என்ன வேடசந்தா ,இன்னிக்கு பார்த்து இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.?பூசாரி அவன் கையில் இருந்த பூக்களை வாங்கி கொண்டே கேட்டார்.
“ஏன் பூசாரி சற்று தானே தாமதம் ஆகியிருக்கு.இன்னிக்கு என்ன இவ்வளவு பரபரப்பாக இருக்கீங்க?”
இளவரசி இன்று இறைவனை தரிசிக்க நம் கோவிலுக்கு வருகிறார்கள் வேடசந்தா,எந்நேரமும் அவர்கள் இங்கே பிரவேசிக்க கூடும் என்று சொல்லி கொண்டே அலங்காரம் செய்ய அவசரமாக கருவறைக்குள் நுழைந்தார்.
அதை கேட்டு காத்தவராயன் மிகவும் குதூகலம் அடைந்தான்.ஆகா அவளை மீண்டும் எப்படி நேரில் தேடி செல்வது என்று நினைத்தோம்.?ஆனால் அவளே நேரில் இங்கு வருகிறாள் என நினைத்தான்.
கொஞ்ச நேரத்தில் ரதத்தில் படை வீரர்கள் புடைசூழ மதிவதனி வந்து சேர,அவள் அழகில் மெய்மறந்து காத்தவராயன் எச்சில் வடிய பார்த்து கொண்டு நின்று இருந்தான்.
காவலாளிகள் வழியில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தி கொண்டே வந்தனர்.நின்று கொண்டு இருந்த காத்தவராயனையும் பிடித்து தள்ளினர்.
இதில் காத்தவராயனும் கோபம் அடைந்து பிடித்து தள்ளிய வீரன் மேல் பாய்ந்தான்.இருவரும் வாளை உருவி கொண்டு சண்டை போட்டனர்.உடனே காத்தவராயனை பத்து,பதினைந்து வீரர்கள் சூழ்ந்து கொண்டே தாக்க தொடங்கினர்.
அனைவரிடமும் வீராவேசமாக சண்டை போட்டாலும் காவலாளிகள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக காத்தவராயன் மடக்கி பிடிக்க பட்டான்.
சென்று கொண்டு இருந்த இளவரசியை பார்த்து “அபயம் இளவரசி அபயம்”என்று காத்தவராயன் கூக்குரலிட மதிவதனி திரும்பி பார்த்தாள்.
அங்கே வந்த மதிவதனி,”என்ன இங்கே கலாட்டா”என்று கேட்க
நம் வீரனை இவன் தாக்கினான் என்று அங்கு இருந்த காவலாளிகள் சொல்ல,
ஒரு கிழவனிடம் சண்டை செய்ய இத்தனை பேரா? நல்ல வீரர்கள் தான் என்று கிண்டல் செய்தாள்.
வந்து இருந்த புதியவனை பார்த்து,”யார் நீ?உன்னை பார்த்தால் இந்த நாட்டில் உள்ளவனை போல் தெரியவில்லையே?உன்னிடம் எப்படி வாள் வந்தது?”என அதிகாரத்துடன் மதிவதனி கேட்க,
தேவி,நான் நாடு நாடாக வியாபாரம் செய்யும் யாத்ரீகன்.என்னுடைய பொருட்களின் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் வாள் வைத்து இருப்பது வழக்கம்.உங்களிடம் நான் கொண்டு வந்த விலை உயர்ந்த நவரத்தினங்களை விற்பதற்காக நின்று கொண்டு இருந்தேன்.ஆனால் உங்கள் வீரர்கள் அமைதியாக நின்று கொண்டு இருந்த என்னை பிடித்து தள்ளி சண்டை செய்தார்கள்.அதனால் என் பாதுகாப்பிற்காக நானும் சண்டை செய்ய வேண்டியதாகி விட்டது.
“அவரை விடுவியுங்கள்”என்று மதிவதனி கூறியவுடன் காவலாளிகள் அவனிடம் இருந்து அகன்றனர்.
“எங்கே நீ கொண்டு ரத்தினங்களை காண்பி”என்று மதிவதனி கேட்க,
காத்தவராயன் தான் கொண்டு வந்த நவரத்தினங்களை சுருக்கு பையில் இருந்து எடுத்தான்.
அதை பார்த்து மதிவதனி கண்கள் ஆசையில் அகல விரிந்தது.
“அருமை, உன்னோட ரத்தினங்கள் எல்லாம் அற்புதமாக ஜொலிக்கின்றன. எங்கு இருந்து இதை கொண்டு வந்தாய்” என்று கேட்க,
தேவி,இதில் சில ரத்தினங்கள் கடல் கடந்து அந்நிய தேசத்தில் இருந்து தருவிக்கபட்டவை.இதில் நீல நிற வைரம் மட்டும் மாயமலையில் இருந்து வாங்கி வந்தேன்.
என்னது மாயமலையா?அங்கு தான் யாரும் உள்ளே செல்ல முடியாதே”என்று அவள் வியப்பாக கேட்டாள்.
