மதன மோக ரூப சுந்தரி – 2 23

“அகழிக்கு போனாமட்டும் உனக்கு அதுலாம் ஞாபகம் வந்துடும்னு எந்த உத்திரவாதமும் இல்லடா..!!”

“தெரியும்.. பரவால.. போய்த்தான் பாக்கலாமே..??”

“மாமாக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாரு..!! அகழிக்கு உன்னை கூட்டிப் போனது தெரிஞ்சா.. அவ்வளவுதான்..!!”

“அப்பாவுக்கு தெரிய வேணாம்-த்தான்.. நாமளா போயிட்டு வரலாம்.. அங்க இருந்து ஃபோன் பண்றப்போ ஊட்டில இருக்குறதாவே சொல்லிடலாம்..!! அதையும் மீறி அப்பாக்கு தெரிஞ்சிடுச்சுனா.. அவரை நான் சமாளிச்சுக்குறேன்..!! ப்ளீஸ்த்தான்..!!”

“எனக்கு பயமா இருக்கு ஆதிரா..!!”

“என்ன பயம்..?? அந்த குறிஞ்சி என்னையும் தூக்கிட்டு போயிடுவான்னா..?? அப்படிலாம் எதுவும் நடக்காதுத்தான்..!! அஞ்சு நாள்ல என்ன ஆகிடப் போகுது..?? அதுவும்.. நீங்க என் கூடவே இருக்குறப்போ..?? ம்ம்..??”

“வே..வேணாம் ஆதிரா..!!” பலவீனமாக ஒலித்தது சிபியின் குரல்.

“ப்ளீஸ்த்தான்.. ப்ளீஸ்..!! அஞ்சே அஞ்சு நாள்.. எனக்காக..!! அன்னைக்கு என்ன சொன்னிங்க.. எனக்கு புடிச்சதை சொன்னா.. எதுவா இருந்தாலும் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ல..?? எனக்கு இதுதான் வேணும்.. ப்ளீஸ்த்தான்.. எனக்கு அகழிக்கு போகணும்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

ஆதிரா குழந்தை மாதிரி கெஞ்சிக்கொண்டே இருக்கவும்.. சிபியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்ந்து கொண்டே சென்றது..!! என்ன சொல்வதென்று புரியாமல் மனைவியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்.. ஒருவித அவஸ்தைக்குள் அவன் ஆட்பட்டுக் கொண்டது அப்பட்டமாக அவனுடைய முகத்தில் தெரிந்தது..!!

ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. சலிப்பாக தலையை அசைத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டான்.. சாவியை திருகி வண்டியை கிளப்பிக்கொண்டே ஆதிராவிடம் சொன்னான்..!!

“அஞ்சு நாள்தான் ஆதிரா.. அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க நீ இருக்க, உன்னை நான் அலோ பண்ண மாட்டேன்..!!”

“தேங்க்ஸ்-த்தான்..!!”

ஆதிரா மகிழ்ந்து கொண்டிருக்கையிலேயே வண்டி சீற்றமாய் கிளம்பியது..!! அகலமாய் மேலேறிய ஊட்டிக்கு செல்லும் சாலையை விடுத்து.. அதிலிருந்து பிரிந்து சற்றே தாழ்வாக கீழிறங்குகிற அந்த குறுகலான பாதையில்.. குலுங்கி குலுங்கி பயணிக்க ஆரம்பித்தது அந்த ஸ்கார்ப்பியோ..!! அத்தனை நேரம் ஆதிரா வெறித்துக் கொண்டிருந்த அந்த மரபோர்டில்.. எழுத்துக்கள் சற்றே சிதிலமடைந்து போய் காட்சியளித்தன..!!

அகழி –> 13 கி.மீ

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!! பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!!

OLYMPUS DIGITAL CAMERA

பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!! கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!! குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி..

“ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!” என்றான் கனிவாக.

“இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??” அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா.

பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!!

ஆதிரா ஜன்னலுக்காக சற்றே தலைசாய்த்து தூரமாக பார்வையை வீசினாள்.. மலையுச்சியை செதுக்கி வடிக்கப்பட்ட சிங்கமுக சிலையொன்று.. இங்கிருந்தே தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சியளித்தது..!! குபுகுபுவென மேனியெங்கும் பற்றிக்கொண்ட நெருப்புடன்.. குறிஞ்சி குதித்து கீழுருண்ட அதே மலையுச்சி..!!

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக.. குறிஞ்சியின் அட்டகாசத்தை தாங்கமாட்டாத அகழி மக்கள்.. மலையுச்சியில் நரசிம்மருக்கு சிலைவடித்து வணங்க ஆரம்பித்தனர்..!! அப்போது உச்சிமலை என்று அழைக்கப்பட்ட அந்த இடம்.. அதன் பிறகிலிருந்து சிங்கமலை என்று வழங்கப்படுகிறது..!! அந்த சிங்கமலையின் அடிவாரத்தில் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்தது.. குறிஞ்சியை உள்வாங்கிக்கொண்ட குழலாறு..!!

“ஆத்துல தண்ணி ரொம்ப அதிகமா போற மாதிரி இருக்கு.. இல்லத்தான்..??” கேட்ட மனைவிக்கு,

“ம்ம்.. ஆமாம் ஆதிரா.. அப்படித்தான் தெரியுது..!!”

பாதையில் இருந்து பார்வையை எடுக்காமலே பதில் சொன்னான் சிபி..!! சற்று தூரம் சென்றதும்.. குழலாறை கடக்கும் குறுகலான ஆற்றுப்பாலம் வலதுபுறமாக வந்தது..!! சிபி காரின் வேகத்தை வெகுவாகவே குறைத்து.. அந்தப்பாலத்தை நிதானமாக கடந்தான்..!! அதன்மேலும் இரண்டு மைல் தூரம்.. மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேற.. அழகும் அமானுஷ்யமும் கொஞ்சும் அகழி வந்து சேர்ந்தது..!!

நூறு வருடங்களில் அகழி மிகவும் மாறியிருந்தது.. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் அகழியை மட்டும் விட்டுவைக்குமா என்ன..?? மலைமரங்களுக்கு நடுவே கால் அகற்றி கம்பீரமாக நிற்கும் மூன்று செல்ஃபோன் டவர்கள்.. வீடுகளின் மேற்கூரைகளில் சேட்டிலைட்டுக்கு சமிக்ஞை அனுப்புகிற டிஷ் ஆன்டனாக்கள்.. காய்கறி மார்க்கெட்டுக்கு பக்கத்து சந்தில் ஒரு கணினி மையம் கூட உண்டு..!!

அகழியின் மக்கள்தொகை இப்போது ஆயிரத்தை நெருங்கியிருந்தது..!! புதிய தலைமுறையினர் புகலிடம் தேடி வேலைக்காக வெளியூர் சென்றிருக்க.. அதற்கு முந்தைய தலைமுறையினரே அந்த ஆயிரத்தில் பெரும்பங்கினர்..!! குடிசைகள் வெகுவாக குறைந்து போயிருந்தன.. ஓட்டு வீடுகள் அதிகமாக முளைத்திருந்தன..!! ஊரைச் சுற்றி ஆங்காங்கே தேயிலை தோட்டங்கள்.. ஊருக்கு வெளியே ஒரு தேயிலை தொழிற்சாலையும், ஒரு தடுப்பூசி மருந்து தொழிற்சாலையும்..!! அதுமட்டுமில்லாமல் காளான் வளர்த்தல், கம்பளி நெய்தல் என்று சுயதொழில் செய்வோரும் இருக்க.. அகழி மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் வந்ததில்லை..!!