எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 55

மீராவை உள்ளறைக்கு அழைத்து சென்று.. சோபாவில் அமரவைத்து.. அவளை சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டனர்..!! பாரதி கொண்டு வந்த பாதாம் கீரை.. மீரா கொஞ்சம் கொஞ்சமாய் அருந்த.. மற்றவர்கள் அத்தனை நாளாய் மீராவிடம் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம்.. இப்போது சராமரியாக கேட்டு தள்ளினர்..!! மீராவும் அவர்களது கேள்விகளுக்கெல்லாம்.. முகத்தில் ஒரு மிரட்சியும்.. கண்களில் ஒரு மருட்சியுமாய்.. தயங்கி தயங்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..!! அசோக் எதுவுமே பேசவில்லை.. அவனது உள்ளம் கவர்ந்த திருடியிடம்.. தனது குடும்பத்தினர் குறுக்கு விசாரணை செய்கிற காட்சியை.. உதட்டில் ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!

மீரா ஆரம்பத்தில் அவஸ்தையாக நெளிந்தாள்.. அசௌகரியமாக உணர்ந்தாள்.. இப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் கொஞ்சமும் தயாரில்லாமல் இருந்ததுதான் அதன் காரணம்..!! ஆனால் அசோக்கின் குடும்பத்தினர்.. அவள் மீது காட்டிய பரிவும் பிரியமும்.. சீக்கிரமே அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தன..!!

சகஜ நிலைக்கு திரும்பினாலும்.. அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த அந்த வியப்பு நிலை.. அப்படியேதான் இருந்தது..!! இன்னும் சொல்லப் போனால்.. நேரம் ஆக ஆக.. அந்த வியப்பு அதிகரித்துக் கொண்டேதான் சென்றது..!! அப்படி என்ன வியப்பு என்கிறீர்களா..?? இரண்டு வகையான வியப்பு அவளுக்கு.. ஒன்று.. அசோக்கின் குடும்பத்தினர் அவளிடம் காட்டிய அபரிமிதமான அன்பு.. இரண்டு.. மூன்று தலைமுறையினர் வாழ்கிற அந்த குடும்பத்தில்.. ஒருவருக்கொருவர் இடையில் இருந்த அந்த அன்னியோன்யம்..!! இரண்டையுமே அவள் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை..!!

தங்களுடைய காதல் விஷயத்தை, தன் குடும்பத்திடம் தெரிவித்திருப்பதாக அசோக் மீராவிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், வரப்போகிற மருமகள் மீது அவர்கள் இப்போதே இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள் என்று மீரா நினைத்திருக்கவில்லை. தங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே காதல் திருமணம்தான் என்பதையும் அசோக் அவளுக்கு சொல்லியிருக்கிறான். ஆனால் இந்த அளவுக்கு காதலும், மகிழ்ச்சியும் கொஞ்சி விளையாடுகிற குடும்பம் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.