எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 54

“ஏய்.. திமிரா உனக்கு..?? எம்புள்ளை அழகுக்கு என்னடி கொறைச்சல்..??” சங்கீதாவிடம் எகிறிய பாரதி, பிறகு அசோக்கிடம் திரும்பி,

“ஏண்டா.. அழகா இருக்குறன்னு சொன்னது ஒரு குத்தமா..?? அழகாதான இருக்குற நீ..??”

“ஐயோ.. நான் அழகா இருக்குறன்னு எனக்கு தெரியாதா..?? ஆனா.. அவ அதெல்லாம் சொல்ற ஆளு இல்ல மம்மி..!! எப்போவாவது நான் பேசுறது புடிச்சிருந்தா.. ‘ச்சோ ச்வீட்’னு சொல்வா.. மத்தபடி என்னோட அப்பியரன்ஸலாம் கவனிச்சு அப்ரெஷியேட் பண்ற ஆளு இல்ல அவ..!!’

“சரி அதை விடு.. ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டா..!! ம்ம்ம்ம்.. நீ ஸ்வீட்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. மீராவுக்கு அல்வா பிடிக்கும்ல..??” பாரதி அந்தப்பேச்சை தனக்கு சாதகமாக திருப்ப படாதபாடு பட்டாள்.

“ம்ம்.. அரைப்படி மொளகாப்பொடிய கொட்டி.. அல்வாவை கிண்டி வையி.. நல்ல்ல்லா சாப்பிடுவா..!!”

“மொளகாப்பொடி அல்வாவா..??” பாரதி மீண்டும் முகத்தை சுளித்தாள்.

“அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது மம்மி.. காரந்தான் பிடிக்கும்..!! மிர்ச்சின்னு ஒரு நிக்நேம் வேற..!!” என்று சற்றே எரிச்சலாக சொன்னவன், பிறகு திடீரென குரலை தாழ்த்திக்கொண்டு,

“ச்ச.. அவ முன்ன மாதிரி இல்ல மம்மி.. முன்னாடிலாம் என்கிட்ட எப்படி நடந்துக்குவா தெரியுமா..??” என்று பழைய பல்லவியையே பாடினான்.

“எப்படி..??” தூரத்தில் அமர்ந்திருந்த சங்கீதா இப்போது முறைப்புடன் கேட்டாள். தங்கை கேட்ட கேள்விக்கு அசோக் அம்மாவிடமே பதில் சொன்னான்.

“முன்னாடிலாம் சூப்பரா திட்டுவா மம்மி.. தலைலயே நங் நங்னு அழகா கொட்டுவா.. கன்னத்துலயே சப் சப்புன்னு செமையா அறைவா தெரியுமா..?? இப்போலாம் எதுவுமே பண்றது இல்ல.. அவ ஏன் மம்மி இப்படி மாறிட்டா..??”

அசோக் நிஜமாகவே ரொம்பவும் ஏக்கத்துடன் அவ்வாறு சொல்ல, சங்கீதாவால் அதற்கு மேலும் அவனுடைய இம்சையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் இருந்த சித்தரத்தையை ‘த்தூ..’ என்று துப்பியவாறே, விருட்டென சேரில் இருந்து எழுந்தாள்.

“ஏண்டா.. உனக்கு எங்களை பாத்தா எப்படி தெரியுது..?? நானும் அப்போ இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன்..!!” என்று எரிச்சலாக கத்தியவாறே, அண்ணனை நோக்கி ஆவேசமாக வந்தாள்.

“இப்போ என்ன.. உனக்கு கன்னத்துல சப்பு சப்புன்னு அறை வேணும்.. அவ்வளவுதான..?? இரு.. நான் அறையுறேன்..!!”

என்றவாறு அவனுடைய தலை முடியை ஒரு கையால் கொத்தாக பிடித்தாள். அவனது கன்னத்தில் அறைவதற்காக இன்னொரு கையை ஓங்கினாள். தங்கையின் ஆவேசத்தில் சற்றே பதறிப்போன அசோக், உடனடியாய் சுதாரித்துக்கொண்டு, ஓங்கிய அவளுடைய கையை தடுத்து பிடித்துக் கொண்டான். கண்களை உருட்டி உக்கிரமாக அவளை பார்த்து கத்தினான்.

“ஏய்.. அடி வாங்கப் போறடி சங்கு.. ஒழுங்கா முடியை விடு..!!”

“முடியாது..!! இன்னைக்கு ஒரு அறையாவது உன்னை அறையாம விடுறது இல்ல..!!”

“விட்றி.. அப்புறம் நான் அறைஞ்சா நீ தாங்க மாட்ட..!!”

“அதையும் பாக்கலாம்..!!”

பிள்ளைகள் இருவரும் அவ்வாறு முட்டி மோதிக்கொண்டிருக்க, பாரதிதான் நொந்து போய் தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஐயயயயயே.. என்ன இது.. சின்ன புள்ளைக மாதிரி..?? ஏய்.. அவன் முடியை விடுடி.. விடுன்னு சொல்றேன்ல..??”

அம்மா அதட்டவும், அண்ணனின் தலைமுடியை சங்கீதா விடுவித்தாள். அப்புறம் அங்கேயே நின்றவாறு அசோக்கின் முகத்தையே கடுப்புடன் முறைத்துக்கொண்டிருக்க, பாரதி அவளை விரட்டினாள்.

“ஏய்.. போடி.. போய் எக்ஸர்சைஸ் பண்ணு.. போ..!!”

இப்போது சங்கீதா மெல்ல அவளுடைய சேருக்கு நகர்ந்தாள். அவளையே சில வினாடிகள் எரிச்சலாக பார்த்த பாரதி, பிறகு தலை கலைந்து போய் அமர்ந்திருந்த மகனிடம் திரும்பி சொன்னாள்.

“இந்தாடா.. உனக்குந்தான்..!! மீரா பத்தி பொலம்புறதை இத்தோட நிறுத்திக்கோ.. சும்மா சும்மா அந்த பொண்ணு பண்ற நல்ல விஷயத்தை எல்லாம்.. கொலைக்குத்தம் மாதிரி வந்து சொல்லிட்டு இருக்காத.. எனக்கே எரிச்சலா வருது..!! என்ன.. புரியுதா..??”

“ம்ம்..” அசோக்கும் முறைப்பாக சொன்னான்.

“ப்ச்.. சும்மா மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காம.. நீ சொன்ன அந்த ஐட்டத்துக்கு.. இன்டர்நெட்ல ஏதாவது சமையல் குறிப்பு, செய்முறை விளக்கம் போட்ருக்கானான்னு பாரு.. நாளைக்கு செஞ்சு அசத்திடலாம்..!!” பாரதி இயல்பாகவே கேட்க, அசோக் இப்போது குழப்பமாக அம்மாவை ஏறிட்டான்.

“எ..எந்த ஐட்டத்துக்கு..??”

“அதாண்டா.. ஜானி வாக்கர்னு ஏதோ புதுசா ஒரு ஐட்டம் சொன்னியே.. மீராவுக்கு ரொம்ம்ம்ப புடிக்கும்னு..??”

பாரதி அப்பாவியாக கேட்டாள். சங்கீதா குபுக்கென்று எழுந்த சிரிப்பை, வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முயன்றாள். அசோக் திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி திருதிருவென விழித்தான்.