யாரு நேற்று கனவில் வந்தானே அவன் மாதிரியா?
ஸ்ருதி ஆச்சரியத்துடன் அவளை நோக்கி ,என் கனவில் ஒரு ஆம்பளை வந்தான் என்று உன்கிட்ட சொல்லவே இல்லையே. ஏய் உனக்கு எப்படி தெரியும்?
அதான் நல்லா முனகி கொண்டு இருந்தாயே ,டேய் போதும் விடுடா அப்படி இப்படி என்று ,இன்னும் சில வார்த்தை எல்லாம் சொன்னாய் அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது. யாருக்கா அவன்?
அய்யயோ சின்ன பொண்ணு என்றால் பார்த்தால் இவ வயசுக்கு மீறி யோசிக்கிறா இவ கிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் என்று ஸ்ருதி மனதில் நினைக்க
சொல்லுக்கா யார் அவன் ?..
யாரென்றே எனக்கு தெரியவில்லை சாரு,ஆனா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு .ஆனா ஞாபகம் வர மாட்டேங்குது.
நல்லா யோசித்து பாருக்கா ,காலேஜ் , பீச்,இல்ல பஸ்ல போகிற வழியில் அப்படி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?
இல்ல சாரு ,ஆனா எனக்கு என்னவோ நான் கூடிய சீக்கிரம் நேரில் சந்திப்பேன் என்று தோன்றுகிறது. சரி தூங்கலாம் சாரு good night
“நான் காரில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது ஒரு பெண்மணி தலையில் அடிபட்டு என் காரை நிறுத்தினாள்.
சார் சார் …என் குழந்தைக்கு அடிபட்டு இருக்கு ,பிளீஸ் என் குழந்தையை காப்பாற்றுங்கள்.
சரிஎன்று நான் சென்று பார்க்கும் பொழுது ஒரு கார் இன்னோரு வாகனத்துடன் மோதி அப்பளம் போல் நொறுங்கி இருக்க, உள்ளே ஒரு 7 வயது சிறுமி அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தது.
பக்கத்தில் இருக்கும் கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்த நான் குழந்தையை வெளியே எடுத்து ,
“வாம்மா உனக்கும் அடிபட்டு இருக்கு ,பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்” என்று திரும்பி பார்க்க அங்கு அந்த பெண் இல்லை.காரின் உள்ளே பார்த்த எனக்கு தூக்கி வாரி போட்டது .
ஆம் என் காரை நிறுத்தி உதவி கேட்ட பெண் காரின் உள்ளே அடிபட்டு மரணித்து இருந்தாள். ஒரு தாயிற்கு தான் தன் குழந்தை மேல் எவ்வளவு பாசம் , மரணித்த பிறகும் ஆவியாய் வந்து தன் குழந்தையை காப்பாற்றுகிறாரே என்று மனதில் எண்ணி கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தேன்.
டாக்டர்கள் அவசரமாக AB+ve BLOOD வேண்டும் என்றார்கள்.நல்ல வேளை என்னோட BLOOD AB+ve என்பதால் குடுத்து காப்பாற்றி அவர்கள் உறவினரிடம் ஒப்படைத்து விட்டு ,ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியோடு என் ஊருக்கு கிளம்பினேன் .”
நான் யார் ? காப்பாற்றப்பட்ட குழந்தை யார் ?
காலை நேர பரபரப்பு சென்னை
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர் ஒருபுறம் ,ஆபீஸ் செல்லும் இயந்திர மனிதர்கள் மறுபுறம் ,பேருந்துகளும் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் அலை மோதி கொண்டு இருக்க ,இரு சக்கர ஓட்டுனர்கள் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் கிடைக்கும் இடைவெளிகளில் தங்கள் வாகனத்தை சொருகி கொண்டு இருந்தார்கள்.
ஸ்ருதி எப்பொழுதுமே முன்கூட்டியே கிளம்பி சற்று நெரிசல் குறைவான பேருந்தில் சென்று விடுவாள்.ஆனால் இன்று அவள் என்ன கெட்ட நேரமோ வழக்கமாக வரும் பேருந்து வராமல் போக அடுத்த பேருந்து முழுக்க கூட்ட நெரிசலாக வந்தது.
எப்படியோ ஒரு வழியாக அதில் ஏறி சிக்கி சின்னாபின்னமாகி ,இறங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.கடைக்கு வந்து சேர மேலும் கால தாமதமாகி விட , சம்பத் கடை திறந்து உட்கார்ந்து கொண்டு இருந்தான்.
ஏன் லேட்?
சாரி சார், இன்று வழக்கமாக வரும் பேருந்து வரவில்லை.அதனால் தான் சார்
பஸ் வரவில்லை என்றால் ஆட்டோ பிடித்து வர வேண்டியது தானே?
அடுத்த தடவை இந்த மாதிரி நடக்காது சார்,
எனக்கு இப்போ உன்னை திட்டறதுக்கு கூட நேரம் கிடையாது.நான் அவசரமாக பேங்க் போகனும்.நான் அப்புறமாக வந்து பேசறேன்.அப்புறம் இன்னிக்கி கீதா வரமாட்டா.இன்னிக்கு எல்லா report நீ தான் இருந்து குடுத்து விட்டு போகனும் ,வீட்ல சொல்லிடு வருவதற்கு லேட் ஆகும் என்று சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளியேறினான்.
நேரம் விரைவாக கரைய ,அன்று கடையை பூட்டி விட்டு சுமார் 9 மணி அளவில் எல்லா ரிபோர்ட் எடுத்து கொண்டு மேலே அவன் வீட்டுக்கு சென்றாள்.சம்பத் வெற்று மார்புடன் கைலி கட்டி கொண்டு உட்கார்ந்து இருந்தான்.
