கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“கங்கிராட்ஸ் சங்கர்… ம்ம்ம். மேரேஜ் வாழ்க்கையில ஜெயிச்சிடீங்க..!!” சங்கரின் கையைப் பிடித்து வலுவாக குலுக்கினாள் சுகன்யா.

“எல்லாம்… உன் ஃப்ரெண்டோட விடாமுயற்சிதான்… என்னை தூங்கவிட்டாத்தானே?”

“கிண்டலா…? வேணி பாத்தியாடீ உங்க வீட்டுக்காரர் பேசறதை? அப்புறம் ரொம்பத் தேங்க்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்… ரெண்டு நாள் ஆஃபீஸுக்கு லீவு எடுத்துகிட்டு, உங்க வைப்ஃபை அழைச்சிக்கிட்டு நீங்க பங்கஷனுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கலை. மாணிக்கம் மாமாவும் வசந்தி அத்தையும்தான், வேணியை அழைச்சிக்கிட்டு வருவாங்கன்னு நினைச்சேன்…” சுகன்யா குழந்தையின் குதூகலத்துடன் முகம் மலர சிரித்தாள்.

“சுகன்யா, நான் வீட்டுல இருக்கறதா வேண்டாமா? நான் உன் ஃப்ரெண்டை உன்னோட பங்கஷனுக்கு கூட்டிட்டு வரலேன்னா, அவ என்னை சும்மா விடுவாளா?”

“தோ… பாருங்க… என்னமோ எங்கிட்ட ரொம்பத்தான் பயப்படற மாதிரி நடிக்கிறீங்க…” வேணி பொய்யாக சங்கரை முதுகில் அடித்தாள்.

“பாத்தியா சுகா, வந்த எடத்துலேயே நாலு பேரு எதிர்ல என்னை இப்படி மொத்தறாளே? எங்க ரூமுக்குள்ள தனியா இருக்கும் போது என்னை என்னப் பாடுபடுத்துவா? பாக்கறதுக்கு அய்யோ பாவம் மாதிரி ஆக்டிங் குடுப்பா.. அவளுக்கு கோபம் வந்திச்சி.. என்னை உருட்டி பொரட்டி பட்டையைக் கிளப்பிடுவா…!!”

“சங்கர்.. வீட்டுக்கு வீடு வாசப்படித்தாம்பா…நான் வாங்காத அடியா!!” குமாரசுவாமி தன் முதுகைத் தடவிக்கொண்டே சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார்.

“ம்ம்ஹூம்… வாயை மூடுங்களேன்.. எல்லார் எதிர்லேயும் மானத்தை வாங்கறீங்க..” வேணி தன் கணவன் கையை முறுக்கினாள்.

“சுகா… புருஷனை எப்ப அடிக்கணும்..!! எப்ப அணைக்கணும்…!!! இந்த டெக்னிக்கையெல்லாம், இப்பவே முழுசா உன் ஃப்ரெண்டுகிட்ட கத்துக்கோ… பர்ஃபெக்ட் டீச்சர் இந்த மேட்டர்ல… நல்லா விலாவரியா சொல்லி குடுப்பா உனக்கு… நீ ஃபீஸ் எதுவும் தரவேண்டாம்… உன் மேரேஜ்க்கு அப்புறம் செல்வாவை டீல் பண்றதுக்கு வசதியா இருக்கும்…!!!” சங்கர் சுகன்யாவை முகம் சிவக்க வைத்தான்.

“ஏங்க இப்படீ சின்னப்பொண்ணுகிட்ட கன்னாபின்னான்னு உளர்றீங்க…” வேணீ தன் புருவங்களை நெறித்து அவனை முறைத்தாள்.

“ஏன்டீ… புருஷனை அடிக்கற கைதானேடீ… ஆசையாவும் அணைக்கணும்.. அதைத்தான் சொன்னேன்.” சங்கர் அன்று ஃபுல் மூடில் இருந்தான்.

மாடியில் சுகன்யாவின் அறையில் மதிய உணவுக்குப்பின் அவர்கள் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

***

“வாங்க, வாங்க – சந்தனம், பூ, குங்குமம் எடுத்துக்குங்க…!!”

சங்கரும் வேணியும் சென்னையிலிருந்து வந்த நடராஜனின் குடும்பத்தினரையும், உடன் வந்த ராமசாமி, சியாமளா தம்பதியினரையும், வரவேற்று உபசரிக்கும் பொறுப்பை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு வந்தவர்களை வாயார வரவேற்றார்கள். வேணியின் இனிமையான முகமும், அவள் முகம் முழுவதும் நிரம்பியிருந்த சிரிப்பையும் கண்ட மல்லிகாவின் மனம் சட்டென நிறைந்தது.

“நீங்க…” மல்லிகா அவள் கையைப்பற்றிக்கொண்டு இழுத்தாள்.

“நான் கிருஷ்ணவேணி… வேணீன்னு கூப்பிடுவாங்க… சுகன்யாவோட ஃப்ரெண்ட்… சுகன்யா சென்னையில எங்ககூடத்தான் இருக்கா… அவ மாமா ரகு என் மாமனாரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… நீங்க எட்டு ஊரு தேடினாலும் எங்க சுகன்யா மாதிரி ஒரு பொண்ணை செல்வாவுக்கு நீங்க தேடிப்பிடிக்க முடியாது..!” வேணி புன்னகைத்தாள்.

நல்லசிவத்தின் குடும்பத்தினரையும் மற்ற நெருங்கிய உறவினர்களையும் குமாரும் சுந்தரியுமாக நேரில் சென்று, விசேஷத்திற்கு முதல் நாள் மாலையே வந்துவிடவேண்டும் என அன்பு கட்டளையிட்டுவிட்டு வந்திருந்தார்கள்.

ரகுராமனின் வீட்டு மாடி அறைகளில், வரும் விருந்தினர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொட்டைமாடியில் சாப்பிடுவதற்கு வசதியாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டு ஷாமியானாவும் விரிக்கப்பட்டிருந்தது.

“சிவ சிவா… ரகு… இவங்கள்ல்ல மாப்பிள்ளை யாருப்பா? இவர்தான் தமிழ்செல்வனா? இவர் அவரோட சினேகிதர் சீனுவா? வாங்க தம்பி நான் தான் சுகன்யாவோட தாத்தா… இவ என் வீட்டுக்காரி கனகா…” வீட்டுக்குள் வந்தவர்களை சிவதாணுவும், கனகாவும் வரவேற்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

சிவதாணுவின் முகத்தில் துலங்கிய விபூதியையும், அவர் கழுத்தில் கிடந்த ருத்திராக்ஷ மாலையையும் கண்ட ராமசாமி, வந்த எடத்துல நம்ம ரசனைக்கும் ஏத்தமாதிரி ஒரு ஆள் கிடைச்சிட்டார் என மகிழ்ந்து போனார். இனம் இனத்தை சேருமல்லவா?

“செல்வா, சீனு, அது யாரு மீனாவா, இப்படி எல்லாம் வாங்க…” பரஸ்பரம் எல்லோரையும் ஒருவருக்கு ஒருவர் ரகுராமன் அறிமுகம் செய்வித்துக் கொண்டிருந்தார்.

“நடராஜன்… நீங்க என்னை மன்னிக்கணும்… கொஞ்சம் லேட்டாயிடுச்சி… நான் முன்னே நின்னு உங்களையெல்லாம் வரவேத்து இருக்கணும்! எங்க உறவுகளை உங்களுக்கு அறிமுகம் பண்ணியிருக்கணும்… கிளம்பற நேரத்துக்கு ஒரு சின்ன வேலை … பிரயாணமெல்லாம் சவுகரியமா இருந்ததா?” தன் கைகளைக் கூப்பிய வண்ணம் குமாரசுவாமி உள்ளே நுழைய அவரைத் தொடர்ந்து, சுந்தரியும், சுகன்யாவும் வந்தனர்.