆதிராவுக்கு ஞாபகம் வந்தது..!!

ஆற்றை அணுக மரத்தாலான மேடை போடப்பட்டிருந்தது அந்த இடத்தில்.. ஆற்றின் நீர்வரத்து அதிகமாக இருக்க, மேடைக்கு அருகாகவே நீர் பாய்ந்து கொண்டிருந்தது..!! ஆதிரா அந்த மேடையில் நடந்து சென்றாள்.. அதன் அடுத்த முனையை அடைந்ததும் அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தாள்..!! குழலாறு சலனமில்லாமல் குழைவாக ஓடிக்கொண்டிருந்தது.. சூரியக்கதிர்கள் ஆற்றுநீரில் மோத, நீர்ப்பரப்பெங்கும் பாதரசக்கீற்றுக்கள்..!!

ஆதிரா புடவைத்தலைப்பை நீரில் நனைத்து சுத்தம் செய்தாள்.. அப்படியும் இப்படியுமாய் அதைப்போட்டு கசக்கினாள்.. சிறிது நேரத்துக்குப் பின் திருப்தி வந்ததுமே கசக்குவதை நிறுத்தினாள்.. புடவையை சரி செய்துகொண்டாள்.. இடுப்பு மடிப்பை இறுக்கிக்கொண்டாள்..!! ஆற்றின் நீரோட்டம் தெளிவாக இருந்தது.. அடியில் நீந்துகிற மீன்கள் எல்லாம் மேலே தெரிந்தன..!! ஆதிரா அந்த மீன்களின் அழகை சிலவினாடிகள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு.. கைகளை ஒருமுறை கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்து.. இரண்டு கைகளையும் ஆற்றுநீருக்குள் நுழைத்தாள்..!! உள்ளங்கைகளை ஒன்றோடொன்று வைத்து அழுத்தி தேய்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது..!!

ஆற்றுக்குள் இருந்து படக்கென ஒரு கை நீண்டு வந்து ஆதிராவின் கைகளை அழுத்தமாக பற்றியது.. இரும்புப்பிடியென இறுகப் பிடித்து.. சரக்கென அவளை ஆற்றுக்குள் இழுத்தது..!! அதை சற்றும் எதிர்பாராத ஆதிரா, கத்துவதற்கு கூட அவகாசம் இல்லாமல், ஆற்றுக்குள் படார் என்று தலைகுப்புற விழுந்தாள்..!! விழுந்த வேகத்தில்.. கீழே கீழே கீழே என.. ஆற்றின் ஆழத்தை நோக்கி சென்றாள்..!! இதயம் தறிகெட்டு துடிக்க, கைகளையும் கால்களையும் வெடுக் வெடுக்கென வெட்டினாள்.. நீரின் மேற்பரப்புக்கு வர முயன்றாள்.. ஆனால் அவளுடைய உடலை யாரோ அமுக்குவது போல தோன்றியது.. பாரமாக இருந்தது..!!

“விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்..!!” என்று ஏதோ ஒரு சப்தம்.

நீருக்குள் அவள் அப்படியே சுழல.. அவளுடன் சேர்ந்து அவளை கட்டிக்கொண்டு இன்னொரு உருவமும் சுழன்றது..!! ஆதிராவின் கண்களுக்கு அந்த உருவம்.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது..!! சிவப்பு நிற அங்கி அவளுடைய முகத்தை.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது..!!

ஆதிரா விழிகளை விரித்து அந்த உருவத்தை அடையாளம் காண முயன்றாள்.. முடியவில்லை.. தெளிவில்லாமல் காட்சியளித்தது..!! வாயையும் மூக்கு துவாரங்களையும் இறுக மூடி வைத்திருந்தாள்.. அதையும் மீறி அவளுடைய நாசியை தாக்கியது அந்த வாசனை.. மகிழம்பூ வாசனை..!!

ஆதிரா அவ்வாறு அந்த உருவத்திடம் இருந்து மீளமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போதே.. நீர்ப்பரப்பை கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தது இன்னொரு உருவம்.. ஆற்றின் ஆழத்துக்கு இறங்கி ஆதிராவை அணைத்துக் கொள்ள முயன்றது..!! ஆதிரா பிடிகொடுக்காமல் உடலை முறுக்கினாள்.. கைகால்களை படக் படக்கென உதறினாள்.. விழுக்கென்று நழுவ முயன்றாள்..!! பிறகு அந்த உருவத்தை அடையாளம் கண்டுகொண்டதும்தான் மெல்ல மெல்ல அடங்கினாள்.. இரண்டாவது உருவம் அவளுடைய கணவன் சிபிதான்..!!

மனைவியை கையில் அள்ளிக்கொண்டு நீர்ப்பரப்புக்கு வந்தான் சிபி.. பழக்கடைக்காரன் உதவியுடன் இருவரும் மரமேடைக்கு வந்தனர்..!! புஸ்புஸ்சென்று மூச்சிரைத்தனர் இருவரும்.. சர்சர்ரென அவர்களது மார்பு காற்றுக்காக அடித்துக்கொண்டது.. சலசலவென நீர் சொட்டியது இருவருடைய உடலில் இருந்தும்..!!

3 Comments

Add a Comment
  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *