எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 12 49

“பின்ன என்ன..?? அவன் அவன் லட்சக்கணக்குல தொலைச்சுட்டு.. ஏமாந்த பணம் எப்போ வரும்னு தெரியாம.. வீட்டுக்கும் ஸ்டேஷனுக்குமா அலைஞ்சுட்டு இருக்கானுக..!! நீங்க என்னடான்னா.. மனசு உடைஞ்சதுக்குலாம் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துட்டீங்க..?? அங்க பாரு.. அவ்வளவும் பெண்டிங்ல இருக்குற கேஸ் ஃபைல்ஸ்..!! ஆயிரத்தெட்டு கம்ப்ளைன்ட் வந்து கெடக்கு.. அம்புட்டும் வழிப்பறி, ராபரி, கழுத்தறுப்பு, கற்பழிப்பு..!! அதைக்கவனிக்கவே இங்க ஆளும் இல்ல.. நேரமும் இல்ல..!! இந்த லட்சணத்துல.. இப்போ உங்க கம்ப்ளைன்ட் ரொம்ப முக்கியமா..?? வீட்டுக்கு போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்கயா.. போங்க..!! சும்மா கெளம்பி வந்துட்டிங்க.. மனசு, மசுருன்னுட்டு..!!” கனகராஜன் அந்த மாதிரி எகத்தாளமாக சொல்ல, அசோக்குக்கு இப்போது சுருக்கென கோவம் வந்தது. அந்த கோவத்துடனே அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து,

“என்ன ஸார் நீங்க.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறீங்க..?? லட்சக்கணக்குல தொலைச்சா மட்டுந்தான் அது பாதிப்பா..?? எத்தனை கோடி ரூபா கொடுத்தாலும்.. என் மனசுல உண்டான பாதிப்பு சரியாகாது ஸார்.. அது தெரியுமா உங்களுக்கு..?? அவ வந்தாத்தான் அது சரியாகும்..!! அ..அவ.. அவ என் உயிர் ஸார்.. என் வாழ்க்கை..!! அவ எனக்கு திரும்ப கெடைக்கலைன்னா.. என் லைஃபே போச்சு.. அவ்வளவுதான்.. Its gone..!!!! அப்புறம் நான் வாழ்றதுல அர்த்தமே இல்ல..!! கொஞ்சமாவது என் நெலமையை புரிஞ்சுக்கங்க ஸார்.. சும்மா வாயிக்கு வந்தபடி பேசாதிங்க..!!”

ஆதங்கத்துடன் அசோக் பேசியதை ஸ்ரீனிவாச பிரசாத் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் அவ்வாறு குரலை உயர்த்தி பேசியது, இப்போது கனகராஜனின் ஆத்திரத்தை கிளறிவிட்டது.

“டேய்.. என்ன.. திமிரா..?? ஸ்டேஷனுக்குள்ளயே வந்து ஓவரா சவுண்டு விடுற..?? உள்ள தூக்கிப்போட்டு பேத்தெடுத்துடுவேன் ராஸ்கல்..!!”

என்று அசோக்கை பார்த்து சீறியவாறு, சேரில் இருந்து எழுந்தார். அவருடைய வலது கையை நீட்டி, அசோக்கின் சட்டையை பற்ற எத்தனித்த அவரை,

“கனகு..!!!!!”

என்று அவருக்கு பின்னால் இருந்து வந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் கடுமையான குரல் தடுத்து நிறுத்தியது. கனகராஜன் திரும்பினார். சப்-இன்ஸ்பெக்டரை கண்டதும் அவருடைய உடலில் உடனடியாய் ஒரு விறைப்பு. அவருடைய குரலிலும் அந்த விறைப்பு கூடியிருக்க,

“ஸார்..!! வ..வந்ததுல இருந்தே ராங்கா பேசிட்டு இருக்காய்ங்க ஸார்..!! ஏதோ ஒரு பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டாளாம்.. உடனே இவரு மனசு உடைஞ்சு போயிட்டாராம்.. கம்ப்ளைன்ட் குடுக்க வந்துட்டாய்ங்க.. அந்தப்பொண்ணு பேர் கூட இவய்ங்களுக்கு சரியா தெரியல..”

“ப்ச்.. விடுயா..!!”

“நாம இவய்ங்களுக்கு அந்தப்பொண்ணு அட்ரஸ் கண்டுபிடிச்சு தரணுமாம் ஸார்..!! போலீஸ் ஸ்டேஷன்னு நெனச்சாய்ங்களா.. இல்ல போஸ்ட் ஆபீஸ்ன்னு நெனச்சாய்ங்களான்னு தெரியல..!!”

“யோவ்.. விடுன்றேன்ல.. எல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்..!!”

சற்றே எரிச்சலாக கனகராஜனிடம் சொன்னார் ஸ்ரீனிவாச பிரசாத். பிறகு மெல்ல நகர்ந்து அசோக்கை நோக்கி சென்றார். இப்போது அசோக்கின் நண்பர்களும், சேரை விட்டு எழுந்து நின்றனர். மற்றவர்களை விட்டுவிட்டு அசோக்கை நெருங்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அவனுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

“ஏமாந்தவன் நீதானா..??”

“ஆ..ஆமாம்..!!”

“உன் பேர் என்ன..??”

“அ..அசோக்..!!”

“ம்ம்..!! சரி.. நீ மட்டும் என்கூட வா..!! மத்தவங்கல்லாம் வீட்டுக்கு போங்க..!!”

இயல்பாக சொல்லிவிட்டு அவர் முன்னால் நடக்க, அசோக்கும் அவன் நண்பர்களும் அவரை சற்றே குழப்பமாக பார்த்தனர். அசோக் நின்ற இடத்தை விட்டு இன்னும் அசையாமல் இருக்க, ஒரு நான்கைந்து எட்டுகள் எடுத்து வைத்திருந்த ஸ்ரீனிவாச பிரசாத், இப்போது திரும்பி பார்த்தார்.

“ப்ச்.. வான்றேன்ல.. வா..!!”

என்று கடுமையான குரலுடன் அசோக்கை கையசைத்து அழைத்தார். அசோக் இப்போது தயங்கி தயங்கி அவரை நோக்கி சென்றான். அவர் முன்னால் நடக்க, இவன் அவரை பின்தொடர்ந்தான். அசோக்கின் நண்பர்களும், கனகராஜனும் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தனர்.

Updated: June 14, 2021 — 8:33 am

1 Comment

  1. Super.i realy enjoyed.pls continued.dont stopped.

Comments are closed.