கண்ணாமூச்சி 2 58

என்று திரும்ப திரும்ப பாடியவாறே கிறுகிறுவென சுழலுவார்கள்..!! தலை சுற்றலை தாக்கு பிடிக்கமுடியாமல் தரையில் சரிந்து.. மல்லிகைச் சிதறலாய் மூவரும் வெள்ளைச் சிரிப்பை சிந்துவார்கள்..!! ஆதிராவுக்கு அப்போது சிபி மீது ஒரு சினேக உணர்வு பிறக்கும்..!!

அவனது பெண்மைத்தனமான வட்ட முகத்தில்.. அரும்பு மீசை வளர ஆரம்பித்த சமயத்தில்.. அவனிடம் மிளிர்ந்திட்ட அந்த வசீகரம்.. ஆதிராவின் மனதை சொக்கிப்போக வைக்கும்..!! பட்டப் படிப்புக்கென சிபி வெளியூர் பயணிக்கையில்.. அவனுக்கு அருகிலேயே இருந்திட முடியாதா என்பது போல.. இவளுக்குள் ஒரு ஏக்க உணர்வு எழும்..!! பரீட்சை விடுமுறைக்கென அவன் அகழி திரும்பியிருக்கையில்.. அவனுக்கு அருகிருக்க இவளுக்கு வாய்ப்பிருந்தும்.. இயல்பாக நடந்திட முடியாத மாதிரியாய் ஒருவித வெட்க உணர்வு..!!

இப்படி எல்லாவித உணர்வுகளும் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து.. அவள் வளர வளர, அந்த உணர்வுகளும் அவளுடனே வளர்ந்து.. அவள் பருவம் எய்திய காலத்தில் ஒரு அசுர உருவம் கொண்டு அவளுக்குள் நின்றது.. அந்த உருவத்திற்கு காதல் என்றே நாம் பெயரிட வேண்டும்..!! சிபியிடம் இதுவரை வெளிப்படையாக சொல்லாவிடிலும்.. சிறுவயதில் இருந்தே அவன் மீதான காதலை அவள் வளர்த்து வந்தது என்னவோ நிஜமான நிஜம்..!!

அந்த காதலால்தான்.. நினைவில் இல்லையென்றாலும், அவனுடனான திருமணத்தை அவளால் இனியதொரு அதிர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது..!! அதே காதலால்தான்.. மருத்துவமனையில் இருந்து திரும்பிய அன்றைய இரவில்.. இருவரும் ஒருபடுக்கையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த சமயத்தில்.. தயக்கத்துடன் அவன் முதலில் இவளது கை பற்றிக் கொள்ள.. தானாகவே இவள் பிறகு அவனது மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

ஆனால்.. தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை போல.. தங்கையின் விஷயத்தை அவ்வளவு எளிதாக ஆதிராவால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!! காலில் தைத்த முள், நடக்க நடக்க இன்னும் ஆழமாக உள்ளிறங்குமே.. அதேமாதிரி.. அந்த விஷயம் நாளாக நாளாக அவளுடைய புத்தியில் ஆழமாக ஆணி திருகிக் கொண்டிருந்தது..!!

14

“தா..தாமிராக்கு என்னம்மா ஆச்சு.. சொல்லும்மா..!!” தவிப்புடன் தாயிடம் கேட்டாள் ஆதிரா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில்..!!

“எ..என்னாச்சுன்னு தெரியலடா.. காணாம போயிட்டா..!! எங்க போனான்னே தெரியாம.. மாயமா மறைஞ்சு போயிட்டா..!!”

“என்னம்மா சொல்ற நீ..?? எ..எப்படி.. எப்படி திடீர்னு காணாம போவா..??”

ஆதிராவின் கேள்விக்கு பூவள்ளியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.. ஆதங்கத்துடன் இவளையே ஒரு பார்வை பார்த்தாள்.. அப்படியே கண்களை சுருக்கி நெற்றியை பிசைந்தாள்.. உள்ளத்தில் எழுந்த துக்கத்தை உதடுகள் கடித்து அடக்க முயன்றாள்.. அதையும் மீறி அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பியது..!!

“சொல்லும்மா.. என்ன நடந்துச்சுன்னு சொன்னாத்தான எனக்கும் தெரியும்..??” ஆதிரா பொறுமையில்லாமல் கேட்க,

“குறிஞ்சி அவளை கொண்டு போய்ட்டாடி.. போதுமா..??” பூவள்ளி வெடுக்கென்று சொன்னாள்.

குறிஞ்சி என்ற பெயரை கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் குப்பென்று ஒரு திகைப்பு.. அம்மாவின் முகத்தையே மிரட்சியான விழிகளுடன் பார்த்தாள்.. குரல் தெளிவில்லாமல் குழறலாக கேட்டாள்..!!

“கு..குறிஞ்சியா..????”

“ஆமாம்..!! நம்ம வனக்கொடியே கண்ணால பாத்திருக்கா.. அவதான் உன் தங்கச்சியை கடைசியா பாத்தவ..!! அங்க தொட்டு இங்க தொட்டு.. கடைசில நம்ம தாமிராவையும்..!!”

கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சொன்னாள் பூவள்ளி..!! வனக்கொடி என்பது, அகழியில் அவர்களுடைய வீட்டில் பணிபுரியும் ஐம்பது வயது பணிப்பெண்.. சிபி, ஆதிரா, தாமிரா என மூவரையும் சிறு வயதில் இருந்தே கவனித்துக் கொண்டவள்..!!

“அம்மா..!!”

“சொல்லுடா..!!

“எ..என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. ப்ளீஸ்..!! வனக்கொடி என்ன பாத்தாங்க..??”

ஆதிரா அவ்வாறு கேட்கவும், பூவள்ளி நீளமாக ஒரு பெருமூச்சை சிந்தினாள்.. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.. பிறகு தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தாள்..!! அவள் பேச பேச.. ஆதிரா முகத்தில் பலவித உணர்ச்சிகளுடன்.. அவற்றையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டாள்..!!

பூவள்ளி பேசி ஓய்ந்த பிறகும்.. அவள் சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி முடித்த பிறகும்.. ஆதிராவின் மனம் அவள் சொன்ன விஷயங்களையே நெடுநேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது..!! நம்புவதற்கே கடினமான ஒரு சில விஷயங்கள்.. நானும் இதைத்தான் இத்தனை நாளாய் நம்பியிருந்தேனா என்று அவளுக்குள் ஒரு கேள்வி வேறு..!! எந்த ஒரு முடிவுக்கும் தெளிவாக அவளால் வர இயலவில்லை..!!

“வனக்கொடி சொன்னதை கேட்டுட்டு நாம சும்மா இருந்துட்டோமா.. தாமிராவை தேடி கண்டுபிடிக்க எதுவும் பண்ணலயா..??”

“என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற..??”