எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“ஐயோ.. எதுக்கு ஆண்ட்டி அதெல்லாம்.. தேவை இல்லாம உங்களுக்கு கஷ்டம்..??”

“அட.. இதுல என்னம்மா கஷ்டம் இருக்கு..?? ஆண்ட்டிக்கு பிடிச்ச வேலையே சமைக்கிறதுதான் தெரியுமா..?? உனக்கு சமையல் தெரியாதுன்னு அசோக் சொல்லிருக்குறான்.. ஒன்னும் கவலைப்படாத.. ஆண்ட்டி இருக்கேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் நானே பாத்துக்குறேன்..!!”

“ம்ம்..”

“மதியம் சாப்பிட்டுட்டு.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. அப்புறம் சாயந்திரம் எல்லாரும் கபாலீஸ்வரர் கோயில் போயிட்டு.. அப்படியே பீச்சுக்கும் போயிட்டு வரலாம்..!! சரியா..??”

“ம்ம்..”

“இந்தா.. சாப்பிடு.. எல்லாம் உனக்காக செஞ்சதுதான்..!!” பாரதி மீண்டும் ஒரு பிஸ்கட் எடுத்து, மீராவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.

பாரதியின் அறையில் இருந்த மீராவை, பிறகு கோமளவல்லி வந்து தங்கள் அறைக்கு அழைத்து சென்றாள். மீராவும் கோமளவல்லியும் மெத்தையில் அமர்ந்திருக்க, நாராயணசாமி அந்தக்கால தனது மேடை நடிப்பின் சாம்பிள் ஒன்றை, மீராவுக்கு நடித்து காட்டினர். அவளும் ‘வாவ்..’ என்று கைதட்டி ரசித்தாள்.

“அந்தக் காலத்துல நான் மேடையேறினதும்.. ‘தேசமெல்லாம் வென்று முடிக்க.. தேசிங்கு ராசா வந்தேனே..’ன்னு கணீர் குரல்ல பாடிக்கிட்டு.. நெஞ்சை நிமித்தி கம்பீரமா ஆடிக்கிட்டே.. வாளை இப்படி எடுத்து.. அப்படி ஒரு சொழட்டு சொழட்டி இழுத்தேன்னு வச்சுக்கோ.. முன்னாடி உக்காந்திருக்குற அத்தனை பொட்டைப் புள்ளைக மனசும்.. அந்த வாளோட சேர்ந்து வந்துரும்.. அதை அப்படியே மொத்தமா என் இடுப்புல சொருகிப்பேன்..!!”

“ஹாஹாஹாஹா..!!” தாத்தாவின் பேச்சு ஸ்லாங்கும், பாடி லாங்குவேஜும் மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள்.

“எத்தனை புள்ளைக.. எவ்வளவு ஸ்னேஹிதம்.. அது ஒரு காலம்..!! ஊருக்கு ஒரு பத்து சிட்டுகளாவது.. என்னோட சோடி சேர்ந்து பறக்க ரெடியா இருந்தாளுக.. தெரியுமா..??”

“க்ரேட்..!!” மீரா தாத்தாவை பாராட்ட, கோமளவல்லிக்கு ஏனோ இப்போது மனதுக்குள் ஒரு புகைச்சல்.

“ம்க்கும்.. உங்க பழைய பெருமையை பேசலைன்னா.. தூக்கம் வராதே உங்களுக்கு ..??” என்று முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்துக் கொண்டாள்.

“ஹாஹா.. பாத்தியா.. உன் பாட்டிக்கு கோவத்த..?? இது தாத்தாவை புரிஞ்சுக்காம வர்ற கோவம் இல்லம்மா மீராக்கண்ணு.. தாத்தா மேல இருக்குற பிரியத்தால வர்ற கோவம்..!! இந்த பிரியந்தான்.. கள்ளம் கபடம் இல்லாத இந்த பாசந்தான்.. ஏதோ பொறக்குறப்போவே ‘இவன்தான் என் புருஷன்’னு சாமிகிட்ட வரம் வாங்கிட்டு வந்தவ மாதிரி.. இவ எங்கிட்ட பழகுன விதந்தான்.. அத்தனை பொட்டைப் புள்ளைகளையும் விட்டுப்புட்டு.. இந்த மகராணி காலடில விழுந்துபுட்டேன்..!! ஹாஹா..!!”

நாராயணசாமி சிரிப்புடன் சொல்ல, இப்போது கோமளவல்லி வெட்கத்தில் முகம் சிவந்துபோய் தலையை குனிந்து கொண்டாள். அவர்கள் இருவரையுமே மீரா ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடன் பார்த்தாள். நாராயணசாமி இப்போது மெல்ல நடந்து வந்து மீராவுக்கு அருகே அமர்ந்து கொண்டார். அவளுடைய கையை எடுத்து வாஞ்சையாக தடவிக் கொடுத்தவர், பிறகு மெல்லிய குரலில் கேட்டார்.

“நான் எதுக்கு இவ்வளவு நேரம் என்னைப் பத்தி சொன்னேன் தெரியுமா மீராக்கண்ணு..??”

“இ..இல்ல.. தெரியல.. எ..எதுக்கு..??”

“நான்தான் இந்த மாதிரிலாம்.. நெறைய பொட்டைப் புள்ளைக ஸ்னேஹிதம்..!! என் பேரன் அப்படி இல்லைம்மா.. அதை சொல்றதுக்குத்தான்..!!” நாராயணசாமி சொல்ல, மீரா அவரை சற்றே திகைப்பாக பார்த்தாள்.

“ஓ..!!”

“இதுவரை எந்த பொண்ணு கூடவும் அவன் பழகினது கெடையாது.. இத்தனை வருஷத்துல ‘என் பிரண்டு’ன்னு சொல்லிட்டு, எந்தப் பொண்ணையும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது கெடையாது..!! ஆனா.. அவன் அப்படி யாரையாவது கூட்டிட்டு வர மாட்டானான்னு இந்த குடும்பம் ரொம்ப ஏங்கி கெடந்தது..!! இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும்.. அல்லி ராணியும், அர்ஜுனனும் மாதிரி நடை நடந்து இந்த வீட்டுக்கு வந்தப்போ.. எங்க மனசே அப்படியே நெறைஞ்சு போச்சம்மா..!!”

“ம்ம்..”

“என் அளவுக்குலாம் என் பேரனுக்கு வெவரம் பத்தாது.. சூதுவாது தெரியாத பய..!! கொஞ்சம் வெளையாட்டு புத்தி.. ஆனா ரொம்ப ரொம்ப நல்லவன்மா.. அவனை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்மா..!!” பெருமிதமாக சொன்ன நாராயணாசாமி, பிறகு மனைவியிடம் திரும்பி,

“என்ன கோமளா.. நான் சொல்றது சரிதான..??” என்று அபிப்ராயம் கேட்டார்.

“ரொம்ப சரியா சொன்னீங்க..!!” கோமளவல்லி மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தாள்.

மீராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவித திகைப்புடன், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். இப்போது கோமளவல்லி மீராவை நெருங்கி அமர்ந்தாள்.

“பெரிய ஜமீன் குடும்பம்மா என்னோடது.. கட்டுன பொடவையோடதான் இவர் என்னை வர சொன்னாரு.. ஆனா இது கூடவே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சு..”

சொல்லிக்கொண்டே தன் கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தை கோமளவல்லி கழட்டினாள். எதுவும் புரியாமல் மீரா பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,

“பரம்பரை மோதிரம்.. வெலை மதிப்பில்லாதது.. இத்தனை நாளா நான் போட்டுக்கிட்டேன்.. இனிமே நீ போட்டுக்கோ கண்ணு..!!” என்றவாறு மீராவின் விரலில் அணிவிக்க முயன்றாள் கோமளவல்லி. மீரா பதறிப் போனாள்.

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.