இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 35

சூழ்நிலை ஒருமாதிரி இறுக்கமாக செல்ல, பேச்சை மாற்ற நினைத்த கிஷோர், “மச்சி இது என்னோட தம்பி ராம்”

ராகுல்: (சின்ன சிரிப்புடன்) ஹாய்

“ராம் இது என்னோட Colleague..” என்று சொல்லிவிட்டு “பேரு..” என்று சொல்கையில் “டேய் ராம்..” குயில் போன்ற குரலில் கோவமான சத்தம் கேட்டது. அனைவரும் திரும்பி பார்க்க அங்கே ராமின் காதலி வனிதா நின்றிருந்தாள்..

ராம்: வனிதா இங்க எப்படி வந்த, நான் இங்க இருக்குறது உனக்கு எப்படி தெரியும்..

வனிதா: இங்க மட்டும் இல்ல, நீ எங்க இருந்தாலும் எனக்கு தெரியும்.. (முதல்ல ராம் மொபைல்ல இருந்து Find My Device ல இருந்து வனிதா மெயில் ஐடி யை ரிமூவ் பண்ணனும் என்று கிஷோர் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்) முந்தாநேத்து நைட்டு நீ எங்க இருந்த ன்னு என்கிட்டே ஒரு கதை சொன்னில்ல.. மரகதம் மார்க்கெட், ராகுல் ன்னு திமிரு பிடிச்ச பையன், நீ பாத்த CID வேலை ன்னு பெரிய கதை சொன்னியே.. அதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல,. அதான் அத்தான் கிட்ட கேட்டு போக வந்தேன்.. உங்க வீட்டுக்கு வந்து அத்தை முன்னாடி கேக்குறது எனக்கு பிடிக்கல.. அதான் இங்கயே வந்துட்டேன்..

கிஷோருக்கு பக்கென்று ஆனது.. “அடப்பாவி இவன் என்ன சொல்லி வச்சிருக்கான் ன்னு தெரியலையே.. வனிதா என்னடா ன்னா இங்கயே வந்து ராகுல் இருக்கும் போதே அவனை பத்தி பேசுறா” என்று அவன் பீதி அடைய “வனிதா இங்க வேண்டாம், வெளிய போயி பேசிக்கலாம் ம்மா” என்றான்..

வனிதா வாயிலிருந்து வந்த “மரகதம் மார்க்கெட், ராகுல் ன்னு திமிரு பிடிச்ச பையன்” வார்த்தைகள் ராகுலின் காதுகளில் துல்லியமாக விழுந்து அவனுக்குள் ஒரு கொதிப்பை ஏற்படுத்த கிஷோரின் மேல் அனல் கக்கும் பார்வையை வீசினான். மற்றொரு பக்கம் கலையும், சுபர்ணாவும் இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் “கிஷோர், ராம், வனிதா” மூவரையும் மாறி மாறி பார்த்தனர்..

அதே அனல் கக்கும் பார்வையுடன் கிஷோரை பார்த்த ராகுல் அவனிடம் “டியூட் சிஸ்டர் ஏதோ சொல்ல வர்றாங்க.. ஏன் தடுக்குற” என்று சொல்லிவிட்டு வனிதா விடம் திரும்பி “சிஸ்டர் நீங்க கேளுங்க” என்றான்..

“இல்ல ப்ரோ, எங்க அண்ணனுக்கு ராகுல் ன்னு ஒரு பிரண்ட் இருக்கான்.. அவன்…” என்று ராம் இடைபுகுந்து ராகுலிடம் சொல்ல, அதற்க்கு மேல் பேசாமல் ராமை தடுத்து நிறுத்திய கிஷோர் “தம்பி சும்மா இரு, நாம வீட்டுக்கு போயி பேசிப்போம்” என்றான்..