இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

ஒரு சிகப்பு கம்பிளி போர்வை தரையில் அழகாக விரிக்கப்பட்டு அதில் நால்வர் வட்டமாக உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவில் சீட்டுக்கட்டு அட்டைகள் சிதறி கிடக்க, அதற்கு நடுவிலிருந்த சீட்டுக்கட்டிலிருந்து ஒரு அட்டையை எடுத்த நாகராஜன் மற்றொரு அட்டையை தரையை பார்த்த மாதிரி கவுத்தி வைத்து விட்டு “யேய்ய்!!!!! ரம்மி அடிச்சிருச்சு தொடர்ந்து அஞ்சாவது தடவையா” என்று தான் அழகாக அடுக்கி வைத்திருந்த 13 அட்டைகளையும் தரையில் மற்றவர்கள் பார்வைக்காக வைத்தார்..

“ஹையோ போங்க!!! ச்சா!! இன்னும் ஒரு கார்டு சரியா வந்திருந்துச்சுன்னா நான் முடிச்சுருப்பேன்” என்று சலிப்பாக சொன்னாள் கிஷோரின் அம்மா..

“பரவால்ல விடுமா.. இன்னைக்கு நாள் அப்பாவோடையது ன்னு நினைக்குறேன் அதான் வரிசையா ஜெயிச்சுட்டே இருக்காரு. நாமளாச்சும் பரவால்ல ம்மா, நீ ஒரு தடவ நான் ரெண்டு தடவ ஜெயிச்சுருக்கோம்.. ஆனா அண்ணன் விளையாண்ட எல்லா தடவையும் தோத்துட்டு தான் இருக்கிறான்.. ஆனாலும் பல்ல காட்டிட்டே இருக்குறான் பாரு” என்றான் ராம்..

“டேய் என்னடா கிஷோர், நானும் பாத்துட்டு தான் இருக்கேன், நேத்து நைட்டு வந்ததுல இருந்து ஏதோ சிரிச்சுட்டே இருக்குற, என்னன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம் ல” என்று சிதறி கிடந்த அட்டைகளை ஒன்றாக அடுக்கிக் கொண்டே கேட்டாள் கிஷோரின் அம்மா.

கிஷோர்: ஒரு சந்தோசமான விஷயம் அது.. சொல்லிடவா

நாகராஜன்: டேய் ஸீன் போடாம சொல்லு டா

“கலை” என்று சொல்லிவிட்டு உதட்டில் சிரிப்புடன் மூவர் கண்களையும் பார்த்து சற்று இடைவெளி விட்டான் கிஷோர்.. மூவரும் ஆர்வமாக கிஷோரின் உதட்டையே பார்க்க “ஓகே சொல்லிட்டா” என்றான்..

மூவரும் யேய்ய்!!!!!!!!! என்று ஆனந்தமாக கத்த, ராம் கீழே கிடந்த அட்டைகளை அள்ளி மேலே பறக்க விட்டான், கூடவே கிஷோரின் அம்மாவும் அப்பாவும் உடன் சேர்ந்து அட்டைகளை மேலே அள்ளி எரிந்து அமர்க்களப் படுத்தினர்..

“யே தங்கம்!! இத நீ நேத்து நைட்டே சொல்லிருக்கலாம் ல டா.. எங்க கிட்ட சொல்றதுக்கு நல்ல நேரம் பாத்துக்கிட்டு இருந்தியாக்கோம்” என்று கனிவாக கேட்டாள் கிஷோரின் அம்மா..