வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

என்னைக் கொடுமைப்படுத்தியவர்களையெல்லாம் விட்டுவிட்டு, என்னைக் காதலிப்பவனிடம்தான், என் வன்மத்தைக் காட்ட வேண்டுமா? நான் உம் என்று சொன்னால், என் வாழ்வை வசந்தமாக்கி விடுவானே! இவனிடமா கோபம், வருத்தம்?

என் கோபம் நியாயமானதுதான்! ஆனால் தெரிந்தா செய்தான் இவன்? இன்னமும் இவனுக்கு நடந்ததே தெரியாது. நானும், கொஞ்சம் தைரியமாகச் செயல்பட்டிருக்கலாம்.

அன்று, நான் வேகமாக, அவன் அறைக்கு நுழைந்திருந்தால்…. இந்த நிலையே இல்லையே.

நான் மட்டும் யோக்கியமா? சொல்லப் போனால் உண்மை தெரிந்தால், அவன்தான் என்னிடம் கோபப்படுவான். அப்போது நான் என்ன பதில் சொல்லப் போகின்றேன்?

உண்மையில் அவனை கோபித்துக் கொள்ளும் தகுதி இருக்கிறதா எனக்கு?

இனியும் இவனைக் கஷ்டப்படுத்தக் கூடாது. பாவம் சின்ன வயதிலிருந்து எந்த வித நேசத்தையும் அனுபவிக்காதவன், இப்போதும் என் நேசத்துக்காக காத்திருக்கிறான்.

அவனைப் பற்றிய யோசனைகள் என் உதடுகளில் மென் புன்னகையை வரவழைத்திருந்தது! அது, அவன்மேல் ஏற்பட்டிருந்த, மறைத்து வைக்கபட்டிருந்த எனது காதலை எடுத்துச் சொல்லியது.

எதற்க்காக நான் இப்படி நடந்து கொண்டிருக்கிறேன். இவன் அக்காவையே நான் மன்னித்து விட்டேன், ஆனால் இவனிடம் மட்டும் கோபம் காட்டுகிறேன். இத்தனைக்கும் இன்னமும் ஏன் என்று புரியவில்லை!

ஒருவேளை உண்மை தெரிந்தால், அவன், என் மேல் காட்டப் போகும் கோபத்தை எண்ணி பயந்து, அதை எதிர்கொள்ளத் துணிவில்லாமல்தான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவன் எப்படி ரியாக்ட் செய்வான் என்று யோசித்தாலே, என் முகம் இருண்டது. மனம் கலங்கியது! அந்த மாற்றம், அதுதான் உண்மை என்று பட்டவர்த்தனமாக எனக்குச் சொல்லியது!

என் இயலாமையை கோபத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன் என்று அறிந்த பின் மனம் இன்னமும் வருந்தியது!

எப்படிப் பார்த்தாலும் இப்படியே, எத்தனை நாள் இருக்க முடியும்? இப்படி இருப்பதும் அனைவருக்கும் வருத்தம்தான் தருகிறது, அதுவும் என் மனதைத் திருடியவனுக்கு பெரிய வலியினைத் தருகிறது எனும் போது கூட, இதற்கு தீர்வினைத் தராமல் இருப்பது, அவனுக்கு நான் இழைக்கும் மிகப் பெரும் அநீதி அல்லவா?

எவனுக்கு, என் அன்பை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்க நினைத்தேனோ, அவனுக்கு அன்பை வழங்காவிட்டாலும், வலியைத் தராமல் இருப்பது என் கடமையல்லவா?

வாழ்க்கையில் பெற்றவர்களின் பாசத்தை கொஞ்சமும் அனுபவிக்காத அவனுக்கும், எனக்கும், ஒருவருக்கொருவர்தானே துணை?

இந்த இடைபட்ட 8 மாதத்தில் அவனே பயங்கரமாக மாறியிருக்கிறான். உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். இந்தச் சமயத்தில், நான் என் உணர்வுகளை மறைத்தால், அது உண்மையான காதலுக்கு அடையாளமா? உண்மை தெரிந்து அவன் வெறுத்தாலும் பரவாயில்லை. ஆனால், அதை மறைத்து அவனுக்கு வலியினைத் தந்தால், காதலியாக இல்லை… ஒரு பெண்ணாக கூட இருக்க எனக்குத் தகுதியில்லை!

மெல்ல என் மனதில் தீர்வு தெரியாவிட்டாலும், ஓரளவு நான் நடந்து கொள்ள வேண்டிய முறை தெளிவாகியது! அந்தத் தெளிவு, மனதிற்கு நிம்மதியைத் தந்தது! அந்த நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக, அடி ஆழத்தில் அவன் மேல் நான் புதைத்து வைத்திருந்த காதல் உணர்வுகளை மேலே கொண்டு வந்தது!

அந்த காதல் நினைவுகள் என் புன்னகையை இன்னும் அதிகமாக்கியது!

புன்னகையுடன் கூடிய நினைவுகள் அவன் மேலான காதலை இன்னும் ரசனையுடன் அசை போடத் தொடங்கியது! ரசனையான காதல் நினைவுகள், கொஞ்சம் கொஞ்சமாக காதலை, மோகத்தின் பக்கம் கொண்டு சென்றது! அது என் உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

அந்தச் சமயத்தில்தான், என் மனதில் மின்னலடித்தாற் போன்று ஒரு நினைவு வந்துச் சென்றது!

அது, சற்று நேரத்திற்க்கு முன்புதான், அவன் என்னை, ஏறக்குறைய முழு நிர்வாணமாக பார்த்தான் என்பது!

அது, என்னுள் படபடப்பை ஏற்படுத்தியது! அவன் முன் நான் நின்றிருந்த தோற்றம் மெல்ல என் கண் முன் வந்தது. அது, என் கன்னங்களில் வெட்கச் சிவப்பை ஏற்படுத்தியது. என் மூச்சுக் காற்றை சூடாக்கியது!

அவன் என் ஜாக்கெட்டை கழட்ட முடியாமல் கோபத்தில் பிய்த்து எறிந்தது புன் சிரிப்பையும், அவன் மேல் பரிதாபத்தையும் கொடுத்தது.

திருடன், எப்பியும் அவசரம் அவனுக்கு! காதலைச் சொல்றதுக்கே அவசரப் பட்டவனாச்சே!

அந்த நேரத்தில் என்னை ரசித்துப் பார்த்தானோ? இல்லை சரியாகப் பார்க்கவில்லையோ? பாவம்!

ஆனாலும் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டாலும், தவறு செய்தாலும், நான் ஒரு வார்த்தைச் சொன்னவுடன், பொட்டிப்பாம்பாக அடங்கி, திரும்பிச்சென்றதை நினைக்கும் போது என் மனம் பூரித்தது!

அந்த நினைவில் என் மனம் பெருமிதத்தில் திளைத்தது!

எப்பேர்பட்ட பணக்காரன்! அதி புத்திசாலி! எவ்வளவு அழகிய பெண்ணையும் திரும்பிப் பார்க்காதவன், என்னிடம் மயங்கிக் கிடக்கிறானே! அவனுக்கு நான் என்னச் செய்து விடப் போகிறேன்?

ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியைப் போன்றவன், ஒரு சாதாரண பெண்ணின் மனம் கனியக் காத்திருக்கிறான் என்றால், அவன் காதல் எவ்வளவு ஆழமானது?

அந்தத் தருணம், என்னை, நானே ஒரு மகாராணியைப் போல் உணர்ந்தேன். என்னுள் ஒரு கம்பீரம் குடியேறியது!

என்னை அறியாமல், கால் மேல் கால் போட்டு, தலை நிமிர்ந்து, ஒரு பெருமிதத்தில், புன்னகையுடன், அவன் நினைவுகளில் ஆழ்ந்தேன்!

என் அழகை விட, என் அழுகை அவனை பாதிக்கிறது என்கிற பெருமிதம்!

எல்லாரையும் எளிதில் வெற்றி கொள்ளும் வீரன், என் கை அசைவிற்கு காத்திருக்கிறான் என்கிற இறுமாப்பு!

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.