கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

“மீனா … சீனு என் ஃப்ரெண்ட்.. அவன் கண்டவன் இல்லே; இதை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கிட்டு பேசு.. அவனை நான் தான் வரச்சொன்னேன்; நீ எதுக்கு இப்ப தேவையில்லாம அவனை ரப்சர் பண்றே?

“மீனா குட்டி… ப்ளீஸ் .. இன்னைக்கு ஒரு நாளைக்கு கண்டுக்காதே; தப்பு நடந்து போச்சு; இனிமே இந்த பார்ட்டிக்கெல்லாம் சத்தியமா போக மாட்டேன்; மெதுவா பேசும்மா… நான் என்னா இந்த வீட்டுல கண்டவனா…?” சீனு குழைந்து கொண்டே அவளை நோக்கித் தன் கைகளை விளையாட்டாகக் கூப்பினான்.

“டேய் நீ என்னை குட்டி கிட்டின்னுல்லாம் கூப்பிட வேண்டிய அவசியமில்லே? குடிகாரன் பேச்சு; விடிஞ்சாப் போச்சு; உன் பேச்சைத் தண்ணி மேலத்தான் எழுதி வெக்கணும்..” மீனா மீண்டும் வெடித்தாள்.

“சாரி மீனா நீ கோபமாயிருக்கே … நான் உன்னை இனிமே குட்டின்னு கூப்பிடமாட்டேன் … பெரிசுன்னு கூப்பிடட்டா? சீனு தன் சென்ஸ் ஆஃப் ஹுயூமரை துணைக்கு அழைத்தான்.

“நீ என் கிட்ட பேசாம இருந்தினாலே அதுவே ஒரு பெரிய புண்ணியம் … உன்னைப் பாத்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது!”

“மீனா .. விடுடி… அவன் கிட்ட சும்மா விளையாடதடி; சீனு பசியோட வந்திருக்கான் … நானும் இன்னும் சாப்பிடலை … ஆளுக்கு ரெண்டு தோசை சூடா ஊத்திக்குடேன்… சாயங்காலம் செஞ்ச பஜ்ஜி இருந்தா அதையும் கொண்டாடி; தொட்டுக்க சின்ன வெங்காயம் போட்டு, தேங்காய் அரைச்சு ஊத்தி, ஹோட்டல் சாம்பார் வெச்சிருக்கேன்னு அம்மா சொன்னாங்க” செல்வா தன் டிமாண்டை நேரம் பார்த்து அவள் முன்னால் வைத்தான்.

“நான் என்னா இவன் பொண்டாட்டியா? இவன் என்னா என் கழுத்துல தாலியா கட்டியிருக்கான்? இவன் குடிச்சுட்டு நேரம் கெட்ட நேரத்துல நம்ம வீட்டுக்கு வருவான்; இவனுக்கு நான் சுட சுட தோசை வாத்துப் போடறதுக்கு? பார்ட்டி குடுத்தவன் தோசை வாங்கிக் குடுக்கலையா? நீ ஒரு குடிகாரன் கூட சேர்ந்துக்கிட்டு அவனுக்கு வக்காலத்து வாங்கறே? மீனா படபடவென் வேகமாக பொரிந்துவிட்டு, தன் பின்னலின் முனையை திருகிக்கொண்டு நின்றாள். அவள் கைகள் இலேசாக நடுங்கி, அவள் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

“மீனா … போதும் நிறுத்துடி … சீனு என் ஃப்ரெண்டு; அவன் எப்ப வேணா என் வீட்டுக்குள்ள வருவான். போவான்; நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; நீ இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசறே; எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்கு; சொல்லிட்டேன் நான்; அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் …” செல்வாவுக்கு தன் தங்கை மீது எரிச்சலுடன் கோபமும் பொங்கியது.

“உன் ஃப்ரெண்டுன்னு நீ தானே சொல்றே? நீதானே வரச்சொன்னே? அப்ப நீ தோசையாவது சுட்டு குடு; சோறாவது ஆக்கிப் போடு; என்னை ஏன் உன் ஆசை பிரண்டுக்கு தோசை சுட்டு குடுக்க சொல்றே?” அவள் தன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள்.

கோபத்தில் எரிச்சலுடன் தன் வாயில் வந்ததை, கன்னாபின்னாவென யோசிக்காமல் வார்த்தைகளாக வீசிய மீனா, சட்டென தான் பேசுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள். எனக்கு சீனு மேல அவன் குடிச்சிட்டு வந்திருக்கானேன்னு கோபம்; அது வாஸ்தவம்தான்; அவன் அம்மா எப்படி பயந்து போய் போன் பண்ணாங்க? அவங்க ஏன் இப்படி கஷ்டப்படணுங்கற ஆதங்கம் எனக்கு இருக்கு? அதுவம் வாஸ்தவம்தான். ஆனா
“நான் என்ன இவனுக்கு பெண்டாட்டியா, இவன் என்னா எனக்கு தாலி கட்டியிருக்கானான்னு” ஒரு வார்த்தையை ஏன் நடுவுலே பேசினேன்?

என் வாய்லேருந்து எதனால இந்த வார்த்தை இப்ப வந்தது? என் மனசுக்குள்ள என்ன இருக்கு?மீனா தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். அவளுக்கு தன் மனசு சற்றே இறுகி, நெகிழ்ந்து, மீண்டும் இறுகுவதைப் போலிருந்தது. எனக்கேத் தெரியாம, என்கிட்ட சொல்லாம, என் மனசுக்குள்ள இந்த பாவிப்பய சீனு நுழைஞ்சுட்டானா? எப்ப இவன் நுழைஞ்சான்? என் கனவுல கொஞ்ச நாளா ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வந்து, மீனு, மீனுன்னு சுத்தி சுத்தி வர்றானே; அவன் இவன் தானா? பேதை மீனா தன் மனசுக்குள் விடையைத் தேடினாள்.

மீனாவின் கொதிப்பான வார்த்தைகளைக் கேட்டதும், செல்வாவும், சீனுவும் ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக்கொண்டார்கள். இருவருக்குமே, இன்று மீனாவின் பேச்சில் இருக்கும் ஒரு வித்தியாசமான தொனி, அவள் பேச்சில் இதுவரை இல்லாத ஒரு உருமாறிய உணர்ச்சி, நெருப்பான வார்த்தைகளாக வெளிப்படுவதை, திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மீனாவிடம் இதுவரைக்கும் கண்டிராத ஒரு தனித்துவம் இன்னைக்குத் தெரியுதே? அவள் இயல்புக்கு மாறான, ஏதோ ஒரு உரிமையை, அவள் சீனுவின் மீது நிலை நாட்ட விரும்புகிறாள் என்பது இலேசாக புரிய வர, அது என்னவென்று புரியாமல் அவர்கள் மனதுக்குள் ஆச்சரியப்பட்டார்கள். உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்காக மீனா, சீனுவிடம் வலுவில் சென்று அவனை சண்டைக்கு இழுப்பது சகஜம் தான் என்றாலும், இன்னைக்கு அவள் பேசற தோரனையே புதுசா இருக்கே? மீனாவை இன்னைக்கு புரிஞ்சுக்கவே முடியலியே? அவ என்ன சொல்ல விரும்பறா?

சீனு அவ்வப்போது தண்ணி அடிப்பது மீனாவுக்கு தெரிந்த விஷயம் தானே? தண்ணி அடிச்சா சத்தம் போடாம, சீனு இங்க மாடி ரூம்ல வந்து படுத்துக்கறது ஒரு புது விஷயம் இல்லையே? ஆனா இந்த காரணத்துக்காக இன்னைக்கு சீனுவை மீனா என் இந்த காய்ச்சு காய்ச்சறா? அவர்கள் இருவருமே சற்றே அதிர்ந்துதான் போயிருந்தார்கள்.

செல்வா யோசிக்க ஆரம்பித்தான். மீனாவுக்கு என்ன பிரச்சனை? யார் மேல இருக்கற கோவத்தை மீனா இவன் மேல காட்டறா? அடிக்கடி, மீனாவும், சீனுவும் தேவையில்லாம ஏதோ ஒரு காரணத்தை வெச்சுக்கிட்டு தங்களுக்குள்ள சண்டை போட்டுக்குவாங்க; இது இந்த வீட்டுல ஒரு சாதாரண விஷயமா ஆகிப் போச்சு; வீட்டுல இருக்கற யாரும் இதை சீரியஸா எடுத்துக்கறது இல்லே?

விளையாட்டா பேச்சை ஆரம்பிப்பாங்க; அது எப்பவும் வெனையிலத்தான் போய் முடியும்; மீனா வழக்கமா சண்டை முடிஞ்சதும், மனசுல கோபத்தோட முறுக்கிட்டு இருப்பா; ஒரு வாரம் சீனுவைப் பாத்தாலும், பாக்காத மாதிரி மூஞ்சை திருப்பிக்குவா. இந்த வெக்கம் கெட்ட சீனுதான், ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி, கொழையடிச்சி, மீனாக்கிட்ட ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டுப் போய், தன் நட்ப்பை, சினேகிதத்தை ரீஜார்ஜ் பண்ணிக்குவான்.

ஆனா இன்னைக்கு இவங்களுக்குள்ள நடக்கறது வழக்கமான சண்டை மாதிரி தெரியலையே? மீனா என்னைக்குமே இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு, கண்ணு கலங்கி, சீனுகிட்ட இந்த மாதிரி ஒரு சீன் காமிச்சதில்லையே? சீனுவும், இன்று ஏதும் பேசாமல் மீனாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவன் மனதிலும் எழுந்து கொண்டிருந்தது.