எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 54

மீரா அதன்பிறகு அசோக்கை தொல்லை செய்யவில்லை. அமைதியாகிப் போனாள். அசோக் உற்சாகமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, மீரா தீவிரமாய் எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள்.

கேசவர்த்தினி பஸ் நிறுத்தத்தை தாண்டியதும், அசோக் பைக்கை இடது புறம் திருப்பினான். மேலும் ஐந்து நிமிட பயணம்..!! சௌத்ரி நகரை கடந்து, புதிதாக போடப்பட்டிருந்த அந்த தார்ச்சாலையில் வண்டி பயணித்தது. காலி மனையிடங்கள் அதிகமாகவும், ஆங்காங்கே முளைத்திருந்த பெரிய பெரிய வீடுகளுமாக அமைதியான சாலை. அந்த சாலையின் இறுதியில், இளம் பச்சை நிற பூச்சுடன் நின்றிருந்தது அந்த வீடு. காம்பவுண்டுக்குள் வண்டியை செலுத்தி, ஓரமாக ப்ரேக்கிட்டு நிறுத்தினான் அசோக். தயக்கத்துடனே கீழிறங்கிய மீரா, அந்த வீட்டை குழப்பமாக பார்த்தவாறே அசோக்கிடம் கேட்டாள்.

“எ..எங்க வந்திருக்குறோம்..?? இ..இது யார் வீடு..??”

“ம்ம்.. நம்ம வீடு மீரா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம வாழப்போற வீடு..!!”

பைக்கில் இருந்து இறங்கிய அசோக் புன்னகையுடன் சொல்ல, மீராவிடம் உடனடியாய் ஒரு திகைப்பு.

“வாட்..????”

“யெஸ்.. இதுதான் அந்த சர்ப்ரைஸ்..!! எப்டி..??”

“எ..என்ன அசோக் இது.. என்னை எதுக்கு இங்க..??” மீரா தடுமாற்றமாய் கேட்டாள்.

“ஹேய் ரிலாக்ஸ்.. என்னாச்சு இப்போ.. ம்ம்..?? இங்க பாரு.. நீ ஏன் இப்படி ஷாக் ஆகுறேன்னு எனக்கு புரியுது..!! வேலண்டைன்ஸ் டே’ன்னா.. எல்லாரும் வீட்ல இருந்து எஸ்கேப் ஆகி ஊர் சுத்துவாங்க.. இவன் என்னடான்னா வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கானேன்னு பாக்குற.. அதான..?? ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லவா..??”

“எ..என்ன..??”

“இந்த உலகத்துலேயே எங்க வீடு மாதிரி.. வேலண்டைன்ஸ் டே’யை செலப்ரேட் பண்றதுக்கு, வேற பெஸ்ட் ப்ளேஸே கெடையாது..!! தீபாவளி, பொங்கல்லாம் விட.. வேலண்டைன்ஸ் டே’யை ரொம்ப ஸ்பெஷலா செலப்ரேட் பண்ணுவோம்.. தெரியுமா..??”

“ஐயோ நான் அதுக்கு சொல்லல அசோக்.. இப்படி திடீர்னு..”

“ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல மீரா..!! உன்னை கூட்டிட்டு வர்றேன்னு, நான் நேத்தே வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. எல்லாரும் உனக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!! வா.. வந்து எங்க ஆளுங்களை பாரு.. கமான்..!!”

சொல்லிவிட்டு அசோக் முன்னால் நடந்தான். மீரா ஒருவித தயக்கத்துடனே அவனை பின்தொடர்ந்தாள். அதற்குள்ளாகவே பைக் சத்தம் கேட்டு, வீட்டுக்கதவு திறந்து கொண்டது. அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெளிப்பட்டு, வாசலை நிறைத்தனர். பாட்டி.. தாத்தா.. பாரதி.. மணிபாரதி.. சங்கீதா.. இவர்களுடன் கிஷோரும் தலை காட்டினான்..!! அனைவருடைய முகத்திலுமே, அப்படி ஒரு அளவிட முடியாத ஒரு பூரிப்பும், மலர்ச்சியும்..!! இன்னும் சிறிது நாட்களில் முறைப்படி வீட்டுக்கு வரப்போகிற மருமகளை வரவேற்க, வீட்டு வாசலுக்கே எல்லோரும் வந்திருந்தனர்.

அனைவரும் வாசலிலேயே காத்திருக்க, அவர்களது கால்களுக்கு இடையே தலை நீட்டி எட்டிப்பார்த்த நாய்க்குட்டிகள் இரண்டும், பிறகு சந்தோஷமாக குறைத்துக்கொண்டே இவர்களை நோக்கி ஓடிவந்தன. அருகில் நெருங்கி இருவரையும் ஸ்னேஹமாக முகர்ந்து பார்த்தவைகள், அப்புறம் ஆளுக்கொரு பக்கமாய் இவர்களுடன் வாசலை நோக்கி நடந்தன.

மீரா நூறு சதவீதம் திகைப்பின் பிடியில் சிக்கியிருந்தாள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு அசோக் தன்னை உள்ளாக்குவான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த திகைப்பு அவளுடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. ஒருவித மிரட்சிப் பார்வையுடனே, அசோக்குடன் நடந்தாள்.

“ரெண்டு பேரும் எந்தக்குறையும் இல்லாம.. நூறு வருஷம் சந்தோஷமா வாழனும் கண்ணுகளா..!!” ஆரத்தி எடுத்த பாட்டி, அசோக்குக்கும் மீராவுக்கும் நெற்றியில் திலகமிட்டாள்.

“நீ வாழப்போற வீடும்மா.. வலது காலை எடுத்து வச்சு உள்ள வா..!!” கனிவாக சொன்ன பாரதி, மீரா உள்ளே நுழைந்ததும் அவளுடைய கன்னத்தை அன்பாக வருடினாள்.

“நான் அசோக்கோட அப்பா பிச்சுமணி.. எழுத்தாளர் மணிபாரதின்னு கேள்விப்பட்டிருக்கியா.. அது சாட்சாத் நானேதான்.. ஹாஹா..!!” புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மணிபாரதி.

“ஹாய் அண்ணி..!! அண்ணாவும் கிஷோரும் உங்களை பத்தி நெறைய்ய்ய்ய சொல்லிருக்காங்க..!! நீங்க அழகா இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனா.. இவ்வ்வ்வளவு அழகா இருப்பீங்கன்னு நான் நெனச்சே பாக்கல..!! ஹையோ… சூப்ப்ப்பரா இருக்கீங்க..!!” மீராவின் விரல்களுடன் தனது விரல்களை கோர்த்துக் கொண்டு, விட மறுத்தாள் சங்கீதா.

“இதுதான் நாம ரெண்டு பேரும் வாக்கப்படப்போற வீடு ஸிஸ்டர்.. நல்லா பாத்துக்கங்க.. உலகத்துல எங்க தேடுனாலும், இந்த மாதிரி கேரக்டர்ஸ்கள ஒரே வீட்ல பாக்க முடியாது.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பு..!!” சன்னமான குரலில் அசோக்கின் குடும்பத்தை கிண்டலடித்தான் கிஷோர்.

“வெளில ரொம்ப வெயிலாம்மா..?? இப்படி களைச்சு போய் வந்திருக்கிறியே..?? ஏம்மா பாரதி.. பாப்பாக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது குடு..!!” மீராவின் மீதான அக்கறையை, மருமகளுக்கு உத்தரவு போடுவதில் காட்டினார் தாத்தா.