இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டி, ஆனா உங்கம்மா க்கு என்னை கொஞ்சம் கூட பிடிக்கல போலருக்கு..”

“ஆமா அதுல என்ன சந்தேகம்.. ஆனா அப்பாக்கு பிடிச்சுருக்குல டா அது போதும்.. அப்பா இருக்குற வரைக்கும் எல்லாம் நல்லபடியா போகும், எந்த பிரச்சனையும் இல்ல டா” மறுபடியும் அவன் உதட்டில் மெல்லிய முத்தம் இட்டு மறுபடியும் அவன் கையை பிடித்து மாடிக்கு இழுத்துச் சென்றாள். மாடியின் ஒரு ஓரத்தில் அவனை நிற்க வைத்து “ஹேய் கொஞ்ச நேரம் இங்கயே நில்லு.. நான் அப்பா ட்ட பேசிட்டு உன்னை கூப்பிடுறேன்” என்றாள்..

அந்த மொட்டைமாடியின் மறுபுறத்தில் கம்பீரமே தனது யதார்த்தம் என்பது போல் நின்று சாலையை ரசித்துக் கொண்டிருந்த ராஜாராமின் அருகில் வந்தாள் கலை..

அவள் அருகில் வந்ததும், ராஜாராம் :”அந்த தம்பி பேரு என்னம்மா சொன்ன கிஷோரா?? தம்பி என்ன பண்றார்?”

“ஒரு பெரிய MNC கம்பெனி ல நல்ல சம்பத்துல வேலை ப்பா.”

“ஓ அப்படியா?? சொந்தமா தொழில் வச்சு நடத்துனா நல்லா இருக்கும், சரி சரி அது ஒண்ணுமில்ல அப்புறம் கூட பாத்துக்கலாம்.. தம்பிக்கு சொந்த ஊரு சென்னையா?” என தொடங்கி குடும்பம் என தொடர்ந்து கிஷோரின் ஜாதகத்தை தவிர மற்ற அணைத்து விஷயங்களையும் கலை மூலமாக விசாரித்து முடித்தார்..

பேச அழைத்து என்னவோ கலை.. ஆனால் மகளின் மனதில் இருந்ததை படித்ததை போல் ராஜாராமே அனைத்தையும் பேசி முடித்தார்..

கேள்விகள் மட்டுமே இவ்வளவு நேரம் ராஜாராமிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்த கலை அவரிடமிருந்து ஒரே ஒரு பதிலை மட்டும் பெறுவதற்கு ஆவலாக எதிர்பார்த்து அவர் கண்களை பார்த்து கொண்டிருந்தாள்.. ராஜாராம் எதுவும் கூறாமல் அந்த மாடியின் மற்றொரு மூலையில் சுவற்றில் லேசாக சாய்ந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த கிஷோரை பார்த்தார்.

ராஜாராமின் பார்வை தன் மேல் விழுந்ததும், காவலர் உடல்தகுதி தேர்வுக்கு நிற்பவனை போல சட்டென நிமிர்ந்து நின்றான் கிஷோர். அதை பார்த்ததும் ராஜாராம் சிரித்து விட்டு தன் மகளை பார்த்து புன்னகை பூத்தார்.. முகத்தில் சந்தோசம் தவழ அப்பாவின் வாயில் இருந்து சம்மத வார்த்தைகளை கலை எதிர்பார்த்துக் கொண்டிருக்க..

ராஜாராம் “சரிம்மா!!!” என்றார்.. சட்டென பாய்ந்து அவள் அப்பாவை கட்டிப்பிடித்து அவர் நெஞ்சில் புதைத்து கொண்டாள்.. அவளையும் மீறி கண்களில் இருந்து சில ஆனந்த துளிகள் எட்டி பார்த்தது.. கலையின் தலையை ஆதரவாக பிடித்து தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்ட ராஜாராம், கிஷோரை பார்த்து “ஏன் அங்கேயே நிக்குறீங்க!! வாங்க இப்படி” என்றார் அந்த கம்பீரம் மங்காத குரலோடு..