எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

“நான் இப்போ சொன்ன அடையாளத்தோட.. லாஸ்ட் ரெண்டு மூணு நாள்ல.. யாராவது உங்களை பார்க்க இங்க வந்தாங்களா..??” அசோக் அவ்வாறு கேட்கவும்,

“ம்ம்ம்ம்ம்..” அந்தப் பெண்மணி இப்போது நெற்றியை பிசைந்தவாறு யோசிக்க ஆரம்பித்தாள்.

“நல்லா யோசிச்சு பாருங்க மேடம்.. ஜஸ்ட்.. ரெண்டு மூணு நாள்தான் ஆகி இருக்கு.. கண்டிப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கும்..!!”

அசோக் தவிப்புடன் சொன்னான். அவள் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு..

“ம்ம்ம்… ரெண்டு மூணு நாள்னா.. ம்ம்ம்ம்ம்ம்… ஒருவேளை.. அ..அந்தப்பொண்ணா இருக்குமோ..??” என்றாள்.

“யாரு..??”

“மு..முந்தாநாள் யாரோ ஒரு பொண்ணு.. என்னை பாக்குறதுக்காக வந்து.. ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றதா.. மார்ட்டின் வந்து சொன்னான்..!!”

“மா..மார்ட்டின் யாரு..??”

“எங்க ஆபீஸ் அசிஸ்டன்ட்..!!”

“ஓ..!! அப்புறம்..??”

“ஆனா நான் வந்து பாக்குறப்போ இங்க யாரையும் காணோம்.. அந்தப்பொண்ணு அல்ரெடி கெளம்பி போயிருந்தா..!! ஒ..ஒருவேளை அவளா இருக்குமோ..??”

அவளுடைய பதிலைக் கேட்ட அசோக் அப்படியே நொந்து போனான்.. பாறையில் போய் முட்டிக்கொண்ட மாதிரி ஒரு உணர்வு அவனுக்கு..!!

பிறகு மார்ட்டினை அழைத்து விசாரித்தார்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த அந்தப்பெண்ணை அவன் வர்ணிக்க.. அது மீராதான் என்று அசோக்கால் உறுதி செய்துகொள்ள முடிந்தது..!!

மீராவின் தந்திரத்தில் சிக்கிய மார்ட்டினுக்கு.. அவளுடைய பெயர் கூட என்னவென்று தெரியாத நிலை..!! நினைவடுக்கில் பிரச்சினையுள்ள மேலாளருக்கு.. பெயரில்லாமல் துரும்பளவு தகவல் கூட தர முடியாத நிலை..!! பெருத்த எதிர்பார்ப்புடன் வந்திருந்த அசோக்குக்கு.. பெயரை கூட தெரிந்து கொள்ள முடியாமல்.. வெறுப்புடனும், வெறுங்கையுடனும் வெளியேறுகிற நிலை..!!

ஆபீஸுக்கு திரும்பிய அசோக்.. அன்று முழுக்க தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. ஏதோ யோசனையிலேயே ஆழ்ந்திருந்தான்..!! எளிய வழி என்று எண்ணியிருந்தது பொய்த்துப் போனது.. ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு..!! அந்த மொபைல் நம்பர்தான் இப்போது இருக்கிற ஒரே பிடிமானம் என்று தோன்றியது..!! இல்லை.. வேறேதாவது வழி இருக்கிறதா..??

அவனுடைய நண்பர்கள் அவனைச் சுற்றி கவலையாக அமர்ந்திருந்தனர்.. அவர்களுடைய கவலைக்கு காரணம், ஆசிரமத்தில் கிடைத்த ஏமாற்றம் அல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் உதவி செய்வதாக உறுதி அளித்தபிறகும்.. அசோக் தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறானே என்பதுதான்..!!

“டேய்.. விட்றா.. ரொம்ப யோசிக்காத.. அந்த எஸ்.பி எஸ்.ஐ-தான் இன்னும் நாலு நாள்ல அட்ரஸ் ட்ரேஸ் பண்ணித்தர்றேன்னு சொல்லிருக்காருல..?? நீ எதுக்கு இப்போ தேவை இல்லாம.. மண்டையை போட்டு உடைச்சுட்டு இருக்குற..?? கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு..!!”

கிஷோரின் வார்த்தைகள் அசோக்குக்கு எரிச்சலையே உண்டு பண்ணின..!! ‘என்னுடைய தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது..??’ என்று நினைத்துக் கொண்டான்..!! தனிமை வேண்டும் போலிருந்தது அவனுக்கு..!! எழுந்து.. நண்பர்களை விட்டு அகன்று போய்.. படிக்கட்டு ஏறி.. அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில்.. அகலமான அந்த கைப்பிடி சுவற்றில்.. தனியாக வந்து அமர்ந்து கொண்டான்..!!

உதட்டுக்கு சிகரெட் கொடுத்தான்..!! நெஞ்சில் நெருப்பு.. மூளையில் அனல்.. வாயில் புகை..!! காதல் தவிப்பில் அலைபாய்ந்த மனதை.. சற்றே கட்டுப்படுத்தி.. நிதானமாக யோசித்துப் பார்த்தான்..!! பரபரப்பான சென்னையின் மீது.. உயரத்தில் இருந்து பார்வையை வீசினான்..!! ‘இந்த பரந்து விரிந்த மாநகரில்.. பாவி நீ எங்கடி பதுங்கியிருக்கிறாய்..??’

“உன் வீடு எங்க இருக்கு..??” ஒருமுறை பேச்சினூடே அசோக் கேட்டதற்கு,

“ட்ரஸ்ட்புரம்..!!” என்று மீராவும் மிக இயல்பாகவே சொல்லியிருந்தாள்.

ஆனால்.. அதை இப்போது ட்ரஸ்ட்டுவதில்தான் அசோக்கிற்கு சிக்கல்..!! எந்த நேரத்தில்.. எந்த மனநிலையுடன்.. எந்த விளம்பர போஸ்டர் பார்த்து அந்த மாதிரி சொன்னாளோ..?? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!!

அசோக் மீராவை பிக்கப் செய்வதோ, ட்ராப் செய்வதோ.. வடபழனி பேருந்து நிலையம்தான்..!! அதைத்தாண்டி அவள் எங்கே செல்கிறாள்.. அவள் வீடு எங்கே அமைந்திருக்கிறது.. என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிற மாதிரி.. எந்த தகவலையும் அவனால் யோசிக்க முடியவில்லை..!!

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.