கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“என் மாமியார், அவங்க புருஷன் எதிர்ல வாயைத் தொறக்க மாட்டாங்க… நீ உன் தாத்தாவை வேணுமின்னா கேளு?” சுகன்யா தன் பாணத்தை வேறு திசையில் செலுத்தினாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது..!! தாத்தாக்கிட்ட எப்ப எனக்கு என்ன வேணுமோ அப்ப அவரை கேட்டு வாங்கிக்கறேன். இப்ப நீ வாங்கி குடுப்பியா மாட்டியா?”

“சுகா… என்னம்மா இப்படி கொழந்தை மாதிரி அடம் பிடிக்கறே?” தன் பெண் மிஞ்சுவதைக் கண்டு சுந்தரி கெஞ்ச ஆரம்பித்தாள்.

“நம்ம குடும்ப வழக்கப்படித்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? இல்லே நான்தான் பண்ணிக்கப் போறேனா? இப்ப என் ஆசையில நீ ஏன் குடும்ப பழக்கத்தையெல்லாம் நடுவுலே கொண்டாந்து திணிக்கறே?” தன் தாயின் குரல் தணிந்ததும் சுகன்யா, தன் குரலை உயர்த்தினாள்.

“சுகா… நீ நல்லாக் கேட்டுக்கடீ; நீ உன் வாயலாத்தான்… இப்படி விதண்டாவாதம் பேசிப் பேசித்தான் உன் வாழ்க்கையில கஷ்டப்படப் போறே..!!” சுந்தரி தன் மூஞ்சை சுளித்துக்கொண்டு தன் கணவரின் அருகிலிருந்து எழுந்தாள்.

“சுந்தரி.. நம்ம கொழந்தையை நீயே இப்படி மனம் கெட்டுப் பேசாதேம்மா.. ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது… நம்ம சொல்லே பட்டுன்னு பலிச்சிடும்.. இதுக்காகத்தான் என் மாமனார் எப்பவும் வீட்டுல நல்லதையே பேசணும்மின்னு சொல்லுவாரு…” கனகா தன் மருமகளையும், பேத்தியையும் சமாதானப்படுத்தும் நோக்கில் மென்மையாகப் பேசத் தொடங்கினாள்.

“பாட்டீ நீங்களே சொல்லுங்க; நாலு பேரு எதிர்ல எனக்கு அவரு ஒரு கிஃப்ட் குடுக்கறாரே? நானும் தானே அவருக்கு ஈக்வலா சம்பாதிக்கறேன்; பதிலுக்கு நானும் ஏதாவது குடுக்க வேணாமா? அவங்க ஃப்ரெண்ட்ஸ் நான் என்னக் கிஃப்ட் கொடுத்தேன்னு கேட்டா, அவர் பதில் சொல்ல முடியாம தன் தலை குனிஞ்சு நிக்கணுமா?”

“சரிடாச் செல்லம்… நீ சொல்ல நினைக்கறதை மெதுவா சொல்லேன். அம்மாக்கிட்ட நீ ஏன் கோபமா குரலை உயர்த்திப் பேசறே? நீ சீக்கிரமே இன்னோரு வீட்டுக்கு போகப் போறவ… உன் மனசுல நீ வெறுப்போட பேசலைன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். ஆனா நீ போற எடத்துல இப்படி கோபமா பேசினா அவங்க சும்மா இருப்பாங்களா?” ரகு சுகன்யாவை தன் பக்கம் மெல்ல இழுத்தார்.

“அம்மா, இந்த மோதிரத்துக்கு நான் பணம் குடுக்கறேன்… நீங்க யாரும் இதுக்காக செலவு பண்ண வேண்டாம்..” சுகன்யா அவர்கள் சொல்லுவதை புரிந்து கொள்ளாமல், குரங்குப்பிடி பிடித்தாள்.

“கண்ணு… சுகா, பணத்தைப் பத்தி அம்மா பேசினாளா? சொல்றதை நீ மொதல்லே புரிஞ்சுக்கோ… ஏற்கனவே உன் மாமா ரகு செல்வாவுக்குன்னு செயின் வாங்கி வெச்சிட்டாரு; முறைப்படி அவருக்கு புது துணியெல்லாம் எடுத்து வெச்சிருக்கோம்…”

“ம்ம்ம்…சொல்லுங்கப்பா..”

“உன் சுயமரியாதைக்கோ, சுயகவுரவத்துக்கோ எந்த விதத்திலேயும் குறைவு ஏற்படாத மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பண்ணி வெச்சிருக்கோம். நிச்சயமா உன் செல்வாவோ, அவனைச் சேர்ந்தவங்களோ, எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு உன் நிச்சயதார்த்தம் நடக்கும். அதனால நீ இப்ப குறுக்குலே பூந்து புதுசா எந்தப் பழக்கத்தையும் உண்டாக்க வேணாம்ன்னு அம்மா சொல்றாங்க. அவ்வளவுதான்..”

குமாரசுவாமி தன் மகளுக்கு நிதானமாக சுந்தரியின் மனநிலையைப் புரியவைக்க முயன்றார். அவருக்கு தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் முழுவதுமாக இருந்த போதிலும், அந்த நேரத்தில் தன் மனைவியை விட்டுக்கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை.

“சிவ சிவா… சுந்தரி..!! கொழந்தை என்னமோ ஆசைப்படறா… அவ விருப்பப்படி விடும்மா… நான் அன்னைக்கு உங்க ரெண்டு பேருகூட வாக்கு வாதம் பண்ணேன். என்ன பலன் கிடைச்சது?”