காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்…!
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்…!!”
மீனா என் காதலுக்குரியவள். மீனா என்னுடைய காதலி. இவள் என்னுடையவள். நேற்றிரவு இவள் எனக்காக மட்டுமே மனதுக்குள் அழுதாள்! இனிமேல் இவள் எனக்காக மட்டுமே சிரிப்பாள்! இனிமேல் இவள் எனக்கு மட்டுமே விடியலில் மலர்ந்து மணம் வீசும் ஒரு பவழ மல்லிகைப் பூ! நான் மட்டுமே தனியாப் பாத்து பாத்து ரசிக்கப் போற ஒரு டீ.வீ.டி. டிஸ்க். இவள் செல்லில் நான் போன் செய்தால் எனது போட்டோ மின்னும். இது எவ்வளவு பெரிய மகத்தான விஷயம். சீனு தன் மனதுக்குள் கர்வமானன். நான் ஆயிரத்தில் ஒருவன்.
எத்தனையோ ஆயிரம் இளைஞர்களில் நான் தனிப்பட்டவன். என்னுடையத் தனித்தன்மை மீனாவை கவர்ந்திருக்கிறது.
“உனக்குத்தான் நான் இருக்கேனே?” நான் மனம் கலங்கி நின்றபோது என்னைத் தேற்ற எனக்கென என்னருகில் வந்து நின்றவள். வேறு எந்த இளைஞனுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை எனக்கு இவள் கொடுத்திருக்கிறாள். இது இவள் எனக்களித்த மதிப்பும், கவுரவம்தானே? சீனுவுக்குத் தன் மனதில் எழுந்த உற்சாக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
செல்வாவுக்கு மீனா எனக்கு கொடுத்திருக்கும் இந்த புதிய ஸ்தானம் தெரியும். பக்கத்திலிருந்த மல்லிகாவிடமும், நடராஜனிடம், உங்கள் மகள் என் மனதுக்குகந்த காதலியாகிவிட்டாள். நான் அவளுடைய காதலன். நாங்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேருவதற்கு முடிவு எடுத்திருக்கிறோம். எங்களை நீங்கள் தயவு செய்து ஆசீர்வதியுங்கள், என தங்களுடைய புதிய உறவை உடனே அவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
நேத்து ராத்திரி, மீனா திருட்டுத்தனமா என் கையை தொட்டா; என் தலையையும் முதுகையும் வருடிவிட்டா. என் ஆசைக்குரியவளின் ஒரு ஸ்பரிசம், என் டோட்டல் கெமிஸ்ட்ரியை ஒரு ராத்திரியில மாத்திடுச்சே? இந்த கண்றாவி மீசையை எடுத்துத் தொலைடா; நம்ம குடும்பத்து ஆம்பளைங்க மீசை வெச்சுக்கற வழக்கம் இல்லைடான்னு; என் அம்மா என் கிட்ட எவ்வள நாளா மல்லுக்கு நின்னா? நான் கேட்டனா அவ பேச்சை? இன்னைக்கு காலங்காத்தால இவ சொன்னான்னு வெக்கமில்லாம என் மீசையை வழிச்சிட்டு உக்காந்திருக்கேன்?? இது தான் காதலா? இவள் என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டாள்.
மீனா சொல்றதை, ஏன், எதுக்குன்னு ஒரு கேள்வி கேட்க்காமல் செய்ய ஆரம்பிச்சுட்டேன்! நான் இவகிட்ட என் தனித்தன்மையை இழந்து தோத்துப்போய் நிக்கறனா? அவனுக்கு அவன் மேலேயே குபீரென கோபம் பொத்துக்கொண்டு வந்தது. டேய், சீனு .. நீ தோத்தா என்னடா? உனக்குப்புரியலே? நீ தோத்ததாலத்தான் இவ உனக்கு காதலியா கிடைச்சிருக்கா? இது உனக்கு வெற்றித்தானே? சீனுவை மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
“டேய் சீனு எத்தனை நாள் காதலிடா இவ? உன் காதலுக்கு எத்தனை வயசுடா?” அவன் மனம் அவனை கேலி செய்து சிரித்தது.
“காதலுக்கு வயசு எல்லாம் உண்டா என்ன?” சீனுவின் மனமே கேள்விக்குப் பதில் சொல்லியது.
“உங்களுக்குள்ள காதல் வந்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே… ஞாபகமிருக்கட்டும்..! அதுக்குள்ள உனக்கு மாமானார், மாமியார் ஆசிர்வாதம் வேணுமா…” மனம் எள்ளி நகையாடியது.
“ஏன் இதுல என்னத் தப்பு?”
“செருப்படி வாங்கறதுக்கு ஏண்டா அவசரப்படறே?
“நீ திருப்பி திருப்பி என் தன்னம்பிக்கையை குலைக்கறே? சீனு தன் மனதிடம் எகிறினான்.
“உன்னை புத்தியா பொழைச்சுக்கன்னு நான் சொல்றேன்.. இந்த பொண்ணு பின்னாடி விழுந்திட்டியேன்னு சொல்றேன்!” மனம் அமைதியாகப் பேசியது.
“நேத்து ராத்திரி எவ்வள ஆசையா, என் வயத்து பசியறிஞ்சு பலகாரத்தை எடுத்து எடுத்து என் தட்டுல போட்டா? பசிக்கு சோறு போட்டவ சொல்றதை நான் கேட்டுத்தானே ஆகணும்!” சீனுவின் பதில் இது.
