வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பத்து 49

அவன் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

ஏன் நான் கொடுத்தா, வாங்கிக்க மாட்டியா?

அ… அப்டியில்லை, வேணாமே?!

என் கையைப் பிடித்து கொஞ்சம் தனியாகக் கூட்டி வந்தவன், கொஞ்சம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொன்னான்.

கொல்லாதடி! டெய்லி ஒரே ஒரு செயினை மட்டும் போட்டுகிட்டு, சிம்ப்பிளா வர்றப்ப, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?

நீ வீட்டை விட்டு வந்தப்ப, உன் நகை, பணம் எல்லாத்தையும், உன் அப்பாவும், சித்தியும் புடுங்கிகிட்டாங்கன்னு எனக்கு தெரியும்

நீ சிம்ப்பிளா இருந்தாலும் அழகா இருக்கிறங்கிறது உண்மைதான். ஆனா, எண்ணி 10 டிரஸ்ஸை மட்டும் வெச்சுகிட்டு, ஒத்தைச் செயினை மட்டும், திரும்பத் திரும்ப போட்டுக்கிட்டு வர்றப்ப, எனக்கு எப்டி இருக்கும்??? இப்பதான் திரும்ப சம்பாதிச்சு, கொஞ்சம் கொஞ்சமா உனக்குன்னு நீ வாங்க்கிக்குறன்னு எனக்கு நல்லாத் தெரியும்.

இப்ப கட்டியிருக்கிற காஸ்ட்லி புடவையே, என் அக்காவும், மாமாவும், நீ திரும்ப வீட்டுக்கு வந்தப்ப எடுத்துத் தந்ததுன்னு எனக்கு தெரியாதா?

டெய்லி ஆஃபிஸ்ல உன்னை இப்டி பாக்கவும் முடியாம, உனக்கு எதுவும் வாங்கியும் தரமுடியாம, எவ்ளோ ஃபீல் பண்ணேன்னு தெரியுமா?

எல்லாத்துக்கும் மேல, என் வாழ்க்கையிலியே இந்த மூணு நாள்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள். இந்த சந்தோஷத்தோட ஞாபகர்த்தமா, இங்க உனக்கு ஏதாவது பெருசா வாங்கனும்னு தோணுது! அதனாலத்தான் சொல்றேன், ப்ளீஸ் வாங்கிக்கோ லாவி!

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் என்னை இந்தளவு கவனித்திருப்பதும், புரிந்து வைத்திருப்பதும், இந்த நாட்களை வாழ்வின் பொக்கிஷம் என்று சொன்னதும், அவன் மேல் அளப்பரியக் காதலைக் கொண்டு வந்தது.

எனக்கும் அப்படித்தானே? என் வாழ்விலும், இவைதானே பொக்கிஷமான நாட்கள்?! இந்த ஊட்டி ட்ரிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியுமா என்ன?

பின் அவனைப் பார்த்து புன்னகைத்த நான், அவன் கையுடன், என் கையினைக் கோர்த்துக் கொண்டு, நகை இருக்கும் இடத்திற்க்கு அவனைக் கூட்டி வந்தேன்.

நான் மிகக் குறைவான செலவில் இருந்தால் போதும், தேவையற்றச் செலவு வேண்டாம் என்றெல்லாம் பிகு செய்யவில்லை.

மாறாக எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை. ஆனால், அவன் முதன் முதலில் எனக்காக, வாங்கித் தரும் நகை, மிகவும் அழகாக, தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவன் காசு, என் காசு என்றெல்லாம் எனக்கு பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை.

அப்படி யுனிக் டிசைன்களாகப் பார்த்து, எனக்கு வைத்துப் பார்த்து, அவனுக்கும் பிடித்த வளையல், செயின், நெக்லஸ், தோடு என்று எல்லாம் இருக்கும் ஒரு ஃபுல் நகை செட்டை வாங்கினேன்.

இப்ப சந்தோஷமா? என்று அவனைப் பார்த்துக் கேட்டேன்.

என் தோள்களில் கையினைப் போட்டு, அவனருகே இழுத்தவன், ரொம்ப ஹேப்பி லாவி என்று புன்னகை செய்தான்.

அவன் அன்பில் நெகிழ்ந்த நான், அவனுடைய தோள்களில் அப்படியே சாய்ந்தேன்.

பின், ரூமிற்கு வந்த பொழுது மணி 1.

அங்கேயே லஞ்ச்சினை முடித்தவுடன், அவன் சொன்னான்.

நீ தூங்கி ரெஸ்ட் எடு லாவி! நான் போய் மீட்டிங் எப்பிடி போகுதுன்னு பாத்துட்டு வந்துடுறேன். இப்ப போயிட்டு வந்தா, நாளைக்கு வேண்டியதில்லை. நாளைக்கும் எங்கியாச்சும் வெளிய போலாம்.

அவன் என்னுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்பும் ஆசை, எனக்கு புரிந்தது. எனக்கும் அதுதான் விருப்பம் எனும் போது, என்ன பிரச்சினை?!

சரி… அப்ப நானும் வர்றேன். நீ போயி, நான் வர்றாம இருந்தா நல்லாயிருக்காது.

ஏன், யாராச்சும், ஏதாச்சும் சொல்லுவாங்களோன்னு ஃபீல் பண்றியா என்ன? அவன் குரலில் லேசான கோபம் இருந்தது.

எனக்கு சிரிப்பு வந்தது. அவனையேப் பார்த்து சொன்னேன். ரெஸ்ட் எடுக்க வேண்டிய நீயே, ரெஸ்ட் எடுக்காம போறப்ப எனக்கென்ன வந்தது? தவிர, நீயும் இல்லாம, எனக்கு இங்க போரடிக்கும் அதான் சொன்னேன்! ஓகேயா?