இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 60

கிஷோர் அருகில் வந்ததும் “என் மக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டா.. நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டார்.. ராஜாராமின் நெஞ்சில் தன் தலையை சாய்த்தவாறே சற்று திருப்பி ஓரக்கண்ணால் கிஷோரை பார்த்து “சொதப்பாம தைரியமா பேசுடா” என்று வேண்டிக் கொண்டாள்..

“எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ரொம்ப” என்று முதல்முறை கலையிடம் சட்டென உடைத்ததை போல காரசாரம் குறையாமல் அதே பாணியில் “எனக்கு உங்க பொண்ணை பிடிச்சுருக்கு ரொம்ப” என்று சட்டென உடைத்தான்..

கலை பெருமிதத்தோடு சிரிக்க,, ராஜாராம் “அப்புறம் என்ன மாப்ள.. நீங்க சொல்லிட்டீங்க, இதே மாதிரி உங்கப்பா அம்மாவையும் சொல்ல வைங்க.. மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்” என்றார்..

இருகை கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டும், மற்ற எட்டு விரல்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணிக்கொண்டும், உள்ளங்கைகள் இரண்டும் ஒன்றையொன்று அரக்கி கொண்டும் இருக்க,. கால் விரல்கள் பத்தும் தரையில் தட்டச்சு அடித்துக் கொண்டிருந்தது..

தலைக்கு மேலே இடைவிடாத கீச் கீச் சத்தம், கருவிழிகள் இரண்டும் விட்டத்தை நோக்கி உருண்டு, எப்பொழுது வேணாலும் மரணிக்கும் தருவாயில் சுற்றிக் கொண்டு கீச் கீச் சத்தத்தை கொடுத்துக்கொண்டிருந்த பழைய மின் விசிறியை நோக்கியது.. அந்த கருவிழிகளுக்கு கீழேயிருந்த நாசியானது, எதிரியை முட்டித்தூக்க காத்திருக்கும் காளை மாட்டை போல புஸ் புஸ் என மூச்சை வாரி இறைத்துக் கொண்டிருந்தது.. அந்த கருவிழிகளுக்கு மேலே அடர்த்தியான இரு புருவங்களும் சுருங்கி குத்தூட்டி போல கூர்மையாக இருக்க, அதற்க்கு மேலே இருந்த படர்ந்த பெரிய நெற்றியில் வியர்வை துளிகள் ஆங்காங்கே துளிர்த்து இருந்தது..

அந்த கருவிழிகளை உற்று நோக்கினால், அதில் வன்மமாய் ஏதோ திட்டம் தீட்டப்படுகிறது போன்ற தோற்றம் புலப்பட்டது.. அந்த வன்ம விழிகள் இடப்பக்கமாய் உருண்டு அந்த வீட்டின் அடுப்பறையை நோக்க, அங்கே மஞ்சு நின்று பாத்திரங்களை விளக்கி கோபமாக “தட் தொட்” என்ற சத்தத்துடன் வைத்துக் கொண்டிருந்தாள்.. அவள் பின்னே அவள் தோளை மென்மையாய் தடவி சமாதானம் செய்து கொண்டிருந்தார் ராஜாராம்..

“அந்த பையன் யாருன்னே தெரியாது!! என்ன ஆளுங்க ன்னும் தெரியாது!! என்ன அர்த்தத்துல வீட்டுல இருந்து ஆள் கூட்டி வர சொல்லிருக்கீங்க!! அதுவும் அவளோட அம்மா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்திருக்கீங்க” என்ற மஞ்சுவின் அனல் பறந்த வார்த்தைகள் அந்த வன்ம விழிகளுக்கு சொந்தக்காரனின் செவியை வந்தடைய அவனுடைய முகத்தில் இறுக்கம் மறைந்து உதட்டில் புன்னகை பூத்தது..