கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“எனக்கு மட்டும் தைரியமில்லேன்னு பாக்கறீயா?” மீனா அவனை உற்று நோக்கினாள்.

‘என்ன சொல்றே நீ?”

மீனா அவனுக்கு பதில் சொல்லவில்லை. சுற்று முற்றும் ஒரு முறைப் பார்த்தாள். எதிர் வீட்டு மாடியைப் பார்த்தாள். பக்கத்து வீட்டு தோட்டத்தைப் பார்த்தாள்.

சீனுவுக்கு அவள் என்ன செய்யப்போகிறாள் என்று புரிந்து அவன் அவளிடமிருந்து விலகுவதற்கு முன் மீனா சீனுவின் முகத்தை தன் புறம் வேகமாக இழுத்தாள். தன் உடலின் மொத்த வலுவையும் தன் ஈர உதடுகளில் குவித்தாள். தன் மனதிலிருக்கும் காதலை அவன் இதழ்களிடம் தன் இதழ்களால் அன்புடன், ஆசையுடன், நேசத்துடன், பாசத்துடன், அழுத்தமாகச் சொன்னாள். சீனு ஆடாமல் அசையாமல் நின்றவன் தன் மனதுக்குள் ஒன்று முதல் பத்து வரை எண்ணினான். அவன் உதடுகளின் மேலிருந்த அழுத்தம் குறைந்தது.

“இப்ப புரிஞ்சுதா…?” மீனா அவன் பதிலுக்கு காத்திராமல், அவன் உதட்டை அழுத்திக் கிள்ளியவள், வீட்டுக்குள் மானாக துள்ளி ஓடினாள்.

சீனு தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு மவுனமாக வீட்டுக்குள் மெல்ல நுழைந்தான். சென்டர் டேபிளின் மேல் கிடந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தவன், வெளியில் நின்றிருந்த காரைத் துடைக்க ஆரம்பித்தான்.

நன்றியுடன் நொண்டிக்கருப்பனைப் பார்த்தான். நொண்டிக்கருப்பன் அவனை நோக்கி ஆதரவாக தன் வாலை ஆட்டிக்கொண்டு நின்றது.

“ம்ம்ம்… அப்பாடா… நிம்மதியா இப்படி தூங்கி எவ்வளவு நாளாச்சு?” சுகன்யா காலையில் நிதானமாக எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்த போது காலை மணி எட்டரையைத் தாண்டியிருந்தது.

பாசத்தையும், அன்பையும், மழையா பொழியற தாத்தா, பாட்டி எனக்கு கிடைச்சிருக்காங்க. நான் கொடுத்து வெச்சவ. நான் ஆசையா தாத்தா, பாட்டீன்னு கூப்பிடறதுலேயே அவங்க பூரிச்சிப் போயிடறாங்க. வயசானவங்க முகத்துல மலர்ற மகிழ்ச்சியைப் பாக்கும் போது, எனக்கு கிடைக்கற நிம்மதியை, ஆனந்தத்தை, இத்தனை நாளாக, நான் ஏன் இழந்திருந்தேன்..? மனதுக்குள் சட்டென ஒரு வெறுமை படர்ந்தது.

சுகன்யா…! அந்தந்த நிமிஷத்துல கிடைக்கற சுகத்தை முழுசா நீ அனுபவிடீ. ஏன் உன் வாழ்க்கையில கடந்து போனதை நெனச்சு நெனைச்சு வீணா ஏங்கறே? நாளைக்கு உன் லைப்ல என்ன நடக்கப் போகுதுன்னு நெனைச்சும் கவலைப் படாதே! அவள் மனதே அவளுக்கு ஆறுதல் சொன்னது.

நிதானமாக பரபரப்பில்லாமல் குளித்து, சிம்பிளாக ஒரு காட்டன் புடவையை உடலில் சுற்றிக்கொண்டு, உள்ளத்தில் புத்துணர்ச்சியுடன், கள்ளக்குரலில் ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே, சுகன்யா, தன் கூந்தலை அள்ளி முடிந்தவாறே ஹாலுக்குள் நுழைந்தாள்.

சிவதாணு பாயை விரித்து கூடத்தில் உட்க்கார்ந்திருக்க, குமாரசுவாமியும், ரகுராமனும் எதிரெதிரில் அமர்ந்து வெள்ளிக்கிழமை விசேஷத்திற்கு, உறவினர்களில் யார் யாரை அழைப்பது என பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அப்பா… எப்ப வந்தீங்கப்பா?” சுகன்யா, சிறு குழந்தையாக மாறினாள். வேகமாக ஓடி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

முழுசா பதினைஞ்சு வருஷம் என் அப்பாவை நான் பிரிஞ்சி இருந்தேன். மனசுக்குள்ள நான் பொதைச்சு வச்சிருக்கற ஆசையெல்லாம், வெள்ளமா, காட்டாறா கரையைக் கடந்து ஓடுது. அவள் மனம் விகசித்து ரெக்கைக்கட்டிக் கொண்டது.

“வெள்ளிக்கிழமை உனக்கு வேண்டியவங்க எல்லாரும் வர்றாங்க; அவங்களையெல்லாம் வரவேற்கறதுக்கு நீ ரெடிதானேம்மா?” குமாரசுவாமி மென்மையாக பேசினார்.

“எனக்கு வேண்டியவங்க…! என்னப்பா சொல்றீங்க?” சுகன்யா அவர் சொன்னது புரியாமல் திகைத்தாள்.

“செல்வாவுக்கும், உனக்கும் ரெண்டு நாள்லே நிச்சயதார்த்தம் பண்றதா இருக்கோம். நீதான் என் பொண்ணுன்னு நடராஜன் கிட்ட சொல்லிட்டேன். அவர் ஒரு நிமிஷ நேரம் திகைச்சு நின்னார். அப்புறம் ரொம்பவே சந்தோஷமாயிட்டார். மொறையா உன்னைப் பொண்ணு கேட்டு அவங்க வீட்டுலேருந்து வர்றாங்க. ஆர் யூ ஹேப்பி..?”

“ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்ப்பா…” சுகன்யா தந்தையின் கழுத்தை தன் முகம் மலர கட்டிக்கொண்டாள். இந்த விஷயத்தை முன்னாடியே என் கிட்ட ஏம்பா சொல்லலை? தந்தையிடம் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.