“ஞானம்… நான் சொல்றதை கேளு… கண்ணு மறைவா.. எங்கயாவது போய் கூலி வேலை செய்து பொழைக்கலாம். என் அப்பன் ஆத்தா வரமுடியாத எடத்துக்கு, இப்பவே, இங்கேருந்தே, என்னை அழைச்சிக்கிட்டு போடா” ராணி அவன் தாடையில் முத்தமிட்டு மன்றாடினாள்.
“சொல்றது சுலபம் .. எங்கப் போறது? ராணீ… நீ ராணி மாதிரி இது வரைக்கும் வாழ்ந்துருக்கே! உன்னால கல்லு…மண்ணு சொமக்க முடியுமா? முள்ளு வெறகுதான் வெட்ட முடியுமா? ரெண்டு பேரும் எம்.ஏ. படிச்சிருக்கலாம்… எவன் நமக்கு உடனே வேலை குடுக்கத் தயாரா இருக்கான்..?” யதார்த்தத்தை அவன் பேசினான்.
“ஞானம் ஒருத்தருக்கு வேலை கெடைச்சாலும் போதுமேடா?” கெஞ்சினாள் அவள்.
“ராணி… அடுத்த வேளை சோத்துக்கு வழி என்னா… அதை யோசனைப் பண்ணு மொதல்ல நீ?
“என் நகை, பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்டா.. ஞானம்?”
“எத்தனை நாளைக்கு அது வரும்? என்னை திருடன்னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்து கம்பி எண்ண வெப்பான் உன் அப்பன்” உணர்ச்சிவசப்படாமல் பேசினான் அவன்.
“ஞானம் என்னப்பா இப்படீ பேசறே?” அவளுக்கு எரிச்சல் வந்தது
“ராணீ… என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் வயசாயிப் போச்சு… அவங்க ஒடம்பு ஒடுங்கிப்போச்சு; அவங்களால இதுக்கு மேல அடி ஒதைப் படமுடியாது..!”
“என்ன சொல்றே நீ…?” அவள் துடித்தாள்.
“உன் அப்பா அனுப்பிச்ச அடியாளுங்க… என் வீடு பூந்து என்னை மட்டும் அடிக்கலை… என்னைப் பெத்தவங்களையும் அடிச்சானுங்க.. விஷயமே தெரியாம… ராத்திரி நேரத்துல எதுக்காக தங்களை அடிக்கறாங்கங்கற காரணமே புரியாம அவங்க வாங்கின அடியில துடிச்சாங்க.. இன்னொரு தரம் என்னால அவங்க அடிபடறதை பாக்கமுடியாது..”
“அய்யோ… இது எனக்கு சத்தியமா தெரியாது ஞானம்…” ராணி அவன் கையிலடித்தாள்.
“ராணீ… நான் உன்னை குத்தம் சொல்லலை.. நான் உன் மேல வெச்ச ஆசைக்காக… உன்னை நான் உயிருக்கு உயிரா நேசிச்சதால… உன்னை இன்னும் மனசார காதலிக்கறதால… என்னை பெத்தவங்க கிட்டவும், என் ஒறவு மொறை… ஜாதி ஜனத்துக்கிட்டவும்… ஏன் இந்த அடிதடி… வந்தது யார்… அனுப்பினது யார்… அதுக்கு என்ன காரணங்கறதை இதுவரைக்கும் நான் சொல்லலை.”
“ஞானம் ஐ லவ் யூ வெரி மச்… உங்களை அடிச்சதெல்லாம் எனக்கு சத்தியமா தெரியாதுப்பா…” அவன் தலையிலடித்து மீண்டும் சத்தியம் செய்தாள் ராணி.
“எனக்கு இருக்கறது ஒரே ஒரு வழிதான்.. அதுக்கு நீ ஒத்துக்கணும்?”
“சொல்லு ஞானம்… என்னது அது?” ராணியின் கண்களில் ஐயமெழுந்தது.
“என்னால உன் உறவோட போட்டிப் போட்டுக்கிட்டு போராட முடியாது… நான் ஒரு மொரடன் இல்லே! நம்ம காதலை உங்க வீட்டுல ஏத்துக்கலை.. என்னை உன் அப்பா அடிச்ச விஷயத்தை ஒரு ஜாதி சண்டையா நான் மாத்த விரும்பலை… என் காதல் என் மனசோட கடைசி வரைக்கும் இருந்துட்டுப் போகட்டும்.. என் மனசுல நீதான் எப்பவும் ராணியா இருப்பே..!”
“இப்படிப் பேசினா இதுக்கு என்ன அர்த்தம் ஞானம்..?”
“நாம பிரியறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.” அவன் குரலில் உறுதியுடன் அழுத்தம் திருத்தமாகப் பேசினான்.
“நீ ஒரு ஆம்பிளையாடா…? நான் உன் கூட வீட்டை விட்டு ஓடி வர்றதுக்கு தயாரா வந்து இருக்கேன்.. நீ பொட்டைச்சி மாதிரி எங்கப்பனுக்குப் பயப்படறியே…? உன் கையில என்னா வளையலா போட்டிருக்கே?”
“ராணீ… நான் உனக்காக அடிவாங்க பயப்படலே..?”
“பின்னே வேற எதுக்குப் பயப்படறே…” கோபத்துடன் ராணி அவன் மார்பில் தன் இரண்டு கைகளாலும் குத்தினாள்.