வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 112

கை விண்ணென்று வலித்தது!

அடித்த எனக்கே இப்படி இருக்கிறது. அடி வாங்கியவளுக்கு எப்படி இருக்கும்?

ஆனால், அவளோ எந்தச் சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். செய்த செயலின் வீரியம், எனது அடி, இத்தனையும் தாண்டி, ஒரு துளி கண்ணீர் கூட இல்லாமல் கீழே, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏய், சொல்லித் தொலை, ஏன் இப்பிடி இருக்க?

பெண்கள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது என்ற நிலையில் இருந்த நான், கொஞ்சமேனும் மரியாதையாகப் பார்க்கிறேன் என்றால், அதற்குக் காரணமே இவளும், இவ ஃபிரண்டும்தானே? அப்படிப்பட்டவள், இந்தக் காரியம் செய்யத் துணிந்ததில், கடுங்கோபம் எனக்கு!

என் வார்த்தைகளின் கடினம் அவளை பாதித்தது. என்னை நிமிர்ந்து பார்த்தாள்! வெறித்துப் பார்த்தாள்!

நீ, உன் ரூமுக்கு போ.

எதுக்கு? நீ மறுபடி சாவறதுக்கா?

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள், இப்பொழுது பொங்கினாள்.

நான் வாழுறேன், இல்ல சாவுறேன், உனக்கென்னடா வந்தது? உன் வேலையை மட்டும் பாரு!

இப்பொழுது எனக்கு கோபம் வந்தது. ஏதோ போனாப் போகுதுன்னு வந்தா, ஓவரா பேசுறா?!

நீ, எக்கேடோ கெட்டுப் போ! ஆனா, என் வீட்டுல வந்து, நீ சூசைட் பண்ணா, அது எனக்குதான் தலைவலி. சாவுறவ, ஏன் எனக்கு தலைவலியைக் கொடுக்குற? கோபத்தில் இன்னும் வார்த்தைகள் தடித்தன. சொன்ன பின்தான் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.

ச்சே! இவ தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா, எவ்ளோ மனக் கஷ்டத்துல இருந்திருக்கனும்? இவளோட கஷ்டத்தை போக்கலைன்னாலும், இன்னும் கஷ்டப்படுத்தாமனாச்சும் இருக்கனும், அதை விட்டுட்டு நானும் இப்படி பேசுனா, பாவம் என்ன பண்ணுவா?

அவள் அடிபட்டாற போல் என்னைப் பார்த்தாள். என்னையே பார்த்தவள், அழுத்தமாகச் சொன்னாள்.

ஓ, இது உன் வீடுல்ல? சாரி, எனக்கு தோணலை! மன்னிச்சிடு!

நீ தப்பா நினைக்காட்டி, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்க தங்கிக்கிறேன். நாளைக்கு காலையில கிளம்பிடுறேன். நீ இப்ப கிளம்பலாம். பயப்படாத, இனி உன் வீட்ல நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என்னால, யாருக்கும் எந்த தொந்தரவும் வர்றது எனக்குப் புடிக்காது!

ராட்சசி, நான் ஒரு அடி அடித்தால், இவள் திருப்பி பல மடங்கு கொடுக்கிறாள்.

நீ கிளம்பு! நான் பாத்துக்குறேன்.

சாரி!

இட்ஸ் ஓகே! எனக்குன்னு யாராச்சும் இருப்பாங்கன்னு, நானும் ஒரு கனவுலியே வாழ்ந்துட்டேன். அது, என் தப்புதான். சரி நீ போ! நான் பாத்துக்குறேன்!

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பவும், அவளிடம் அந்த கம்பீரம் இருக்கிறது. சுயமாக, உழைத்து மேலே வந்தவர்களிடம் மட்டுமே அந்த கம்பீரம் இருக்கும். இந்த கம்பீரம், நேர்மையின் சின்னம்.

என்னைப் போலத்தானே இவளும்! சொல்லப் போனால், என்னை விட இவளுக்குதான் சிரமங்கள் அதிகமிருந்திருக்கும். அப்போது கூட, அதையெல்லாம் எளிதில் வெளிகாட்டிக் கொள்ளாமல், நன்கு படித்து, தன்னை முன்னேற்றிக் கொண்டவள்தானே?

இன்று ஏன் இப்படி பேசுகிறாள்? அதுவும் யாரும் இல்லை என்று? என்னதான், அவளது சின்ன மாமானார், மாமியார் மீது பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லாவிட்டாலும், அந்த வீட்டுக்கு பெரியவர்கள் அவர்கள்தானே? எல்லாவற்றுக்கும் மேலாக இவள் கணவன் என்ன ஆனான்??? ஏன் யாரும் எனக்கு இல்லை என்கிறாள்?!

தவிர, ஏன் இப்படி இருக்கிறாள்? பல மாதங்களுக்கு முன், கல்யாணத்தில் பார்த்தது. அப்பொழுது சந்தோஷமாகத்தானே இருந்தாள்? இப்பொழுது ஏன் இவ்வளவு வாடி இருக்கிறாள்? இவ புருஷனும் ஓரளவு பணக்காரன்தானே? என்ன பிரச்சினை இவளுக்கு?

எனக்கு அவளைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது! என்னைப் போலவே, சுயநலம் பிடித்த மிருகங்களின் மத்தியில் வளர்ந்தாலும், சுயத்தை இழக்காத, நல்ல பண்புகளுடன், தன்னைத் தானே வளர்த்துக் கொண்ட இன்னொரு ஜீவன்!

ம்ம்.. பெரு மூச்சு விட்டேன். அவள் அருகில் சென்றேன்!

என்ன ஆச்சு? ஏன் இப்பிடி இருக்க?

நீ இன்னும் கிளம்பல? நான் உன்னைக் கெளம்பச் சொன்னேன்! அதான் நாளைக்கு இந்த வீட்டை விட்டுட்டு போறேன்னு சொல்லிட்டேன்ல?!

அதான் சாரி சொல்லிட்டேன்ல? இன்னும் ஏன் இப்பிடியே பேசுற? சும்மா சொல்லு! நானும் வீம்பை விடவில்லை!

என்னை அவளும், அவளை நானும், மிக நன்றாகப் புரிந்திருந்தாலும், நாங்கள் ஒன்றாக இவ்வளவு நேரம் தனியாகப் பேசியதே இன்றுதான் என்று நினைக்கிறேன். வாய்விட்டே பேசிக் கொள்ளாதவர்கள், மனம் விட்டா பேசியிருக்கப் போகிறோம்? அதனாலேயே நான் வீம்பாகப் பேசினேன்.

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.