அசுரன் Part 31 42

“என்ன மகளே சொல்றே..என் பேரன் விரும்பும் பெண்ணை காத்தவராயன் அடைய போகிறானா..அதுவும் அவனோட மருமகளையே..ச்சீ..!நான் உடனே அதை தடுக்க பார்க்கிறேன்..”

“என் மகனுக்கு மட்டும் நான் தாயாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை நான் தடுக்க சொல்லி இருப்பேன்..தந்தையே..ஆனால் அவள் கற்பிழந்து உயிரை விட்டால் மட்டுமே ஆயிரக்கணக்கான பெண்களின் மானம் காக்கப்படும்..எனக்கு அவள் ஒருவள் மானத்தை விட ஆயிரக்கணக்கான பெண்களின் மானமே முக்கியம்..”

மதிவதனி மேலும் பேச தொடங்கினாள். “நான் என் மகனை காப்பாற்ற சொல்வது கூட காத்தவராயனை அழிக்கும் நோக்கமே அன்றி வேறில்லை தந்தையே..!உலகத்தின் நன்மைக்காக காத்தவராயனை அழிக்க மட்டுமே என்னோட பிறப்பு நிகழ்ந்து உள்ளது.அதை எப்படி செய்ய வேண்டுமென காலம் அவ்வப்போது உணர்த்தி கொண்டு இருக்கிறது..அதன்படியே நான் நடக்கிறேன்..இதில் என்னோட சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை..அதன்படியே தாங்களும் செய்ய வேண்டும்.”

மன்னர் சந்தேகத்துடன்”நான் செல்வதற்குள் ஒருவேளை விராடனை,காத்தவராயன் கொன்று விட்டால் என்ன செய்வது?மகளே..!”

“இல்லை தந்தையே..!காத்தவராயன், விராடனை கண்டவுடன் தன் மகன் என்று உணர்ந்து கொள்வான்..மகனை மறைத்தற்காக அவனுக்கு என் மேல் கோபம் பொங்கும்..ஆனால் அவன் மகனை கொல்ல மாட்டான்.ஆனால் சிறைப்படுத்துவான்..ஏனெனில் அவனுக்கு காமமே பிரதானம்..காத்தவராயனுக்கு விராடனின் காதலி விலாசினி பற்றிய தகவல்கள் ஏற்கனவே ஒருவன் மூலம் சென்று சேர்ந்து விட்டது..அவளை கொண்டு வர அந்த ஒருவன் மூலம் ரதத்தை காத்தவராயன் அனுப்பி உள்ளான்..விலாசினியை அடைய காத்தவராயனுக்கு விராடன் உதவி தேவை.தாங்கள் நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்..மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்..மேலும் இப்பிறவியில் நான் உங்களுக்கு நிறைய சங்கடம் கொடுத்து விட்டேன்..”

மன்னர் உடனே..”அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என் தங்கமே..!”என்று அவர் பேசும் பொழுது குரல் கம்மியது.

“இல்லை தந்தையே..!நான் அறிவேன்.. நான் மறுபிறப்பு எடுக்கும் பொழுது மீண்டும் உங்கள் மகளாக தான் பிறப்பேன்.அப்பிறப்பில் நான் உங்களுக்கு சிறந்த மகளாக,உங்கள் பேச்சை மீறாத மகளாக இருப்பேன்.அப்பிறப்பில் தங்களை தவிர எனக்கு வேறு யாரும் முக்கியம் இல்லை..”

“மதி..!என் மகளே..உன் வாக்கே எனக்கு சாசனம்..நீ சொன்னபடியே நான் செய்கிறேன்..”

மன்னர் காலம்

மாயமலை சென்ற ஆரா மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தான்.

“வெற்றி..வெற்றி…!போன காரியம் வெற்றி கனகா..!நானும் பயந்துட்டே தான் போனேன்..ஆனா காத்தவராயன் ரொம்ப நல்லவன்..இந்த அக்ரூரர் சொன்ன மாதிரி எல்லாம் கெட்டவன் கிடையாது..நம் பிரச்சினை எல்லாம் இன்றோடு தீர்ந்தது,இங்க பாரு..”என பொற்காசுகளை அவளிடம் கொட்டினான்..

“என்னய்யா இது..இம்புட்டு காசு..”

“காத்தவராயன் தான் கொடுத்தான்..இது மட்டுமல்ல இந்த பொன்னமராவதி எல்லையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சப்த கன்னியர் சிலைகளை மட்டும் நான் அகற்றி கொடுத்தால் போதும், இந்த பொன்னமராவதி ராஜ்ஜியத்திற்கு மன்னராக என்னை ஆக்குவதாக காத்தவராயன் உறுதி அளித்து உள்ளான்…”என்று அவன் மகிழ்ச்சியில் குதிக்க,

கனகாவுக்கு அந்த பொற்காசுகளை பார்த்ததும் கண்களில் பேராசை கொழுந்து விட்டெரிந்தது.இருந்தாலும் மனதின் ஓரம் பயம் இருந்தது.

“யோவ்…!இம்புட்டு பொற்காசு கொடுத்து விட்டு இருக்கான்.கண்டிப்பா எந்த அனுகூலம் இல்லாம யாரும் இந்த அளவு பொன்,பொருள் தர மாட்டாங்க..நம்மகிட்ட பெருசா எதுவோ அவன் பார்க்கிறான்..”

“அது தான் சொன்னேனேடி..அவனுக்கு இந்த பொன்னமராவதியில் இருக்கும் பெண்கள் தான் தேவை..அதை அடைய தடையா இருக்கும் சப்த கன்னியர்கள் சிலைகளை மட்டும் அகற்றி கொடுத்தால் போதும்…நமக்கு இந்த ராஜ்ஜியத்தை ஆள வழி செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்து உள்ளான்.”

“இருந்தாலும்..நம்ம கூட இருப்பவர்களுக்கு துரோகம் செய்வதை நினைத்தால் தான் மனசு கொஞ்சம் உறுத்தலா இருக்கு..”

“அடி போடி பைத்தியக்காரி,நீ இந்த நாட்டின் அரசியாக ஆக விரும்பறீயா.இல்லை காலம் முழுக்க இப்படியே இருக்க விரும்பறீயா”

“இல்லை நான் அரசியாக தான் விரும்பறேன்..ஆனா இந்த அரசி ஆவதற்கு ராஜகளை வேணும் என்று சொல்வாங்களே..!அது என்னிடம் இல்லையே..”கனகா வருத்தமுடன் கூற,

ஆரா சிரித்து கொண்டே”அட மண்டு… மண்டு..!காசு,பணம் வந்தா எல்லாம் தானா வந்து விடும்டி.”

கனகாவையும் பேராசை அவள் மனதை மாற்றியது.”சரிய்யா..!இப்போ நான் என்ன செய்யனும் அதை சொல்லு..”

“அப்படி கேளுடி என் ராசாத்தி…முதல் வேலையாக என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற,மாயமலைக்கு விலாசினியை கூட்டி வர எனக்கு ரதம் கொடுத்து அனுப்பி இருக்கார் காத்தவராயன்..அதுக்கு நீயும்,நானும் சேர்ந்து போய் விலாசினியை மாயமலைக்கு கூப்பிடனும்”