எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 55

அவளுடைய கண்களில் எப்போதும் மின்னுகிற ஒரு குறும்பை, இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. அவளுடைய பேச்சில் எப்போதும் தொனிக்கிற கேலி, இப்போது தொலைந்து போயிருந்தது. இப்போதெல்லாம் அவளுடைய முகத்தில் ஒரு அசாத்திய அமைதிதான் அனுதினமும். கண்களில் சலனமற்ற ஒரு பார்வை.. பேச்சில் இதமான ஒரு மென்மை..!! அசோக்கிற்கு இவையெல்லாம் வித்தியாசமாகப் பட்டன..!!

முன்பெல்லாம் மீரா எப்போது இவனுக்கு ஃபோன் செய்தாலும், இவன் எடுத்ததுமே ‘இங்கு வா.. அங்கு வா..’ என்று ஆணைதான் பிறப்பிப்பாள். ஆணை பிறப்பித்த அடுத்த நொடியே, இவனுடைய பதிலை கூட எதிர்பாராமல் காலை கட் செய்வாள். இவனுடைய விருப்பத்துக்கு ஒரு மதிப்பே இருக்காது. ‘தலையெழுத்தே’ என்று, அவள் இட்ட கட்டளைகளை எல்லாம்.. தலை மீது வைத்து இவன் நிறைவேற்ற வேண்டியிருக்கும்..!! ஆனால் இப்போது அப்படி அல்ல.. இவன் கால் பிக்கப் செய்து ‘ஹலோ’ சொன்னதும்தான்.. அவள் பேசவே ஆரம்பிக்கிறாள்..!! அதுவும்..

“ஹாய் அசோக்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நீ இப்போ ஃப்ரீயா..?? ஜ..ஜஸ்ட் டூ மினிட்ஸ்..!!” என்று தயங்கி தயங்கி ஃபார்மலாக கேட்டுவிட்டுத்தான் பேசுகிறாள்.

“ஹேய்.. என்ன மீரா இது..?? பேசுறதுக்குலாம் என்கிட்ட நீ பெர்மிஷன் கேக்கணுமா..??” என்று அசோக் அன்புடன் கடிந்து கொண்டாலும் அவள் கேட்பதில்லை.

“ப..பரவால.. நீ ஏதாவது வேலையா இருப்ப.. நான் பேசி டிஸ்டர்ப் பண்ண கூடாதுல.. அதான்..!!” என்று பொறுமையாக பதில் சொல்வாள்.

இன்னொரு நாள்.. அசோக்கும் மீராவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்..

“ப்ச்.. ரெட் சில்லி சாஸ் கேட்டேன்.. தரவே இல்ல பாரு..!! இரு..” என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே சேரில் இருந்து அவள் எழ முயல,

“நீ உக்காரு.. நான் போய் வாங்கிட்டு வரேன்..!!” என்றவாறு அசோக் எழப்போனான். மீரா உடனே வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“நீ என்ன எனக்கு வேலைக்காரனா..?? என் வேலைலாம் பாக்கனும்னு உனக்கு என்ன தலைஎழுத்தா..?? உக்காரு..!!”

என்று சீற்றமாக சொல்லிவிட்டு, ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி கோபமாக நடந்தாள். அசோக் சற்றே மிரண்டு போய் அவளையே பார்த்தான். ‘எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. போ..’ என்று எகத்தாளமாக உத்தரவிட்ட மீராவா இவள், என்று அசோக் திகைக்க வேண்டியிருந்தது.

அதுவுமில்லாமல்.. அசோக்கின் தொழில்துறை சம்பந்தமாகவோ.. அவனுடைய கனவு, லட்சியம் பற்றியோ.. மீரா முன்பெல்லாம் அதிக அக்கறை காட்டிக்கொண்டது கிடையாது..!! எப்போதாவது அசோக் சொல்லும்போது கேட்டுக்கொள்வதோடு சரி.. ‘ம்ம்.. நல்லாருக்கு.. குட்..’ என்று ஃபார்மலாக பாராட்டுவதோடு சரி..!! ஆனால் இப்போதோ..

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாளின் மாலை நேரத்தில்..

பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த மீரா.. கம்பிகளுக்கு வியர்த்தது போல, முத்து முத்தாய் பூத்திருந்த மழைத்துளிகளை.. கைவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் சிதறடித்துக் கொண்டிருந்தவள்.. திடீரென திரும்பி தனக்கருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் சொன்னாள்..!!

“இன்னைக்கு காலைல கண்ணு முழிச்சதுமே உன் ஞாபகம்தான் தெரியுமா..??”

“எனக்கு கண்ணை மூடுனா கூட உன் ஞாபகமாதான் இருக்குது.. கனவுல கூட நீதான் வர்ற..!! அப்படியே கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுக்கிட்டு.. பெருசு பெருசா பல்லுலாம் வச்சுக்கிட்டு.. கழுத்துல மண்டை ஓடு மாலை..!! ஹாஹா.. ராட்சசி..!!”

அசோக் குறும்பாகவும், சிரிப்பாகவும் சொல்ல.. மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை..!! மெலிதாக புன்னகைத்தாள்.. கடந்த சில நாட்களாக அடிக்கடி அவனை பார்க்கிற அந்த ஆழமான பார்வையை இப்போதும் வீசினாள்.. மெல்ல தலையை கவிழ்த்துக் கொண்டாள்..!! பிறகு மீண்டும் ஜன்னல் பக்கமாய் திரும்பி.. எதிரே நகர்கிற மரங்களை.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு அசோக்கே கேட்டான்..!!

“ஹ்ம்ம்… அப்படி என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?? கண்ணு முழிச்சதுமே என் ஞாபகம் வந்திருக்கு..??” அசோக் அவ்வாறு கேட்க, மீரா இப்போது இவன் பக்கம் திரும்பி மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.

“அதுவா.. எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்.. ஃப்ளக்ஸ் போர்ட்னு சொல்வாங்களே.. அது..!!”

“ம்ம்..!!”

“என் பெட்ரூம் ஜன்னல் வழியா பார்த்தா.. அதுதான் பெருசா தெரியும்..!! இத்தனை நாளா ஏதோ ஒரு ஜ்வல்லரி ஆட் வச்சிருந்தாங்க.. இன்னைக்கு காலைல கண்ணுமுழிச்சதும்.. அப்படியே பெட்ல கெடந்துக்கிட்டே.. ஜன்னல் வழியா வெளில பார்த்தா.. ரியல் சர்ப்ரைஸ் எனக்கு..!!”

“எ..என்ன..??”

“கவாஸாகி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருந்தாங்க.. அந்தப் பையனும், பொண்ணும் பைக்ல பறக்குற மாதிரி ஸ்டில்..!! நல்லா பெருசா.. சும்மா நச்சுனு..!!”

“ஓ..!!”

“என்னன்னு தெரியல.. அதை பாக்குறப்போ ரொம்ப பெருமையா இருந்தது.. மனசு ஃபுல்லா உன் நெனைப்பு.. ரொம்ப நேரம் அந்த போர்டையே பாத்துட்டு இருந்தேன்..!!” மீரா பெருமிதமாக சொல்ல, அசோக் அவளையே காதலாக பார்த்தான்.

“ம்ம்..!!”

“ஆனா.. கொஞ்சம் கடுப்பாவும் இருந்தது..!!”

“எதுக்கு..??”

“அந்த விளம்பரத்தை எடுக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்ருப்ப..?? அந்த போர்ட்ல ஒரு மூலைல கூட உன் பேர் போடல..!! உன் பேரை போட்டா என்ன கொறைஞ்சா போயிடுவானுக..?? கவாஸாகின்னு மட்டும் மெகாசைஸ்ல போட்டு வச்சிருக்கானுக..!! ஸ்டுபிட்ஸ்..!!”

“ஹாஹா..!! கஷ்டப்பட்டதுக்குத்தான் காசு தந்துட்டாங்களே மீரா.. பேர்லாம் எதுக்கு போடப் போறாங்க..?? அதுமில்லாம.. அது அவங்க பைக்கை ப்ரோமோட் பண்றதுக்காக வச்சிருக்குற போர்ட்.. அதுல என் பேரை போட்டு, என்னை ப்ரோமோட் பண்ண சொல்றியா..??”