எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 16

முதலில் அவளை சூழ்ந்து கொண்டு மொத்தமாக அன்பை பொழிந்தவர்கள்.. அப்புறம் அவளை கைப்பிடித்து அவரவர் அறைக்கு அழைத்துச் சென்று.. தனித்தனியாக அவளிடம் மனம் விட்டு பேசி.. தங்கள் ப்ரியத்தை காட்டினர்..!!

மணிபாரதியின் அறை..

“அப்பா எப்படிமா இருக்காரு..??” சம்பிரதாயமாகவே ஆரம்பித்தார் மணிபாரதி.

“ம்ம்.. ந..நல்லா இருக்காரு அங்கிள்..!!” மீராவின் குரலில் இன்னுமே தயக்கம்.

“அப்பா பேரு சந்தானம்தான.??”

“ஆ..ஆமாம்..!!”

“அசோக் ஒருதடவைதான் சொன்னான்.. எப்டி ஞாபகம் வச்சிருக்கேன் பாத்தியா..?? அங்கிள்க்கு ஞாபக சக்தி கொஞ்சம் ஜாஸ்தி..!!”

“ஓ..!!”

“ஹ்ஹ்ம்ம்ம்.. அப்பா பத்தி அசோக் எல்லாம் சொல்லிருக்கான்மா.. இந்தக்காலத்துலயும் இப்படிலாம் இருக்காங்களான்னு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..!! ஆனா.. நீ அதெல்லாம் எதுவும் நெனைச்சு கவலைப்பட்டுக்க வேணாம்மா மீரா.. ‘அப்பா சம்மதிப்பாரா.. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்குமா..’ அப்டின்லாம் எந்த கவலையும் உனக்கு வேணாம்.. தெரிஞ்சதா..?? நீ எங்க வீட்டு பொண்ணும்மா.. நாங்கல்லாம் இருக்கோம் உனக்கு..!! உன் அப்பா கைல கால்ல விழுந்தாவது.. இந்த கல்யாணத்துக்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு.. ஹாஹா.. சரியா..??” மணிபாரதி சிரிப்புடன் சொன்னாலும், அவருடைய பேச்சில் ஒரு அழுத்தமான நம்பிக்கை தெரிந்தது.

“ச..சரி அங்கிள்..!!” மீராவின் குரல்தான் ஏனோ பிசிறடித்தது.

“ம்ம்.. என்னோட நாவல்லாம் படிச்சிருக்கியாமா..??” மணிபாரதி திடீரென அப்படி கேட்டார்.

“இ..இல்ல அங்கிள்.. ஆனா உங்க பேரை கேள்விப் பட்ருக்கேன்..!!”

“ஹஹா.. பரவால பரவால..!! எதுக்கு கேட்டேன்னா.. பதினஞ்சு வருஷம் முன்னாடி.. ‘காதலை வாழ விடுங்கள்’ அப்டின்னு நான் ஒரு நாவல் எழுதினேன்.. எனக்கு ரொம்ப பேர் வாங்கி தந்த நாவல்..!! அதுலயும் இப்படித்தான்.. உன் அப்பா மாதிரியே ஒரு அப்பா கேரக்டர்.. அவருக்கும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு..!! அந்தப் பொண்ணு என்ன ஒரு கேரக்டர் தெரியுமா.. நான் இதுவரை உருவாக்குனதுலயே அந்த பொண்ணு கேரக்டர்தான்..” மணிபாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை செல்லமாக கடிந்து கொண்டே பாரதி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“ஐயயயே.. என்னங்க இது.. புள்ளையை சாப்பிடவிடாம.. நாவலு.. கேரக்டருனுட்டு..” என்றவாறே உள்ளே வந்தவள், மீராவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டு,

“இவர் எப்போவும் இப்படித்தான்மா.. எந்த நேரமும் எழுத்து நெனைப்பாவே இருப்பாரு.. இப்போ உன்கிட்ட அஞ்சு நிமிஷம் பேசுனார்ல.. இதை வச்சு கூட ஏதாவது கதை எழுதலாமான்னு யோசிப்பாரு..!!” என்று கணவனை கிண்டல் செய்தாள்.

“ஹாஹா.. அப்படிலாம் எதுவும் இல்லம்மா மீரா.. வெளையாட்டுக்கு சொல்றா.. அவளை நம்பாத..!!” மணிபாரதி மீராவிடம் சமாளிப்பாக சொன்னார்.

“ம்க்கும்.. உங்க கூட இருபத்தஞ்சு வருஷமா வாழ்ந்திருக்கேன்.. எனக்கு தெரியாதா நீங்க என்ன நெனைப்பீங்கன்னு..??” சொன்ன பாரதி, பிறகு மீராவிடம் திரும்பி,

“அவர் கெடக்குறாரு விடும்மா.. நீ நல்லா சாப்பிடு.. இந்தா..” என்றவாறு தட்டில் இருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்து மீராவின் வாய்க்கருகே கொண்டு சென்றாள்.

“இ..இருக்கட்டும் ஆன்ட்டி.. நான் சாப்பிட்டுக்..”

“பரவாலமா.. இப்போ என்ன.. என் மருமகளுக்கு நான் ஊட்டி விடக் கூடாதா..?? ம்ம்..?? இந்தா.. சாப்பிடு..!!” பாரதி ஊட்டிவிட, மீரா பிஸ்கட்டை ஒரு கடி கடித்தாள்.

“உனக்கு காரந்தான் புடிக்கும்னு.. ஆண்ட்டி உனக்காகவே ஸ்பெஷலா இந்த சில்லி பிஸ்கட் செஞ்சேன்.. எப்டி இருக்கு..??”

“ம்ம்.. நல்லா இருக்கு ஆன்ட்டி..!!”

“மதியத்துக்கு.. ஹைதராபாத்தி ஸ்டைல்ல சிக்கன் செஞ்சுட்டு இருக்கேன்..!! இவங்க யாருக்கும் காரமே பிடிக்காது.. ஆண்ட்டி உனக்கு மட்டும் கொஞ்சம் தனியா.. காரசாரமா பண்ணிடுறேன்.. என்ன..??”

1 Comment

Add a Comment
  1. 👌❤️❤️❤️❤️❤️❤️👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *