எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 55

“அப்புறம் ஏன் சொல்லமாலே வச்சுட்ட..??”

“நீதான் அதுக்கு முன்னாடியே தூங்கிட்டியே..?? அப்புறம் எதுக்கு சொல்லனும்னு..”

“அப்போ காலைல சொல்றேன்னு சொன்னது..??”

“அதான் இப்போ சொல்லிட்டு இருக்குறனே..??”

அவ்வளவுதான்..!! அதற்கு மேல் அசோக்கிற்கு அவளிடம் என்ன கேட்பது என்று புரியவில்லை. அமைதியாகிப் போனான். அவனுடய குழப்பம் முழுமையாக தீராமல் போனாலும், ஒரு அளவுக்கு மேல் மீராவை துளைத்து எடுப்பதை அவன் விரும்பவில்லை. நேரம் வரும்போது அவளே சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டான். அதுவுமில்லாமல்.. தனது குழப்பமே முதலில் நியாயமானதுதானா என்றொரு சந்தேகமுமே அவனுக்கு இருந்தது..!! அந்த சந்தேகம்தான் தன் அம்மாவிடம் இந்த விஷயம் பற்றி அவனை பேச தூண்டியது.. அதுவும் அடிக்கடி..!!

அது சங்கீதாவின் அறை..!! வளமாக குரலை மாற்றும் பொருட்டு.. வாயில் ஒரு சித்தரத்தையை வைத்து கடித்துக்கொண்டு.. மூச்சை உள்ளடக்கி பயிற்சி செய்தவாறு.. அம்மாவும் அண்ணனும் பேசிக்கொள்வதை, ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா..!! மடியில் லேப்டாப்புடன் இருந்த அசோக்.. இணையத்தில் சமையற் குறிப்பு தேடச்சொன்ன பாரதியை.. மீரா பற்றி பேசி மொக்கை போட்டுக் கொண்டிருந்தான்..!! பாரதி ஏற்கனவே பலமுறை அசோக்கின் பிரச்சனையை கேட்டு கேட்டு.. சலித்துப் போயிருந்தாள். .!!

“அவ ஏன் மம்மி இப்படிலாம் பண்றா..??”

“அப்படி என்னடா பண்ணிட்டா..??”

“இன்னைக்கு பாலாஜி அட்வர்டைஸிங்ல ஒரு டிஸ்கஷன்ல இருந்தேன்.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவும்.. இவ ரிஷப்ஷனுக்கே கால் பண்ணிருக்கா..!!”

“சரிஈஈ..!!”

“கால் பண்ணவ என்ன கேட்ருக்கா தெரியுமா..??”
“என்ன கேட்ருக்கா..??”

“அசோக் ஸார் இருக்காரான்னு கேட்ருக்கா மம்மி..!!” தனக்கு நேர்ந்துவிட்ட ஏதோ பெரிய அவமானத்தை சொல்வது போல அசோக் சொன்னான்.

“ஹ்ம்ம்.. அதுக்கு என்ன..??” பாரதி கூலாகவே கேட்டாள்.

“அதுக்கு என்னவா..?? இவ எதுக்கு என்னை ஸார்னுலாம் சொல்றா..??”

“ஆமாம்.. இவனை ஸாருனுலாம் சொல்லிருக்க கூடாது.. புளிச்சுப்போன மோருன்னு சொல்லிருக்கணும்..!!” சங்கீதா சித்தரத்தையை ஓரமாய் ஒதுக்கிக்கொண்டு, கடுப்புடன் சொன்னாள்.

“ஏய்.. சும்மா இருக்க மாட்ட..” மகளை அதட்டிய பாரதி,

“ம்ம்.. நீ சொல்லுடா..!!” என்றாள் மகனிடம் திரும்பி.

“என்னத்த சொல்ல.. டிஸ்கஷன் முடிஞ்சு வெளில வந்தா.. ‘ஸார்.. அசோக் ஸார்.. உங்களுக்கு ஸார்.. ஒரு கால் ஸார்..’ அப்டின்னு.. அந்த ஓட்டைப்பல்லு ரிஷப்ஷனிஸ்ட் என்னை ஓட்டுறா மம்மி..!! இந்த மீரா ஏன் இப்படிலாம் பண்றா.. எதுக்கு இப்படி ஸார்னுலாம் மரியாதை..??”

“சரிடா.. கட்டிக்கப்போறவனை அடுத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்க கூடாதுன்னு அப்படி சொல்லிருப்பா..!! அதை விடு.. சாப்பாட்டு விஷயத்துல அவ எப்படி.. நல்லா கைநெறைய அள்ளி சாப்பிடுவாளா.. இல்ல அப்படியே கோழி மாதிரி கொறிப்பாளா..??”

“அதுலாம் நல்லா சாப்பிடுவா.. ஆள் பாக்குறதுக்குத்தான் கொத்தவரங்காய் மாதிரி இருப்பா.. ஆனா பத்துப்பேர் தீனியை ஒத்தை ஆளா தின்பா..!!”

“ஆங்.. காய்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. அவளுக்கு வெண்டைக்காய் பிடிக்குமா..??”

“அவளுக்கு மிரப்பக்காய்தான் ரொம்ப பிடிக்கும்..!!”

“மிரப்பக்காயா..?? அப்படினா..??”

“தெலுங்குல மிளகாய்ன்னு அர்த்தம் மம்மி..!!”

“மிளகாயா..??” பாரதி ஒருமாதிரி முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.

“ஆமாம்..!! அதுவும் ஜானி வாக்கரோட சேர்த்து சாப்பிட்டா.. ரொம்ம்ம்ம்ப பிரியம்..!!”

“ஓ..!!!”

“அதை விடு மம்மி.. அதுவா இப்போ முக்கியம்..?? நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்..!!”

“ப்ச்.. என்னடா உன் பிரச்னை இப்போ..??” பாரதியின் குரலில் சலிப்பு மிகுந்து போயிருந்தது.

“அவ ஒன்னும் சரியில்ல மம்மி..!! ஏதோ ஆயிருச்சு அவளுக்கு.. என்னன்னவோ சொல்றா தெரியுமா..!!”

“ஹ்ம்ம்.. என்ன சொன்னா..??”

“நேத்து சும்மா பேசிட்டு இருக்குறப்போ திடீர்னு..”

“ம்ம்..”

“நீ ரொம்ப அழகா இருக்குற அசோக்னு சொல்றா மம்மி..!!” அசோக் சோகமாக சொல்ல, இப்போது சங்கீதா இடையில் புகுந்து..

“அதுசரி.. அழகா இருக்குறன்னு சொன்னாங்களா.. அப்போ அண்ணிக்கு ஒரு அப்பாயிண்ட்மண்ட் வாங்கிட வேண்டியதுதான்..!!” என கிண்டலாக சொன்னாள்.

“அப்பாயிண்ட்மண்டா..?? எங்க..??” அசோக் தங்கையிடம் திரும்பி குழப்பமாக கேட்டான்.

“ம்ம்..?? வாசன் ஐ கேர்ல..!!” சங்கீதாவின் கேலி, பாரதியை டென்ஷனாக்கியது.